full screen background image

“ஸ்பை சினிமாஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்..?” – நடிகர் சரத்குமாரின் விளக்கம்..!

“ஸ்பை சினிமாஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்..?” – நடிகர் சரத்குமாரின் விளக்கம்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் இன்று மாலை ஆழ்வார்பேட்டை ரெயின்ட்ரீ ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது திடீர் அதிர்ச்சியாக ஸ்பை சினிமாஸ் நிறுவனத்துடனான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒப்பந்தத்தை கடந்த மாதம் 29-ம் தேதியே தான் ரத்து செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.

சரத்குமார் அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள் இங்கே :

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

நான் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரையிலும் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தேன். 2008-ல் இருந்து 2015-வரையிலும் தலைவராகப் பொறுப்பில் இருந்தேன். 

சங்கத்தின் நிர்வாகத்தினை திறம்பட செய்து வந்தேன். நாலு கோடியே இருபத்தி ஐந்து லட்சம் கடனாக இருந்த நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்க நிறைய போராடினேன். விஜய்காந்த் ஒரு கோடி ரூபாய் இருப்பில் இருந்தபோது பொறுப்பில் இருந்து விலகிச்  சென்றார்.

2007-ல் பல கலை நிகழ்ச்சிகளை நடத்தி சங்கத்தின் இருப்புத் தொகையை இரண்டு கோடியாக்கினோம். இப்படி சேர்க்கப்பட்ட பணத்தில்தான் மூத்த உறுப்பினர்களின் ஓய்வூதியம், மற்றும் மருத்துவச் செலவுகள், கலைஞர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவு ஆகியவற்றை செய்து வந்தோம்.

நான் பொறுப்பில் இருந்தவரைக்கும் கணக்கு வழக்குகளை முறையாக கணக்காளர்களை வைத்து கணக்கிட்டு அதை பத்து நாட்களுக்குள் நாசர் அணியினரிடம் ஒப்படைப்பேன். அதற்கு முன்பு தேர்தல் கணக்குகளை நாசர் சரி பார்த்துக் கொள்ள என்னுடைய  மேலாளரிடம் கொடுத்தனுப்புவேன்.

என்னுடைய பதினைந்து ஆண்டு கால அனுபவத்தில் சொல்கிறேன். சங்கம் மீண்டும் கடனில் மூழ்கிவிடக் கூடாது என்றே நினைக்கிறேன்.

2006-2010 காலக்கட்டத்தில் தேர்தலில் பங்கேற்க யாரும் முன் வராத காரணத்தினால் ஏற்கெனவே இருந்த நிர்வாகம் மற்றும் செயற்குழு சங்கத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளைச் செய்தது. அப்படி இந்தத் திட்டம்தான் சிறந்தது என்று பல்வேறு வகையாக பரிசீலனை செய்த பின்புதான் ஸ்பை சினிமாஸுடனான ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை தற்போதைய தலைவர், செயலாளர், பொருளாளர் மூவரும் படித்துவிட்டு இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதுதான் தற்போது நடைபெற்ற இந்த்த் தேர்தலின் மையமாக இருந்த்து என்று சொன்னால் அது மிகையாகாது. அதே சமயம்  அந்த ஒப்பந்தம் ஏன் ரத்து செய்ய வேண்டும் என்பது எனது கேள்வியாகவும் இருந்தது.

ஏனெனில் அந்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பாகவே சிறப்பு பொதுக்குழுவைக் கூட்டி அதில் ஒப்பந்தம் பெறப்பட்டு அதன் பின்பு ஸ்பை சினிமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி.. இதன் பின்பு கட்டிடத்தை இடிக்க முறைப்படி மனு செய்து அனுமதி பெற்ற பின்புதான் கட்டிடம் இடிக்கப்பட்டது. கட்டிடம் இடிக்கப்பட்ட பின்பு நீதிமன்றத்திலே வழக்கு தொடரப்பட்டு இந்த நிமிடம்வரையிலும் வழக்கு நீதிமன்றத்திலே இருக்கிறது.

