full screen background image

“ரசிகனின் கழுத்தை நெறித்து காசு பிடுங்கும் பெரிய நடிகர்கள்..” – கலைப்புலி சேகரன் குற்றச்சாட்டு..!

“ரசிகனின் கழுத்தை நெறித்து காசு பிடுங்கும் பெரிய நடிகர்கள்..” – கலைப்புலி சேகரன் குற்றச்சாட்டு..!

நேற்று நடைபெற்ற ‘மரணத்தின் ஜகடம்’ குறும்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், மற்றும் விநியோகஸ்தர் சங்கத்தின் முன்னாள் தலைவரான கலைப்புலி ஜி. சேகரன், “தியேட்டர்களில் நடக்கும் கட்டணக் கொள்ளைக்கு பெரிய ஹீரோக்களும் ஒரு காரணம்..” என்று குற்றம்சாட்டினார்.

சேகரன் பேசும் போது “இங்கே அமீர் வந்திருக்கிறார். அவர் மீது எனக்கு அன்பும், மதிப்பும் உண்டு. அவர் பெப்ஸியின் தலைவராக இருந்தபோது, அவர் ஒரு முனையில் இருந்தார். நான் ஒரு முனையில் இருந்தேன். எதுக்கு வம்பு என்று அவரை நான் சந்திப்பதில்லை. பேசுவதில்லை. தவிர்த்து வந்தேன். சங்கத்தில் இருப்பதில் உள்ள சங்கடம் அது. இது அவருக்கும் இருந்திருக்கும். என்ன காரணத்தாலோ இப்போது வெளியே வந்து விட்டார்.

இதுவும் நல்லதுதான்.. அங்கேயே இருந்தால் படம் இயக்க நேரமிருக்காது. சங்கத்தில் பஞ்சாயத்து செய்யும்போது பெரிய நடிகர்கள் நம்மை எதிரியாகவே பார்ப்பார்கள். அப்புறம் எப்படி நமக்கு கால்ஷீட் தருவார்கள்.?

நான் டிஜிட்டல் பிலிம் மேக்கர்சுக்கென்றே தனியாக ஒரு சங்கம் வைத்திருக்கிறேன். இப்போது சினிமாவே மாறிவிட்டது. ஒரு பக்கம் பெரிய படங்கள்.. 100 கோடி, 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படுபவை. இன்னொரு பக்கம் வெளியிட தியேட்டரே கிடைக்காத சின்ன படங்கள்.

காட்டாற்று வெள்ளத்தில் படமெடுப்பவர்கள் நடந்து போக வேண்டியிருக்கிறது. கடந்து மேலே வரும்போது அவர்களிடத்தில் மேலாடை மட்டுமின்றி உள்ளாடைகூட இருப்பதில்லை.

பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களுக்கு தியேட்டர்களில் பிளாக்கில் டிக்கெட்டை விற்கிறார்கள். நூறு ரூபாய், இருநூறு ரூபாய், முன்னூறு ரூபாய் என்று ஏழை ரசிகனின் கழுத்தை நெறித்து காசு பிடுங்குகிறார்கள். எல்லா திரையரங்குகளிலும் 3 நாளில், 4 நாளில் வசூலை அள்ளிவிட நினைக்கிறார்கள்.

பொது வாழ்க்கையில் நேர்மை பற்றி பேசும் நடிகர்களே டிக்கெட்டை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்தச் சொல்கிறார்கள். தங்கள் சம்பளத்தை 20 கோடி, 30, கோடி என்று உயர்த்திக் கொள்கிறார்கள். ரசிகனின் கழுத்தை நெறித்து காசு பிடுங்குகிறார்கள். இதைப் பற்றி வாய் திறப்பதே இல்லை. மனசாட்சியே அவர்களுக்கு இல்லை…” என்றார் சேகரன்.

Our Score