நடிகர் விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளிவரவுள்ள ‘கத்தி’ படத்தை தடை செய்யக் கோரி பல தமிழ் அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.
மேலும், நேற்று படத்தின் தயாரிப்பு தரப்பினருடன், தமிழ் அமைப்புகளின் சார்பில் பேச்சுவார்த்தையும் நடத்தினர். இரவு 11 மணிவரையிலும் நடந்த அந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு திட்டமிட்டபடி இன்று கத்தி படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தையில் முடிவு எட்டிய உடனேயே சென்னை சத்யம் திரையரங்கில் கத்தி படத்தின் முன்பதிவு துவங்குவதாக செய்திகள் வெளியாகின. அதற்கடுத்து நேற்று இரவு 11.45 மணியளவில் சத்யம் திரையரங்கிற்கு ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரி தாக்குதல் தொடுத்தது. உருட்டுக் கட்டைகளால் தாக்கியதில் திரையரங்கின் முகப்பில் இருந்த அலங்கார கண்ணாடிகள் நொறுங்கின.
மேலும், திரையரங்க வளாகம் முழுவதையும் அந்த மர்ம கும்பல் அடித்து நொறுக்கினர். பின்னர் யாரும் எதிர்பாராத நேரத்தில் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை திரையரங்கின் மீது வீசிவிட்டு, அந்த மர்ம கும்பல் தப்பித்துச் சென்றனர். இதில் திரையரங்கின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது.
இதேபோல் ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டரும் அடுத்து தாக்குதலுக்குள்ளானதாம்.. அங்கேயும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன..
இது குறித்து அண்ணாசாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘கத்தி’ படம் வெளிவரக் கூடாது என்று வலியுறுத்தி சிலர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.