அந்த ஒப்பந்தத்தை எதற்காக ரத்து செய்ய வேண்டும் என்பது சொல்லப்படாத நிலையில், இப்போதுவரையிலும் ஒப்பந்தத்திற்கு எதிராகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எதற்காக அந்த இடம் 29 வருடங்கள் 11 மாதங்களுக்கு குத்தகைக்குத் தரப்பட்டது என்றால்.. அந்தக் கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டுமெனில் 10, 12 கோடி ரூபாய் செலவாகும். இதனை மனதில் வைத்துதான் ஸ்பை சினிமாஸுடன் பேசினோம். அவர்கள் கொடுத்த திட்டத்தைப் படித்துப் பார்த்தோம்.

அவர்கள் அந்தக் கட்டிடத்தை 50 கோடி, 60 கோடி செலவில் கட்டலாம். ஆனால் கட்டிய செலவினை 15 ஆண்டுகளில் எடுக்க முடியுமா என்று நாங்கள் கேட்டதற்கு அவர்களுடைய ஆடிட்டர்களை வைத்து கலந்து பேசி.. அது முடியாது அவர்கள் சொன்னதால்தான் 29 வருடங்கள் 11 மாதங்கள் குத்தகைக்கு தரப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான சரியான காரணத்தை இப்போதுவரையிலும் சொல்லாத காரணத்தினால்.. 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்தால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என்று புதிய தலைமுறை சேனலின் பேட்டியில்கூட சொல்லியிருந்தேன். நேற்றைய இரவில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோதுகூட ‘ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்’ என்றும் கேட்டுக் கொண்டேன்.

‘நிலம் விற்கப்பட்டுவிட்டது’ என்றார்கள். நான் அதற்கு ஆதாரம் காட்டினேன். எந்தவிதத்திலும் அந்த இடம் விற்கப்படவில்லை.  கடந்த 14-ம் தேதி நான் காட்டிய நிலத்தின் தாய் பத்திரத்தினை இன்னும் ஒரு வார காலத்திற்குள் சங்கத்தில் ஒப்படைக்க இருக்கிறேன். ‘கட்டிட அமைப்பில் நமக்கென்று இடம் இல்லை’ என்றார்கள். இரண்டாயிரத்து சதுர அடியில் இடம் இருப்பதை நான் சுட்டிக் காட்டினேன். இப்படி என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களுடன் இந்தத் தேர்தல் என்னைக் குறி வைத்தே நடந்திருக்கிறது. இப்போதும் சொல்கிறேன், அந்த ஒப்பந்தம் மிகச் சரியானது. தலைவர் நாசர் அந்த ஒப்பந்தம் பற்றி மீண்டும் பேச்ச் சொன்னால் நான் பேசத் தயார்.

இருந்தாலும் கடந்த மாதம் 29-ம் தேதி இந்த ஒப்பந்தத்தை போட்டவர்களிடம் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதற்கு முன்பான ஒரு வார காலத்திலும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. முடிவில் என்ன செய்யலாம் என்று பேசினோம். கடைசியில் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக முடிவு செய்தோம்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது அவர்களுக்கும் என் மீது ஒரு பாவ உணர்வு ஏற்பட்டுவிட்டது. உங்க மேலயா இப்படியொரு குற்றச்சாட்டு அவர்களும் மனம் வருத்தப்பட்டார்கள்.

செப்டம்பர் 29-ம் தேதி தேர்தல் சூடு பிடித்திருந்த நேரம். இந்தக் காரணத்துக்காகவே நான் ஸ்பை சினிமாஸுடன் பேசி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டேன். இதை இப்போது மீடியா முன்பாக சொல்கிறேன்.. என்னுடைய சகலையும், சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக தேர்த்தெடுக்கப்பட்டிருக்கும் ராம்கி முன்னிலையில் இதனைச் சொல்கிறேன்.

ஏனெனில் என் மீது ஒரு களங்கம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 33 ஆண்டுகளாக பொது வாழ்வில் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.  என் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லாமல் ஒரு க்ளீன் இமேஜேடு, கிளீன் மேனேஜ்மெண்ட்டோடு நான் பயணப்பட்டிருக்கிறேன்.  ஸ்பை சினிமாஸ் நிறுவனம் சாதாரணமானதல்ல. இந்த சினிமாவை வேறு உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கும் ஒரு சினிமா கம்பெனி.

