இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள திரைப்படம் ‘செய்! செய்யாதே!’
இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர்.
சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:
“இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள தமிழக ஆளுநர், தமிழரசு சுந்தரராஜன் அவர்களுக்கும் ஹெச். ராஜா அவர்களுக்கும் மேடையில் அமர்ந்துள்ள சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவையும், அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது. பல ஆண்டுகளாக இந்த இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே பயணித்து வருகின்றன. அதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.
நான் தயாரித்த ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் மதுரையில் இருக்கும் ஒரு பிரபல ரவுடியை மையமாகக் கொண்ட கதை அது.
ஆனால் இறுதியில் அந்த ரவுடி சினிமாவின் தாக்கத்தால் தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நடிகராக மாறுகிறார்.
ஒரு மனிதனின் கெட்ட பழக்கங்களைக்கூட மாற்றும் சக்தி கலைக்கும் குறிப்பாக சினிமாவுக்கும் இருக்கிறது என்பதைத்தான் அந்தப் படம் எடுத்துக் காட்டியது.
அதேபோல ஹெச். ராஜா அவர்களும் அரசியலில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். அவரது பேச்சுத் திறனும், செயல்பாடுகளும் அனைவருக்கும் தெரியும்.
இந்தப் படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று நம்புகிறேன். அதனால்தான் சினிமாவும், அரசியலும் தமிழகத்தில் எப்போதும் ஒன்றாகவே பயணிக்கின்றன என்று சொல்கிறேன்.
இந்தப் படத்தின் இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா அவர்கள் எம்.பி.பி.எஸ்., எம்.டி. படித்து உதவி பேராசிரியராக பணியாற்றியவர்.
பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று அங்கே மருத்துவராக உயர்ந்த நிலையில் இருந்தபோதும் சினிமா மீதான அவருடைய ஆர்வம் அவரை மீண்டும் இங்கே அழைத்து வந்து இந்தப் படத்தை இயக்க வைத்திருக்கிறது. அதுதான் சினிமாவின் ஈர்ப்பு.
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன. நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்களும், புதிய இயக்குநர்களும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அதுதான் கலை உலகத்தின் மீதான அவர்களின் காதலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
இந்தப் படத்தை இயக்கிய டாக்டர் எஸ். ராஜா அவர்களுக்கும், தயாரிப்பாளர் சுப்புலட்சுமி ஜெயராம் அவர்களுக்கும், படத் தொகுப்பாளர் ராஜா முகமது அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ‘செய்! செய்யாதே!’ திரைப்படம் வெற்றி பெற்று மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி… அனைவருக்கும் நன்றி.”
முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம். முதலில், இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்புக் குழுவினருமான ராஜா அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.
எங்களுடன் அரசியல் பயணத்தில் இருந்தவர், இன்று திரைத்துறையில் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.
பொதுவாக திரைத்துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அரசியலில் இருந்த ஒருவர் திரைத் துறைக்கு வந்து ஒரு சமூகப் பொறுப்புள்ள திரைப்படத்தை உருவாக்குவது மிகவும் பாராட்டத்தக்க விஷயம்.
மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக டாக்டர் சௌந்தரராஜன் அவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகள்.
மனதிற்கு நெருக்கமானவர்களைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பேசும்போது அதை மறந்துவிட்டேன். அதற்காகவும் அவர்களிடம் எனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் முழுவதும் மதுரையை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். மதுரையுடன் எனக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு.
எனது தந்தை எனக்கு ‘தமிழிசை’ என்று பெயர் வைத்ததுகூட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்தான். அதனால் மதுரை என்றாலே எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட பாசம் இருக்கிறது.
இப்படத்தில் நடித்திருக்கும் எங்கள் அண்ணன் ஆளுமை ராஜா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இந்தப் படத்தில் குரு விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். குறிப்பாக மருத்துவம் சார்ந்த ஒரு முக்கியமான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மருத்துவ விழிப்புணர்வு, சமூகப் பொறுப்பு மற்றும் நல்ல செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.”
இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா (M.D., USA) பேசியதாவது..,
“இந்தப் படத்தின் கதையை அக்கா தமிழிசை மிக அழகாக கூறிவிட்டார். இப்படம் மருத்துவ துறையை பற்றிய படம் அதோடு
இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளை இப்படம் பேசுகிறது. அதே நேரத்தில் பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் கடமையை பேசுகிறது.
இப்படத்திற்காக அமெரிக்காவில் இருந்து பலமுறை வந்து பல கஷ்டங்களோடு இப்படத்தை உருவாக்கியுள்ளேன்.
இப்படத்தில் என் மனைவி மகள் பாடியுள்ளனர். பலர் இப்படத்திற்காக உழைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பலர் நல்ல படைப்புகளுடன் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு சரியான வாய்ப்புகளைத் தந்து அந்த தமிழ் சினிமாவில் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்பது மட்டும்தான் எங்களது ஆசை.
இப்படத்தில் அண்ணன் ராஜா அவர்கள் மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் எனக்காக மட்டுமே இப்படத்தில் எந்த ஒரு சம்பளமும் வாங்காமல் நடித்துத் தந்தார்.
மிகச் சிறந்த உழைப்பைத் தந்திருக்கிறார். அவரைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். ஆச்சரியப்படுகிறேன். அவர் சிவாஜியைப் போல ஒரு அற்புதமான நடிப்பை இப்படத்தில் தந்திருக்கிறார்.
