full screen background image

‘‘பொம்பளைகிட்ட போய் பேசுறியே.. நீயெல்லாம் ஒரு ஆம்பளையா..?’ நடிகர் சிவக்குமார் மீது ஆத்திரப்பட்ட சரத்குமார்.

‘‘பொம்பளைகிட்ட போய் பேசுறியே.. நீயெல்லாம் ஒரு ஆம்பளையா..?’ நடிகர் சிவக்குமார் மீது ஆத்திரப்பட்ட சரத்குமார்.

தென்னிந்திய நடிகர் சங்க சரத்குமார் அணியினரின் ஆதரவாளர்கள் கூட்டமும், வேட்பாளர்கள் அறிமுக கூட்டமும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. 

DSC_5609

இந்த கூட்டத்தில் சரத்குமாரை ஆதரிக்கும் நடிகர்-நடிகைகள், நாடக நடிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். வேட்பாளர்களை அறிமுகம் செய்து, சரத்குமார் பொன்னாடை அணிவித்தார்.

நடிகர்கள் ராதாரவி, சிம்பு, நடிகை ராதிகா சரத்குமார், டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, சேரன், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் பி.எல்.தேனப்பன் ஆகியோர் பேசினார்கள். 

கடைசியாக தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சரத்குமார் பேசினார். அவர் பேச்சில் இருந்து சில பகுதிகள் :

DSC_5604

“நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். ஆனால் தேர்தல் வந்துவிட்டது. இனி ஒற்றுமைக்கு வாய்ப்பு இல்லை. என் மீது எதிர் அணியினர் அவதூறு பேசுகிறார்கள். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். இதனால் என் மனது வலிக்கிறது.

இந்த நடிகர் சங்கத்துக்காக நிறைய உழைத்து விட்டேன். நாட்டாமையாக இருந்து பஞ்சாயத்துகள் நடத்தி பல பிரச்சினைகளை தீர்த்து இருக்கிறேன். அப்படிப்பட்ட என் மேல் அபாண்டமாக பழி சொல்கிறார்கள்.

1952-ம் ஆண்டு நடிகர் சங்கம் உருவானது. மூத்த கலைஞர்கள் இச்சங்கத்தை உருவாக்கினார்கள். இடமும் வாங்கினார்கள்.

என்னையும், விஜயகாந்தையும், ராதாரவிதான் நடிகர் சங்கத்துக்கு அழைத்து வந்தார். நடிகர் சங்க உறுப்பினர்களுக்காக பாடுபட்டார். அவரை சுயநலவாதி என்கிறார்கள். அவரை ஒருபோதும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

1996 முதல் 2000-வரையிலும் ராதாரவி நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 2000 முதல் விஜய்காந்த் தலைவராகவும், நான் பொதுச் செயலாளராகவும் இருந்தேன். அப்போதெல்லாம் இந்த நடிகர்கள் எங்கே போனார்கள்..?

2000-ம் ஆண்டில் நடிகர் சங்க பொறுப்புக்கு நான் வந்தபோது, சங்கத்தில் ரூ.4 கோடியே 25 லட்சம் கடன் இருந்தது. வங்கி அதிகாரிகளிடம் பேசி பேசி நான்தான் அதை ரூ.1 கோடியே 25 லட்சமாக குறைத்தேன். மீதம் கட்ட வேண்டிய பணத்தை  நான் உட்பல பல நடிகர்கள் பங்கு போட்டு அடைத்தோம். இன்னும் ஒரு 55 லட்சத்திற்காக கலை நிகழ்ச்சி நடத்தி சம்பாதித்து அதில் கடனை அடைத்து பத்திரத்தை மீட்டோம். அப்போதெல்லாம், நீங்கள் எங்கு இருந்தீர்கள்? சங்கத்துக்கு வந்ததே இல்லையே..? பொதுக்குழுவில் கலந்து கொண்டதும் இல்லையே.? வருமானம் ஈட்ட வழி சொன்னதும் இல்லையே.? 

ரஜினிகூட ‘‘தங்கத்தட்டில் தேங்காய் வைத்தது போல், இந்த இடம் இருக்கிறது. எனவே இந்த இடத்தை வைத்து வருமானத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்’’, என்று சொன்னார். அதன்படிதான், இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. 

அந்த இடத்தில் நலிந்த கலைஞர்களுக்கு உதவுவதற்காக வருமானம் பெறும் நோக்கில் புதிய கட்டிடம் ஒப்பந்தம் போட்டோம். 29 ஆண்டுகள் 11 மாதங்கள் என்று அந்த ஒப்பந்தம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.130 கோடி வருமானம் பெற வாய்ப்புகள் ஏற்பட்டன.

பொதுக்குழுவில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அப்போது யாரும் எதிர்க்கவில்லை. கேள்வியும் கேட்கவில்லை. இப்போது தனிப்பட்ட விரோதம் காரணமாக எதிர்க்கிறீர்கள். கையெழுத்து இயக்கம் நடத்துகிறீர்கள்.

