‘சென்னையில் ஒரு நாள்’, ‘புலிவால்’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம், தனுஷ் – காஜல் அகர்வால் நடிக்கும் படத்தையும், விக்ரம் பிரபு நடிக்கும் படத்தையும் தயாரிக்க உள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனம் தற்போது சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் ‘சண்டமாருதம்’ என்ற படத்தையும் மிகப் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.
“புயல், சுனாமி போன்றவற்றையும் தாண்டி அசுர வேகத்துடன் வீசும் காற்றுக்கு ‘சண்டமாருதம்’ என்றுபெயர். எவ்வளவு பெரிய தடைகளையும் உடைக்கும் ஆற்றல் அப்பெரும் காற்றுக்கு உண்டு. இந்தக் கதைக்கு இப்பெயர் பொருத்தமாக இருப்பதால் ‘சண்டமாருதம்’ என்று பெயர் சூட்டி இருக்கிறோம்…” என்கிறார் இயக்குனர் A.வெங்கடேஷ்.
இது இவரின் இயக்கத்தில் வரும் 20-வது படம். ஏற்கெனவே சரத்குமார் நடித்த ‘ஏய்’, ‘மகாபிரபு’, ‘சாணக்யா’, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ்.
‘எதிரியை எதிரியா பார்த்து பழக்கமில்லை எனக்கு… எரிச்சித்தான் பழக்கம்’ என்கிற கொள்கையுடைய அழுத்தமான வில்லன் கதாபாத்திரம் ஏற்கிறார் சரத்குமார். சரத்குமார் தான் தயாரித்த முதல் படமான ‘கண் சிமிட்டும் நேரம்’ படத்தில் வில்லனாகத்தான் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் வில்லனாக நடிக்கவிருக்கிறார்.
முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். மற்றும் விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, டெல்லிகணேஷ், காதல் தண்டபாணி, ஆதவன், பாபூஸ், அவினாஷ், மாளவிகா, கானா உலகநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கன்னடத் திரையுலகின் பிரபல நடிகர் அருண்சாகரும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் திருமதி ராதிகா சரத்குமாரும் நடிக்கிறார்.
இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத, திரைக்கதை வசனம் எழுதுகிறார் கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார். ஒளிப்பதிவு N.S.உதய்குமார். இவர் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் உதவியாளர். நா.முத்துக்குமார் பாடல்களுக்கு ஜேம்ஸ்வசந்தன் இசையமைக்கிறார். எடிட்டிங்: V.T. விஜயன், கலை : மணிமொழியன் ராமதுரை, ஸ்டண்ட் : ஸ்டண் சிவா, நடனம் : கல்யாண், சிவசங்கர் தயாரிப்பு: R.சரத்குமார் திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன், கூடுதல் திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் A.வெங்கடேஷ்.
மே 14-ம் தேதி படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெற்று ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது ‘சண்டமாருதம்’.











