full screen background image

சத்திய சோதனை – சினிமா விமர்சனம்

சத்திய சோதனை – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை சூப்பர் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சமீர் பரத்ராம் தயாரித்துள்ளார்.

படத்தில் பிரேம்ஜி அமரன், ஸ்வயம்ஷித்தா, ரேஷ்மா பசுபுலட்டி, கே.ஜி.மோகன், செல்வமுருகன், லஷ்மி, ஹரிதா, ஹலோ கந்தசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – சதீஷ் சங்கையா, ஒளிப்பதிவு – ஆர்.வி.சரண், படத் தொகுப்பு – வெங்கட்ராஜன், கலை இயக்கம் – வாசுதேவன், பாடல்கள் – வேல்முருகன், இசை – ரகுராம், பின்னணி இசை – தீபன் சக்கரவர்த்தி, வசனம் – வி.குருநாதன், சுரேஷ் சங்கையா, பாடகர்கள் – கங்கை அமரன், வீரமணி ராஜூ, திவாகர், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

எப்போதும் சத்தியத்துக்குத்தான் சோதனை நடந்து, அந்த சத்தியம் வெளியில் வராமல் அடங்கிப் போகும் சூழல் ஏற்படும். இதைத்தான் சத்திய சோதனை’ என்பார்கள். அப்படியொரு சத்திய சோதனை இந்தப் படத்தின் நாயகனான பிரேம்ஜிக்கு ஏற்படுகிறது. இந்தச் சோதனையில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

அருப்புக்கோட்டைக்கு அருகில் இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்ஜி. கொஞ்சம் அசடு. அப்பிராணி. இவருக்கும், பக்கத்து ஊரில் வசிக்கும் ஸ்வயம்ஷித்தாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்கிறார்கள்.

ஒரு நாள் தனது வருங்கால மனைவியை பார்ப்பதற்காக அந்த ஊருக்கு வருகிறார் பிரேம்ஜி. வழியில்.. பொட்டல் காட்டில் ஒரு ஆண் கொல்லப்பட்டு கிடக்கிறார். சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியாகும் பிரேம்ஜி செய்யும் அடுத்தடுத்த செயல்கள் நம்மையும் அதிர்ச்சியாக்கும்.

பிணம் வெயிலில் காய்கிறதே என்றெண்ணி அதை ஓரமாக இழுத்துச் சென்று மரத்தின் நிழலில் போடுகிறார் பிரேம்ஜி. மேலும் பிணத்தின் கழுத்தில் இருந்த ஒரு சின்ன செயினையும், செல்போனையும் எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் இதையெல்லாம் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறார் பிரேம்ஜி.  

ஆனால் அந்தப் பிணத்தின் கழுத்து நிறைய நகைகள் இருந்ததாகச் செய்திகள் வர.. அத்தனை நகைகளையும் பதுக்கிவிட்டதாக பிரேம்ஜி மீது சந்தேகப்படுகிறார்கள் போலீஸார். பிரேம்ஜியை ஸ்டேஷனிலேயே வைத்து அடித்து உதைக்கிறார்கள்.

செய்யாத குற்றத்திற்காக தன்னை அடிப்பதை நினைத்துக் கோபமான பிரேம்ஜி ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்டேஷனில் இருந்த அந்தக் கொலை செய்யப் பயன்படுத்திய அரிவாளையும், போலீஸ் வாக்கி டாக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடி விடுகிறார்.

இவர் ஓடும்போது ஸ்டேஷனில் இருந்த சில குற்றவாளிகளும் தப்பியோட.. போலீஸுக்கு தலைவலியாகிறது. பிரேம்ஜியுடன் சமாதானத் தூது நடத்த முனைகிறார்கள்.

பிரேம்ஜி சமாதானமானாரா.. அந்தக் கொலையை யார் செய்தது… மீதமான நகைகளை யார் கொள்ளையடித்தது போன்ற கேள்விகளுக்கான பதிலை, 2 மணி நேரம் தியேட்டரில் உட்கார்ந்து பார்த்து சிரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தைக் கொடுத்த அதே சுரேஷ் சங்கையாதான் இந்தப் படத்தையும், முதல் பட பாணியிலயே நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார்.

பிரேம்ஜியின் உடல் மொழிக்கும், உருவத்திற்கும், முகத்திற்கும் பொருத்தமான கதாப்பாத்திரம்தான். மற்றைய நடிகர்கள் மறுத்துவிட்டதால் கிடைத்த வாய்ப்பில் ஜொலித்திருக்கிறார் பிரேம்ஜி.

அந்தக் கிழவியிடம் வாயைக் கொடுத்து தனது நடிப்பைத் துவக்கி மீண்டும் அதே கிழவியிடம் இருந்து திருமணப் பரிசை பெற்றுக் கொண்டு நன்றி சொல்வதுவரையிலும் தன்னை மிக, மிக ரசிக்க வைத்திருக்கிறார் பிரேம்ஜி.

