அந்தா, இந்தா என்று இழுத்துக் கொண்டிருந்தா ‘கத்தி’ பட விவகாரம் சற்று நேரத்திற்கு முன்பு முடிவுக்கு வந்திருக்கிறது..
“சர்ச்சைகள், ரகளைகளுக்கு இடம் கொடுக்காமல் நல்ல பிள்ளையாக லைகா என்ற பெயரை மட்டும் மாற்றிவிட்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள்” என்று திரையரங்கு உரிமையாளர்களின் இரண்டு சங்கங்களும் ஏகோபித்த குரலில் சொன்னதை, கடந்த இரண்டு நாட்களாக மறுத்து வந்த ஐங்கரன் நிறுவனமும், லைகா நிறுவனமும் “இன்றைக்கு முடியாவி்ட்டால் நாளை பூஜை மட்டுமே ரிலீஸாகும்…” என்ற திரையரங்கு சங்கங்களின் கடைசி கட்ட மிரட்டலுக்கு பயந்து டீலுக்கு ஒத்துக் கொண்டார்களாம்.
சற்று நேரத்திற்கு முன்பாக ஐங்கரன் நிறுவனம் டிவீட்டரில் முறைப்படி இந்தச் செய்தியை வெளியிட்டு வி்ட்டார்கள்..!
இதன்படி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் மட்டும் கத்தி படத்தின் போஸ்டர்களிலும், டைட்டிலும் தயாரிப்பு நிறுவனமான லைகாவின் பெயர் இருக்காதாம்..! மற்ற இடங்களில் நிச்சயம் இருக்குமாம்..
மற்ற இடங்களில் ஏன் இருக்கும் என்றால் அங்கெல்லாம் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் கிளைகள் இல்லை என்பதால்தான்..!
இத்தனை தூரம் இழுத்து வந்ததுக்குகூட ஒரு காரணம் உண்டு.. எத்தனை கோடி செலவழித்தாலும் கிடைக்காத ஒரு பரபரப்பும், விளம்பரமும் இந்த இரு கட்சிகளின் எதிர்ப்பினாலும், மாணவர்களின் கடும் கோபத்தினாலும் ‘கத்தி’ படத்திற்குக் கிடைத்துவிட்டது.
‘கத்தி’ படத்தின் பாடல்களின் டீஸர்.. மற்றும் டிரெயிலருக்கு கிடைத்த வரவேற்பே இதற்குச் சான்று..!
‘கத்தி’ படத்தின் கதையில் நாங்கள் எதையும் எதிர்க்கவில்லை.. படத்தில் நாங்கள் எந்தக் காட்சியையும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர் மட்டுமே தமிழினத்திற்கு விரோதமானவர் என்றுதான் எதிர்ப்பாளர்கள் ஆட்சேபித்தார்கள்..
நம்ம மக்கள்தான் மிகவும் புத்திசாலிகளாச்சே..? ‘படத்திற்கே எதிர்ப்பு போலிருக்கு.. அப்ப படத்துல ஏதோ இருக்கு போலிருக்கு’ என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லாவிடில் இத்தனை லட்சம் பேர் ஒரே நாள் இரவில் டிரெயிலரை ஓட விட்டிருப்பார்களா..?
சரி.. ‘கத்தி’ திரைக்கு வந்துவிட்டது.. அடுத்து விஜய் ரசிகர்களுக்கு இந்தத் தீபாவளி செம கொண்டாட்டம்தான்..!