இதை ஏன் அந்த 29-ம் தேதியே சொல்லவில்லையெனில்.. அப்படி சொல்லியிருந்தால் தேர்தலில் எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால் அது எனது கிளீன் இமேஜை கெடுக்கும் என்பதால்தான் இந்தக் கால தாமதம். செய்திருந்தால் என் மீதான பல்வேறு விமர்சனங்களும் எழுந்திருக்கும். அதனால்தான் சொல்லவில்லை. இப்போது இது ராம்கி மூலமாக நாசரிடம் ஒப்படைக்கப்படும்.

இதன் மூலம் நான் என்ன சொல்றேன்னா இனிமேல் நான் நடிகர் சங்க விவகாரங்களில் தலையிட மாட்டேன். நான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறேன். தற்போதைய நிர்வாகிகள் என் மீது சுமத்திய ஊழல் புகாரினால் மனம் நொந்துள்ளேன். அதனால்தான் இந்த முடிவு.

இப்போதும் சொல்கிறேன். அந்த இடத்துல கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் வந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் மாதத்திற்கு 24 லட்சம் ரூபாய் வருமானமாக வரும். இதனால் வருடத்திற்கு இரண்டே முக்கால் கோடி ரூபாய் கிடைக்கும். இது தொடர்ந்தால் 10 வருடங்களில் அது போல இன்னும் பல கட்டிடங்களை நமக்குச் சொந்தமாக வாங்க முடியும். அதனால் புதிய நிர்வாகிகள் மீண்டும் ஒரு முறை இந்த ஒப்பந்தத்தை பரிசீலனை செய்யலாம்.

இதை கேன்ஸல் செய்தது உறுதி. இதில் சந்தேகமில்லை. ஆனாலும் இதை தொடர வேண்டுமெனில் பேசலாம். நீங்கள் 10 கோடி ரூபாய் கலெக்ட் செய்வதாகச் சொல்லியிருக்கிறீர்கள். இதில் மாத்த்திற்கு 1 கோடி ரூபாய் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். மேலும் நலிந்த நடிகர்களுக்கு இதிலேயே மாதந்தோறும் உதவித் தொகை தர வேண்டும். எப்படி தர முடியும்..?

5 வருடத்திற்கு தொடர்ச்சியாக வருடத்திற்கு 1 கோடி ரூபாய் தருவதாக ஸ்பை சினிமாஸ் சொல்கிறது. ஐசரி கணேஷும் நலிந்த  கலைஞர்களுக்கு உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறார். இதைக் கருத்தில் கொண்டு புதிய நிர்வாகிகள் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தை ஒரு சிறந்த நடிகர் சங்கமாக கொண்டு வர வேண்டும். நீங்கள் இதில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அந்த நேரத்தில் இதைச் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோணவில்லை. அது பல்வேறு பிரச்சினைகளை கொடுக்கும் என்று நினைத்தேன். ஏனெனில் நிறைய குற்றச்சாட்டுக்களை தினமும் புதிது, புதிதாக எனக்கெதிராக சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். எல்லாத்துக்கும் பதில் சொல்லியே களைப்பாயிட்டேன்.

அதோடு இவர்கள் வெற்றி பெற்ற பிறகு பூச்சி முருகன் வழக்கினை வாபஸ் பெற்றாலும் ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போகும்போது அவர்கள் முடியாது என்று மறுத்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றால் நமக்குத்தான் கஷ்டம். அதனால்தான் ஒப்பந்தத்தை ரத்து செய்தேன்.

அவர்களும் சினிமா துறையில் இருக்கும் நிறுவனத்தார்தான். இதற்காக நிறைய பணத்தினை செலவழித்திருக்கிறார்கள். இது பற்றி பேச்சுவார்த்தை, தொடர் சந்திப்புகள் எல்லாவற்றுக்கும் அவர்கள்தான் பணத்தினை செலவழித்திருக்கிறார்கள். கோர்ட், வழக்கு மற்றும் ரிஜிஸ்திரேஷனுக்காகவே ஒன்றரை கோடி ரூபாய்வரைக்கும் செலவாகியிருக்கிறது. அவர்களும் யோசிப்பார்களே..?

