“நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றக் கூடாது…” – நடிகை சரோஜா தேவி எதிர்ப்பு..!

“நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றக் கூடாது…” – நடிகை சரோஜா தேவி எதிர்ப்பு..!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தன்னுடைய பிறந்த நாளை இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடினார். இந்த நிகழ்வில் நடிகர் சிவகுமார், நடிகர் சங்க நிர்வாகிகளான மனோபாலா, ரமணா, ஹேமச்சந்திரன், அயூப்கான், நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் போது சமீபத்தில் பெய்த பெருமழைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார் சரோஜாதேவி. நடிகர் சிவக்குமார் முன்னிலையில் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் அதற்கான காசைலோயை பெற்ருக் கொண்டார்.

பின்பு நடந்த விழாவில் சரோஜா தேவி பேசும்போது, “நான் முதலில் நடிகர் சிவகுமார் அவர்களிடம்தான் சென்னைக்கு வந்து என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவது பற்றியும் நிவாரண நிதி வழங்குவது பற்றியும் கூறினேன். நான் அதை பற்றி அவரிடம் கூறியதும் உடனே ஏற்பாடு செய்துவிடலாம் என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார்.

நடிகர் சிவகுமார் மிகவும் நல்ல மனிதர். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் நான் என்னுடைய வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நான் ரூபாய் 5 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன். மற்றவர்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இதை வழங்கியுள்ளேன்.

நான் முன்னொரு காலத்தில் மிகப் பெரிய நடிகையாக வலம்வந்தபோது நடிகர் சங்கத்துக்கு 5 ரூபாயை, நன்கொடையாக வழங்கினேன். அப்போதைய நடிகர் சங்க நிர்வாகியான திரு.வி.கே.ராமசாமி அவர்கள் நான் 5 ரூபாய், நன்கொடை அளித்ததை அப்போதே பெரிதும் பாராட்டினார். ஏனென்றால் அப்போதைய காலத்தில் அது மிகப் பெரிய தொகையாகும். ஆனால் அந்த பணத்திற்கான ரசீதும் வரவில்லை.. அந்த பணம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை.

ஆனால் இப்போது வந்துள்ள நடிகர் சங்க பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள். அவர்கள் அனைவருக்கும் திரைத்துறையில் நடிகர்களின் கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் நன்கு அறிந்து அனைவரும் மிகவும் துடிப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

நடிகர், நடிகைகள் யாருக்கும் வறுமை ஏற்படக் கூடாது. அவர்கள் நன்றாக வாழ்ந்துவிட்டு வறுமை கோட்டுக்கு கீழ் போனால் அது நிச்சயம் நன்றாக இருக்காது. அதனால் வயதான நடிகர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் உதவும் வகையில் நடிகர் சங்கம் ஓய்வூதியும் வழங்கவுள்ளதாக நான் இவர்கள் மூலம் நான் தெரிந்து கொண்டேன். இது மிகச் சிறந்த விஷயமாகும்.

நான் பெங்களூரில் பிறந்திருந்தாலும் எனக்கு புகுந்த வீடு சென்னைதான். என்னுடைய உயிர் பிரிந்தால்கூட சென்னையில்தான் பிரியவேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திப்பதுண்டு. என்னுடைய கணவர் கூறியது போல் அனைத்தும் நடந்து வருகிறது. இன்று நானும் உண்டு  மற்றவர்களுக்கும் அளிக்கும் அளவுக்கு இறைவன் என்னை நல்ல இடத்தில் வைத்துள்ளான்.

என்னுடைய வாழ்க்கையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை என்னால் மறக்கவே இயலாது. அவரும் நானும் இணைந்து நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து படத்தை கலர் படமாக மாற்றினார். அதற்க்கு காரணம், நான் அந்த படத்தில் அறிமுக நடிகை, என்னை ரசிகர்கள் ஏற்று கொள்வதற்காக, படத்தில் நான் வரும் பகுதியில் இருந்து படத்தை கலர் படமாக மாற்றினார். எதிர்பார்த்தது போல் அந்த படம் மிகப் பெரிய வெற்றியினைப் பெற்றது.

அதன் பிறகு நானும் அவரும் பல படங்களில் சேர்ந்து நடித்தோம். எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தந்தவர் அவர்.. நான் எப்படி பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பது முதல் பல நல்ல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார். என்னால் நிச்சயம் அவரை ஒருபோதும் மறக்கவே முடியாது.

அவருடைய ராமாபுரம் தோட்டத்தின் இன்றைய நிலைமையைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எல்லோரும் அவரை ‘தெய்வம்’ என்று சொல்லுவது உண்டு. நானும் அவருடைய ராமாபுரம் இல்லத்துக்கு சென்று அவரைச் சந்தித்துப் பேசி, அந்த வீட்டிலேயே பல முறை சாப்பிட்டுள்ளேன்.

அதனால் நீங்கள் அவர் அவரை ‘தெய்வம்’ என்று கூறுவதோடு நிறுத்திவிடாமல் அவருடைய இருப்பிடம் என்பது தெய்வம் வாழும் இடம் போல் புனிதமான கோவில் போல் இருக்க வேண்டும். அவரால் வந்தவர் இந்த சரோஜா தேவி. அவர் இல்லை என்றால் இந்த சரோஜா தேவியே இல்லை.

நான் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் நடித்துள்ளேன். அவரிடம் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். ஜெமினி கணேசன் அவர்கள் எனக்கு நல்ல நண்பர். நடிகர் சிவகுமார் மிகச் சிறந்த மனிதர்.  அவரிடமிருந்து நான் நிறைய நல்லொழுக்கங்களை கற்றுள்ளேன். அவருடைய புதல்வர்களும் அதே போல் மிகச் சிறந்த முறையில் வளர்ந்துள்ளனர்.

'ஆதவன்' படத்தின் படபிடிப்பின்போது நடிகர் சூர்யா என்னை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார். நடிகர் சிவகுமார் அவர்களுடைய அதே குணம் அப்படியே அவருடைய புதல்வர்களுக்கும் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

முற்காலத்தில் நமது தென்னிந்திய நடிகர் சங்கத்துடன்தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திரையுலகங்கள் இணைந்திருந்தது. இப்படி பாரம்பரியமிக்க நமது நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. தென்னிந்திய நடிகர் சங்கம் என்றால் நான்கு மொழியை சேர்ந்தவர்களும்தான் இங்கே நடிக்கின்றோம்.

கலையுலகத்துக்கு மட்டும்தான் ஜாதி, மொழி என்ற வேறுபாடு ஏதும் இல்லாமல் இருந்தது. எந்தவித வேறுபாடும் இல்லாமல் தொடர வேண்டும். கலையுலகத்தில் பிரிவினை தவறு. அப்படி பாரம்பரியமான விஷயத்தை மாற்ற கூடாது.

சீக்கிரமாக நடிகர் சங்கத்துக்கான இடத்தில் நடிகர் சங்க கட்டிடம் வரும். நடிகர் சங்கம் சார்பாக என்னை எந்த நிகழ்வுக்கு அழைத்தாலும் நான் கண்டிப்பாக வருவேன்..” என்றார்.