‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, தனது இரண்டாவது படமாக ‘சேது பூமி’ படத்தை இயக்கியுள்ளார்.
ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரிக்கும் இப்படத்தில் தமன் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தொட்டால் தொடரும்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக ‘காடு’ படத்தில் நடித்த சம்ஸ்கிருதி நடித்திருக்கிறார்.
இவர்களுடன் சிங்கம் புலி, ராஜலிங்கம், ஜுனியர் பாலையா, சேரன் ராஜ், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், தவசி மற்றும் பலர் நடிக்க, முக்கிய வேடம் ஒன்றில் இயக்குனர் கேந்திரன் முனியசாமியும் நடித்துள்ளார்.
ராமநாதபுரம் பகுதிகளைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு எஸ்.முத்துராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். பாரதி – மோனீஸ் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். நந்தலாலா பாடல்கள் எழுதியுள்ளார். தினா நடனம் அமைத்துள்ளார். நாக் அவுட் நந்தா சண்டைப் பயிற்சி அளிக்க, ஜெயசீலன் கலையை நிர்மாணித்துள்ளார். சிவக்குமார் தயாரிப்பு மேற்பார்வையைக் கவனித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி.
சேது பூமி படம் குறித்து பேசிய இயக்குனர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, “சேது மன்னர்கள் வாழ்ந்த பூமியான ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளின் மக்களைப் பற்றி சொல்வதால், இப்படத்திற்கு ‘சேது பூமி’ என்று தலைப்பு வைத்தேன்.
பொதுவாக ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதி மக்களிடம் வறுமையும், கோபமும்தான் இருக்கும், அந்த கோபத்திற்கான நியாயம், அவர்களுடைய வாழ்க்கை முறை ஆகியவற்றை இப்படத்தின் மூலம் விவரித்திருக்கிறேன்.
மனிதன் தனது உறவுகளையும் உணர்வுகளையும் கொஞ்சம் வேகமாகவே மறந்து வருவது இந்த சமூகத்திற்கு மிகப் பெரும் கேடு என்று கூறும் படமே இந்த ‘சேது பூமி’ திரைப்படம்.
இந்த ‘சேது பூமி’, படத்தில் ஆக்சன் காட்சிகளும், பாடல் காட்சிகளும் மிக, மிக வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மற்ற படங்களில் வருவதுபோல் இல்லாமல் உண்மையான சண்டையாக இருக்க வேண்டும் என்று சண்டை பயிற்சியாளர் நாக் அவுட் நந்தா மாஸ்டரிடம் கூறினேன்.
ஓரு போலீஸ்காரன் பத்து பேரை வைத்து சண்டை போட கூடாது என்று எனது கருத்து அப்படி செய்தால் நன்றாக இருக்காது. போலீஸ்காரன் சட்டத்தை மீறி இயங்கக் கூடாது என்பது என் கருத்து.
ஹீரோவின் மன நிலையில் பாத்தால், அவன் ஒரு அன்பான சூழ்நிலைல வாழ்ந்த பையன்.. வில்லனும் ஹீரோவும் சண்டை. போடும் காட்சியைப் படமாக்கும் நேரத்தில் அது தொடர்பாக நிஜமாகவே எனக்கும் ஸ்டண்ட் மாஸ்டருக்குமே சண்டை வந்துவிட்டது.
நான் ஒண்ணு சொல்ல… அவர் ஒண்ணு சொல்ல… எங்கள் ரெண்டு பேருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் உருவானது. ஆனாலும் எங்கள் இருவரின் கோபமும் நியாயமானதுதான். காரணம், அந்த சண்டை காட்சி சிறப்பாக வர வேண்டும் என்கிற எங்களின் உண்மையான எண்ணம்தான்.
முதல் ரெண்டு ஷாட் எடுக்குறவரைக்கும் எனக்கு பதட்டமாகத்தான் இருந்துச்சு. ஆனால், மாஸ்டர் நாக் அவுட் நந்தா ரெண்டு ஷாட்டுகளை படமாக்கிக் காண்பித்த பிறகு, நான் எதிர்பார்த்த்து போல வந்துவிட்டதே என்கிற சந்தோஷத்துல நான் அமைதி ஆகிவிட்டேன்.