அவரை வைத்து ‘தேவர் மகன் பார்ட்-2’ எடுக்க வேண்டும் என்பது என் ஆசை. அது கண்டிப்பாக நிறைவேறும். இப்படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டுவீர்கள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார்.
தமிழக அரசியல் ஆளுமை ஹெச். ராஜா பேசியதாவது..,
“எனது உடல்நலக் குறைவின்போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் என் அருகில் இருந்து அளித்த ஆதரவு மிக முக்கியமானது.
எந்த ஒரு விஷயத்தையும் நாம் இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். இறைவன் அருளால் அறுவை சிகிச்சை முடிந்து வெறும் ஆறு மாதங்களிலேயே உங்கள் அனைவரின் மத்தியிலும் மீண்டும் வந்து பேசும் அளவிற்கு உடல் நலம் பெற்றுள்ளேன். இதற்காக இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் ராஜா அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட மறந்துவிட்டார்.
இந்த படத்தில் நடிகர்களுக்கு எந்தவித மேக்கப்பும் (Make-up) போடப்படவில்லை. முற்றிலும் இயல்பான தோற்றத்திலும், எளிய உடைகளிலும்தான் நடித்துள்ளோம். இயக்குநர் மற்றும் படக் குழுவினர் கூறியபடி நடித்துக் கொடுத்துவிட்டு வந்தோம்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு மிகவும் இயல்பான முறையில் இயக்குநர் டாக்டர் ராஜா , அவரது குழுவினர் மற்றும் தம்பி குரு ஆகியோர் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
வெறும் வியாபார அல்லது லாப நோக்கத்தை மட்டுமே முதன்மையாகக் கொள்ளாமல் நேர்த்தியாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
இதனால் இத்திரைப்படம் மக்களிடையே நிச்சயமாகப் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
இப்படம் மருத்துவ துறையில் பணியாற்றும் செவிலியர்கள் முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது. இப்படம் கண்டிப்பாக பெரிய வரவேற்பைப் பெறும் அனைவருக்கும் என் நன்றிகள்.
தமிழ் சினிமாவில் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை பொழுதுபோக்குடன் எடுத்துரைக்கும் படைப்புகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
அந்த வரிசையில், மருத்துவ விழிப்புணர்வு, மனித நேயம், குடும்ப மதிப்புகள், பொறுப்பான நிர்வாகம் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு சமூகச் செய்தியை வலியுறுத்தும் திரைப்படமாக ‘செய்! செய்யாதே!’ உருவாகியுள்ளது.
அரசியல் நாடகமும் சமூக மருத்துவ விழிப்புணர்வும் இணைந்த தனித்துவமான படைப்பாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக படக் குழுவினர் தெரிவித்தனர்.
ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் எஸ். ராஜா (M.D., USA) இயக்கி கதை மற்றும் திரைக்கதையையும் எழுதியுள்ளார். தயாரிப்பாளராக சுப்புலட்சுமி ஜெயராம் (கலிபோர்னியா, அமெரிக்கா) பணியாற்றியுள்ளார்.
இப்படத்தில் ஹெச். ராஜா தமிழ்நாடு முதலமைச்சராக சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டாக்டர் சந்திரபோஸ் கதாபாத்திரத்தில் டாக்டர் எஸ். ராஜா, டாக்டர் விஜய் கதாபாத்திரத்தில் குரு விஜய் நடித்துள்ளனர். மருத்துவ நெறிமுறைகள், பொறுப்பான சுகாதார சேவை மற்றும் மனித உயிரின் மதிப்பை வலியுறுத்தும் கதைக்களம் இப்படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப் பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், தவறான மருத்துவ தகவல்கள், குடும்ப உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பொறுப்பான வாழ்க்கைத் தேர்வுகள் போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளை இப்படம் பேசுகிறது.
அதே நேரத்தில் பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூகத்தின் கூட்டு பொறுப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) சான்றிதழ் பெற்றுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம், 2026 செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகர் – நடிகைகள்:
எச். ராஜா – தமிழ்நாடு முதலமைச்சர்
டாக்டர் எஸ். ராஜா – டாக்டர் சந்திரபோஸ்
குரு விஜய் – டாக்டர் விஜய்
தர்ஷினி ரெட்டி – டாக்டர் விஜயலட்சுமி
பிரதிக்ஷா மனோ பிரசாந்த் – திவ்யா (குழந்தை நட்சத்திரம்)
சிதம்பரம் PDK – தங்கதுரை
மௌனிகா ப்ரீத்தி V – டாக்டர் மௌனிகா
தபிதா குணரத்னே – டாக்டர் பிரியா
தொழில் நுட்பக் குழு:
தயாரிப்பு: ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர்: சுப்புலட்சுமி ஜெயராம்
இயக்கம் / கதை / திரைக்கதை: டாக்டர் எஸ். ராஜா (M.D., USA)
ஒளிப்பதிவு: வாசு பி. ராம்நாத்
படத் தொகுப்பு: ராஜா முகமது
இசை: டாக்டர் எஸ். ராஜா & ஹரிணி சுப்பு மியூசிக் டீம்
சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் கார்த்திக்
விநியோகம்: ஹரிணி சுப்பு இன்டர்நேஷனல் ஃபிலிம் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ்









