full screen background image

படமாகிறது ஷகிலாவின் வாழ்க்கைக் கதை..!

படமாகிறது ஷகிலாவின் வாழ்க்கைக் கதை..!

ஷகிலா. இந்தப் பெயருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த மவுசே தனி. சிறு வயதிலேயே உழைத்து சாப்பிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த குடும்பத்தில் பிறந்தவர். தனது 13-வது வயதிலேயே ‘லயனம்’ படத்தில் தனது சகோதரி ஷீத்தலுடன் அறிமுகமானார். வயதை மீறிய உடற்கட்டும், கவர்ச்சியான முகமும் சேர்ந்து கொள்ள.. பாதையை மாற்றிக் காட்டிவிட்டார்கள் சில இயக்குநர்கள்.

சாப்ட்போர்னோ எனப்படும் பலான படங்களில் அரசியாகத் திகழ்ந்தவர்.. ஒரு கட்டத்தில் மலையாளப் படவுலகில் ஒரு வருடத்தில் மிக அதிகப் படங்களில் நடித்த நடிகை என்ற பெயரும் ஷகீலாவிற்கே கிடைத்தது. மம்முட்டி, மோகன்லாலின் படங்களுக்கே இப்படியொரு ஓப்பனிங் கிடைக்கவில்லை. வசூல் வரவில்லை என்று தயாரிப்பாளரும், கேரள திரையுலகத்தினரும் அசந்து போனார்கள்.

ஷகிலாவின் நடிப்பில் வெளியான இது போன்ற படங்களின் எண்ணிக்கை 78 என்கிறார் ஒரு விநியோகஸ்தர். ஒவ்வொரு ஊரிலும் இதற்காகவே இருந்த பழைய தகரக் கொட்டகை தியேட்டர்கள் டீசண்டான தியேட்டர்களில் கிடைக்கும் வசூலைவிட அதிகமாகவே ஷகிலாவால் அள்ளின. சின்ன விநியோகஸ்தர்களுக்கு கிடைத்த அமுதசுரபி ஷகிலாதான்.. 

இடையிடையே தமிழ்ப் படங்களில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு இவர்களுடன் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருந்தார்.  எல்லாவற்றுக்கும் ஒரு ஓய்வு இருக்கிறதே..!

முதல் எச்சரிக்கை மணியை மலையாளத் திரையுலகம் அடித்தது. இனிமேல் ஷகிலா படங்களை திரையிடக் கூடாது என்று கேரள தியேட்டர்களுக்கு தடை போட.. கூடவே ஷகிலா நடிக்கும் படங்களுக்கு கேரள பிலிம் சேம்பரும் சேர்ந்து கொண்டு தடையை விதிக்க.. அன்றிலிருந்து அந்த பலான படங்களின் தயாரிப்பு காணாமலேயே போயின.

கால ஓட்டத்தில் வீட்டிலேயே இணையத்தில் இதனைவிட அழகான பலான படங்களே கிடைக்கின்றபோது எதற்கு தியேட்டர்கள் என்ற எண்ணத்தில் இந்த ரசிகர் கூட்டமும் குறையத் துவங்க.. இப்போது அந்த படங்களெல்லாம் எங்கே என்று தேட வேண்டியிருக்கிறது.. பல ஊர்களில் பல விநியோகஸ்தர்களின் அலுவலகங்களில் தகரப் பெட்டிக்குள் தூங்கிக்கொண்டிருக்கிறது ஷகிலா நடித்த படங்களின் ரீல்கள்.. இனிமேல் எடைக்கு எடை போடுவதைத் தவிர வேறு வழியில்லைதான்..!

ஷகிலா இதன் பின்பு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக சில படங்களில் நடித்து வருகிறார். அவருக்குத் துணையாக இருந்த அவரது தாயாரும், சில ஆண்டுகளுக்கு முன்பாக காலமாகிவிட ஷகிலா தனிமரமாகிவிட்டார். எவ்வளவோ சம்பாதித்தும் சொந்த வாழ்க்கையில் அவரை நம்ப வைத்து ஏமாற்றியவர்கள் நிறைய பேர்.. கடைசியாக ஒரு கட்சிப் பிரமுகர்கூட அவரை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி மீடியாக்களில் பேட்டியெல்லாம் கொடுத்தும், நம்பிக்கையளித்து.. கடைசியில் தனது குடும்பத்தினர் எதிர்ப்பதாகச் சொல்லி பின் வாங்கிவிட்டார்..

பெண் என்ற முறையில் ஷகிலா நிறையவே அவமானங்களையும், வன்முறைகளையும் சந்தித்திருக்கிறார். நடிகை என்ற முறையி்ல் ஏமாற்றங்களையும், இழப்புகளையும் சந்தித்திருக்கிறார். இதையெல்லாம் நினைத்துப் பார்த்தவர் ஏன் ஒரு நாம் ஒரு சுயசரிதை எழுதக் கூடாது என்று  நினைத்தவர் அதனைச் செயல்படுத்தியும்விட்டார்.. அடுத்த மாதம் கேரளாவில் ஷகிலாவின் சுயசரிதை மலையாளத்தில் வெளியாகிறது. தமிழில் இனிமேல்தான் வருமாம்..!

இந்தச் செய்தி வந்ததில் இருந்து திரையுலகில் பலருக்கும் தூக்கமிருக்க வாய்ப்பில்லை.. என்னென்ன எழுதி வைக்கப் போகிறாரோ..? யார், யாருடைய முகமூடியெல்லாம் கிழியப் போகிறதோ தெரியவி்ல்லை என்கிறார்கள்.. ஆனால் எதையும் சொல்ல மறுக்கும் ஷகிலா.. “புத்தகத்தைப் படிச்சுத் தெரிஞ்சுக்குங்க…” என்கிறார் அமைதியாக..

இதன் அடுத்தக் கட்டத்தையும் உடனேயே ஆரம்பித்துவிட்டார் ஷகிலா. இவருடைய சுயசரிதையை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் சினிமாவாக எடுக்கப் போகிறாராம்..

ஹிந்தியிலும் டர்ட்டி பிக்சர் பாணியில் பெரிய ஹீரோயினை வைத்து எடுக்க முயற்சிகள் எடுத்து வருவதாகத் தெரிவிக்கிறார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்த மொழி திரைப்படங்களை பாபு.கே.திருமலை என்ற இயக்குநர் இயக்கவிருக்கிறார். தற்போது இந்தப் பட தயாரிப்பு சம்பந்தமாக ஒரு குளுகுளு நகரத்தில் தீவிர டிஸ்கஷனில் இருக்கிறார் ஷகிலா.அடுத்த வாரம் சென்னை வந்தவுடன் அறிவிப்பு வெளியாகும் என்கிறார் இயக்குநர்..!

‘வாம்மா மின்னலு’ என்று சொல்லி பத்திரிகையாளர்கள் ஷகிலாவை வரவேற்கக் காத்திருக்கிறார்கள்…! அவர்களுக்குத்தான் நிறைய வேலைகள் காத்திருக்கிறதே..!!!

Our Score