போலீஸ் ஏட்டுவிடம் ஆங்கிலத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நடந்தவைகளை சொல்லி அலப்பறையை ஆரம்பிக்கும் பிரேம்ஜி, அதற்குப் பிறகு ஒவ்வொரு காட்சியிலும் தனது அப்பாவித்தனமான நடிப்பினால் கை தட்டலை வாங்குகிறார்.

போலீஸ் அடிப்பதைப் பற்றி நக்கல் செய்வதும், போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஆலோசனைக்கு பதில் ஆலோசனையாக “இனிமேல் எந்தக் கொலை நடந்தாலும் கண்டுக்காமல் போறதுதான் நல்லதுன்னு புரிஞ்சுக்கிட்டேன் ஸார்…” என்று சீரியஸாக கிண்டல் அடித்து டென்ஷனை கூட்டும்போதும் நகைச்சுவையை தெறிக்க விடுகிறார்.

படத்திலேயே அதிகக் கை தட்டல் வாங்கியது.. கொலையாளிகள் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தவைகளை அப்படியே நீதிபதியிடம் போட்டுக் கொடுக்கும் காட்சியில்தான்.

“அழுத்தமான ஆளு பாருய்யா” என்ற சொல்லுக்கு இந்தப் பாட்டிதான் பொருத்தமாகத்தான் இருப்பார். கல்லுளிமங்கையாட்டம் கேள்விக்குப் பதில் சொல்லாமல் நகையை யார் எடுத்தது என்பதற்கும் பதில் சொல்லாமல் கடைசிவரையிலும் தப்பித்துக் கொள்ளும் அந்த நடிப்பும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறது.

இயந்தரத்தனமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நீதிமன்றங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான நீதிமன்றத்தைக் காட்டுகிறார் நீதியரசராக நடித்திருக்கும் கு.ஞானசம்பந்தன்.

போலீஸூக்கும், குபேரனுக்கும் ஒவ்வொரு தடவையும் கிளாஸ் எடுப்பதை போல அவர் சொல்லும் அறிவுரைகள் வித்தியாசமானது. அதேபோல் இயல்பான தனது பேச்சாலேயே சிரிப்பலையை கோர்ட்டிலேயே உருவாக்குகிறார் ஞானசம்பந்தன்.

குபேரனாக நடித்தவர் படும்பாடுதான் சொல்லி மாளலை. ஒரு பக்கம் பக்கத்து ஸ்டேஷன் போலீஸ்காரர்கள் அந்த நகைகளில் பங்கு கேட்டு அடிக்கடி போனை போட்டு இம்சை செய்ய.. அவர்களையும் சமாளித்து நகைகள் கிடைத்தால் அதைப் பங்கு போட்டுக் கொள்ள நினைத்து ஆலாய்ப் பறக்கும் சாதாரண ஏட்டுவாய் ஜமாய்த்திருக்கிறார்.

மேலும் போலீஸ் கான்ஸ்டபிள்கள், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், பெண் கான்ஸ்டபிளாக நடித்தவர், போலீஸ் உளவாளியான ஸ்பை என்று இந்தக் கூட்டமே நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் நாயகி ஸ்வயம்சித்தாவுக்கு பெரிய அளவுக்கு நடிப்புக்கான ஸ்கோப் இல்லையென்றாலும் அவரால்தான் படத்தின் கிளைமாக்ஸில் திருப்பமே ஏற்படுகிறது. ஒட்டு மொத்த நடிகர், நடிகைகளையும் சிறப்பாக நடிக்க வைத்து அவர்கள் மூலமாகவே ஒரு நகைச்சுவை தர்பாரே நடத்தியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.

தொழில் நுட்பத்தில் அந்த சின்னக் கிராமத்து அழகையும், மக்களையும், ஊரையும் அழகுபட காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஐயப்பன் பக்தி பாடலின் இசை ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் சிரிப்பதற்குத் தூண்டுதலாகியிருக்கிறது. ஒரு சின்ன பிசிறுகூட தட்டாமல் படத் தொகுப்பினை செய்திருக்கிறார் தொகுப்பாளர்.

ஒரு சின்னக் கதை. அதற்கொரு சின்ன திரைக்கதை. ஆனால் பெரிய அளவுக்கான சிரிப்பலைகளை உண்டு செய்திருக்கிறது. வெறும் 1 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் தற்போதைய இயக்குநர்களுக்கு ஒரு முன் மாதிரியான படம்.

பெரிய பட்ஜெட் படங்களில்கூட காணக் கிடைத்தாக நகைச்சுவைக் காட்சிகளும், மன சந்தோஷமும் இந்த சின்னப் படத்தில் கிடைத்திருக்கிறது. சில, பல லாஜிக் எல்லை மீறல்கள் இருந்தாலும் இயக்குநரின் கஷ்டப்பட்ட உழைப்புக்காக அதையெல்லாம் மறக்கலாம்.. மறைக்கலாம்.. படத்தைக் கொண்டாடலாம்..!

அவசியம் பார்த்து சிரித்து மகிழுங்கள்..!

 RATING : 4 / 5

Our Score