இந்த சண்டை காட்சியில் தமன் மற்றும் ராஜலிங்கம் இருவரும் தந்த ஒத்துழைப்பை பார்த்து, பட குழுவினர் இருவரும் உண்மையாகவே சண்டை போடகிறார்கள் என்று நினைக்கிற அளவு ரொம்ப பிரமாதமா பண்ணியிருந்தாங்க.
ஒரு முறை தமன் ராஜாலிங்கத்தை அடிக்க, அவர் கீழே விழுந்தாரு, அப்போ அவர் தலைல அடிபட்டிருச்சு. நான் மற்றும் என் பட குழுவினர் அனைவரும் பயந்து போனோம். ஆனால் பத்து நிமிடங்கள் கழித்து ஃபைட் மாஸ்டர் ‘ஷாட் ரெடி’ என்று சொன்னபோது, அவர்கள் திரும்பவும் உடனேயே நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த அளவுக்கு அவர்கள் இருவரின் ஒத்துழைப்பும் எங்களுக்கு மிகவும் பக்க பலமா இருந்தது. படக் குழுவினர் அனைவருடைய உழைப்பாலும் சண்டைக் காட்சிகள் மக்களிடையே பேசும் வகையில் உருவாகியுள்ளது.
இதேபோல் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ஹிட் ரகங்கள்தான். அதிலும், ‘சண்டாளி…’ என்ற பாடல் மெஹா ஹிட் என்று சொல்லலாம்.
தமிழ் சினிமாவின் வழக்கமான பாடல்களை போல் இல்லாமல் கதாநாயகன் தான் காதலிக்கும் பெண்ணை இப்போதே தன் மனைவியாக நினைத்து பாடுவதைப் போன்று பாடல் வேண்டும் என்று கவிஞர் நந்தலாலாவிடம் சொன்னேன், அவரும் அற்புதமாக, கிராமத்து வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி பாடலை எழுதி கொடுத்தார்.
இசையமைப்பாளர்கள் இந்தப் பாடலுக்கு இசையமைக்க எடுத்து கொண்ட நேரம் வெறும் இரண்டே மணி நேரங்கள்தான். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர்கள் மிக வேகமாக இசையமைத்தது கொடுத்தார்கள்.
எனது முதல் படமான ‘அய்யனில்’ நடனம் அமைத்தது தினா மாஸ்டர்தான். அந்த நட்பின் தொடர்ச்சியாக, எனது இரண்டாவது படமான இந்த ‘சேது பூமி’க்கும் தினா மாஸ்டர்தான் நடனம் அமைத்திருக்கிறார்.
நான் இந்தப் பாடல் பற்றி சொன்னவுடன், பாடலுக்கு ஆடிய நடிகை சோனாவை வைத்து, வித்தியாசமான முறையில் நடனம் அமைத்து தந்திருக்கிறார். இப்போது வரும் பாடல்களிலெல்லாம் நிறைய ஷாட்டுகள் இருக்கும். ஆனால் இந்த ‘ஏண்டீ சண்டாளி’ பாடல் காட்சிகள் முழுவதையும் வெறும் ஆறே ஷாட்டுகளில் படமாக்கித் தந்திருக்கிறார் தினா மாஸ்டர். இதுவொரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.
இந்தப் படத்தின் ஹீரோவான தமன், வழக்கமான சினிமா ஹீரோவை போல நடனம் ஆட கூடாது என்று நான் முன்பேயே தினா மாஸ்டரிடம் நிபந்தனை விதித்தேன். ஒரு நன்கு படித்த பையன், கிராமத்தில் உள்ளவன்… எந்த அளவுக்கு ஆடுவானோ.. அந்த அளவுக்குத்தான் தமனை ஆட வைத்திருக்கிறார் தினா மாஸ்டர். இதை என்னுடைய ஒளிப்பதிவாளர் மிக அழகாக கேமராவில் பதிவு செய்தார்.. அப்படி உருவான இந்தப் பாடலும், பாடல் காட்சிகளும், ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..” என்கிறார் திடனமான நம்பிக்கையுடன்.