என்னுடைய திரையுலக வாழ்க்கையில் நான் மிகவும் நேர்மையாக இருந்துள்ளேன். மிக நல்லவன் என்றும் பெயரெடுத்திருக்கிறேன். ஒரு முறை ஷூட்டிங்கின்போது 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து கழுத்தில் பலமாக அடிபட்டு மருத்துவமனையில் படுத்திருந்தபோது கிட்டத்தட்ட 20 தயாரிப்பாளர்கள்வரையிலும் கொடுத்த முன் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றபோது ரவிக்குமார், ஆர்.பி.சவுத்ரி என்ற இரண்டு நண்பர்கள் மட்டும் ‘நீங்கள்தான் நடிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் வந்து நடித்துக் கொடுங்கள்’ என்று சொன்னார்கள்.  நான் மிக சுத்தமானவன். தவறுகள் செய்யாதவன் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும்.

இந்த நடிகர் சங்கத்தில் 15 ஆண்டு காலம் பயணித்திருக்கிறேன். நலிந்த கலைஞர்களுக்கு பல உதவிகளைச் செய்திருக்கிறேன். இதையும் தாண்டி தமிழகத்திலே இருக்கும் நாடக சங்கங்களுக்கு எனது சொந்தப் பணத்தில் இருந்து கட்டிடம் கட்டி கொடுத்திருக்கிறேன்.

மூணு வருஷத்துக்கு முன்னாடியே இந்த நடிகர் சங்க்க் கட்டிடத்தை கட்டி முடிச்சிட்டு போங்கன்னு சொன்னதாலதான் அங்க இருந்தேன். மற்றபடி எனக்கு அங்க வேலை கிடையாது. ‘நாட்டாமை’ படத்துல நடிச்சதால நாட்டாமை மட்டும் பண்ணிக்கிட்டிருந்தேன்.

சாயந்தரம் போண்டா, பஜ்ஜி, காபின்னு சொந்தக் காசுல வாங்கி சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். அப்போ யாரும் அங்கே வரலை. அப்போது யாரும் சங்க வேலைகளில் ஆர்வம் காட்டலை. இப்போது மட்டும் அவர்களுக்கு எப்படி அக்கறை வந்ததுன்னு நான் இப்போ கேக்க வரலை.

நானே முதல்ல சங்கத்துக்கு வரணும்னே நினைக்கலை. ராதாரவி என்னையும், விஜயகாந்தையும் அங்க கூட்டிட்டு வரலைன்னா நான் வந்திருக்கவே மாட்டேன். எதுக்கு  அங்க வரணும்..? நடித்த பணம் வரலைன்னா அங்க போகணும்..? ஏதாவது பஞ்சாயத்துன்னாதான் போகணும்னு இருந்தேன்.

நான் நடிகர் சங்கத் தலைவரா மட்டும்தான் பேசணும்னு இல்லை. பொதுவான பல சினிமா தொடர்பான பிரச்சினைகளிலும் நான் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். இப்போது சங்கத்தில் எந்த கவுரவ பதவியையும் நான் ஏற்பதாக இல்லை. ஆனால் அனைத்துவித உதவிகளையும் எப்போது, எந்த நேரத்துலும் செய்வதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் இப்போது உலகாளவிய அளவுக்கு புகழ் பெற்றுவிட்டது. உலகம் முழுவதிலும் இருந்த தமிழர்களிடத்தில் எங்களது சங்கத்தைக் கொண்டு போய் சேர்த்த்து பத்திரிகை உலகம்தான். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல்தான் உலகத்தின் மிக முக்கிய விஷயம் என்பது போல, இந்த தேர்தல் நிகழ்வினை காட்டியதற்கு பத்திரிகை உலகத்துக்கு எனது நன்றி…” என்றார்.

Our Score