full screen background image

“சீமராஜாவின் வெற்றியைக் காணக் காத்திருக்கிறேன்…” – இயக்குநர் பொன்ராம்..!

“சீமராஜாவின் வெற்றியைக் காணக் காத்திருக்கிறேன்…” – இயக்குநர் பொன்ராம்..!

ஒரு சாதாரண வெற்றியே நம் தோள்களில் மிகப் பெரிய பொறுப்புகளை ஏற்றி விடும். அப்படி இருக்கையில் ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என அடுத்தடுத்து இரண்டு பிளாக் பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்த இயக்குநர் பொன்ராமின் தோள்களில் தவிர்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய பொறுப்புகள் வந்து சேர்ந்திருக்கின்றன.

தன்னுடைய இயக்கத்தில் அடுத்து வெளிவரக் காத்திருக்கும் ‘சீமராஜா’வும் நிச்சயம் வெற்றியடையும் என்ற உறுதியில் இருக்கும் பொன்ராம், அதே சமயம் ரசிகர்களின் வரவேற்பை காண்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார்.

‘சீமராஜா’ படம் பற்றி இயக்குநர் பொன்ராம் கூறும்போது,  “முழு படக் குழுவும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் உணர்வு இருக்கிறது. ஒரு மாணவர் தேர்வு முடிவுக்குக் காத்திருப்பதை போலவே, நானும்  இந்தப் படத்தின் வெற்றியைக் காணக் காத்திருக்கிறேன்.

இந்த ‘சீமராஜா’ படத்தில் எங்களது முந்தைய படங்களில் இருந்து நாங்கள் சிறிது சிறிதாக அனைத்து விஷயங்களிலும் அதிகமாகவே செய்திருக்கிறோம். அதற்காக எங்களுடைய வழக்கமான பொழுது போக்கு விஷயங்களை ஒதுக்கி விடவில்லை. பொழுது போக்குதான் பின்னணியாக இருக்கும், ஆனால் சில மாற்றங்களை கொண்டிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது..” என்கிறார் இயக்குநர் பொன்ராம். 

நடிகர்கள் மற்றும் படக் குழுவினரை பற்றி பேசும்போது பொன்ராம் பேசும்போது, “படப்பிடிப்பை  தொடங்குவதற்கு முன்பே சமந்தா தனது கதாபாத்திரத்திற்காக, முழு முயற்சியில் ஈடுபட்டார். அவர் சிலம்பம் பயிற்சி பெற்று, கேமராவின் முன்பு அதை நேர்த்தியாக செய்து காட்டினார். சூரி நிச்சயமாக எங்கள் குழுவில் மிகப் பெரிய பலம். ரசிகர்களை விலா நோக சிரிக்க வைப்பார். 

அனைவரும் ‘சீமராஜா’ திரைப்படம் ஒரு திருவிழா உணர்வை தருவதாக சொல்வதை கேட்பதில் மகிழ்ச்சி. அதற்கு முக்கியமான காரணம், தொழில் நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்த நண்பர்கள்தான் என்று கூறுவேன்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், கலை இயக்குநர் முத்துராஜ் மற்றும் இசையமைப்பாளர் டி.இமான் இல்லாமல் இது நடந்திருக்காது. ‘சீமராஜா’ திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்கிறார் பொன்ராம்.

சிம்ரன், நெப்போலியன், லால் மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தை 24 AM STUDIOS  சார்பில் மிக பிரம்மாண்டமான செலவில் தயாரித்திருப்பதோடு, தனது தனித்துவமான விளம்பரங்களாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

வரும் செப்டம்பர் 13, விநாயகர் சதூர்த்தியன்று அதிக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது ‘சீமராஜா’..!

Our Score