சிசிஎல் கிரிக்கெட் போட்டியின் துவக்கத்தில் அப்பாஸ்தான் அதில் கேப்டனாக இருந்தார். அந்தப் பதவியை பறித்து விஷாலுக்கு கொடுத்தார்கள். விஷாலுக்கு கிரிக்கெட் ஆடவே தெரியாது. சம்பளம் அதிகம் கேட்டார். நாங்கள் தரவில்லை.

எங்களைப் பொறுத்தவரை அந்த கிரிக்கெட் போட்டிகள் நடத்தியதின் மூலம் நாங்கள் 35 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளோம். அந்த கிரிக்கெட் போட்டி தொடர் மூலம் நடிகர் சங்கத்துக்கு வருடந்தோறும் 25 லட்சம் ரூபாய் வருமானத்தை பெற்றுக் கொடுத்தேன். இது சுயநலமா..? 

உனக்கு கிரிக்கெட்டே விளையாட தெரியாது. ஆனால் நீ கேப்டன்..! அந்தக் கிரிக்கெட் குழுவில் இருந்தவர்கள்தான் விஷாலுடன் நிற்கிறார்கள். நடிகர்களும், நாடக கலைஞர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

ராதாரவியை பார்த்து ‘வெட்டியான்’. ‘சாவு வீடுகளுக்கு செல்பவர்’ என்று கிண்டல் செய்கிறார் விஷால். அவர் ஒரு இனத்தையே இழிவுபடுத்துகிறார். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கினை பதிவு செய்யலாம்.

நடிகர் கார்த்தி எம்.பி.ஏ. படித்திருக்கிறாராம். செயற்குழு, பொதுக்குழுவுக்கே வராதவர். இப்போது கேள்வி கேட்கிறார். நடிகர் சங்கத்துக்கே வராதவர் ‘நடிகர் சங்கத்தைக் காணோம்’ என்று கேள்வி கேட்கிறார்.

ஒரு எம்.எல்.ஏ., ஒரு எம்.பி., ஒரு கட்சித் தலைவராக இருக்கும் எனக்கு நிர்வாகம் தெரியாதா..? பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைத்தோம். மாற்றம் வேண்டும் என்று ஒபாமாவே சொன்னார். அதைத்தான் நாங்களும செய்தோம்.

நான் கடந்த 33 ஆண்டுகளாக கலைத்துறையில் இருக்கிறேன். ஆனால் என்னை நம்பாமல் பூச்சி முருகனை அந்த அணி நம்புகிறது. அவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியாது. ராதாரவி கெட்ட வார்த்தையில் திட்டினால் அவரை நேரடியாக போய்க் கேட்கும் தைரியம் உங்களுக்கு ஏன் இல்லை..? ராதாரவி மாதிரி எனக்கும் கெட்ட வார்த்தை பேசத் தெரியும்.

எஸ்.எஸ்.ஆர். மறைந்தபோது அவர் உருவப் பட திறப்பு விழா நடந்தபோது இவர்களெல்லாம் எங்கே போனார்கள்..? இப்போது எஸ்.எஸ்.ஆரை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

நான் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். என் தந்தை, தாத்தா எல்லோரும் பெரிய மனிதர்கள். மகாத்மா காந்தியின் இறுதி யாத்திரையை வானொலியில் வர்ணித்தவர் எங்கப்பா. என்னை பார்த்து 80 கோடி ஊழல் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அண்டப்புழுகு, ஆகாசப் புழுகு என்று அவர்களின் விமர்சனங்களுக்கு அர்த்தம் சொல்லலாம்.  என்னுடையது உண்மை மட்டுமே.

பாண்டவர் அணி ஜெயிக்க வேண்டும் என்கிறார்கள். அங்கே ஐந்து பேர் மட்டுமே ஜெயித்தால் போதுமா..? நாங்கள் 19 பேரும் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். வடிவேலு எங்கு பிரச்சாரம் செய்தாலும் அந்த அணி தோற்றுவிடும். அவர் சங்கத்தைக் காணோம் என்று கேலி செய்கிறார்.

நடிகர் சிவக்குமாரை ‘அண்ணா’ என்றுதான் என் மனைவி அழைப்பார். அவரே ‘உன் கணவன் சொந்தமா படம் எடுத்து உன் சொத்துக்களை அழித்துவிட்டானே?’ என்று என் மனைவியிடமே கூறியிருக்கிறார். நான் என் சொத்தைத்தான் என் நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுத்துள்ளேன். என் மனைவி சொத்தை நான் தொட்டதேயில்லை. என் பணத்தைத்தான் பலருக்கும் வாரி கொடுத்த கர்ணனாக இருக்கிறேன். இந்த அறுபத்தியொரு வயதிலும் இருபத்தொரு வயதானவனாகத்தான் என்னை நான் நினைத்துக் கொள்கிறேன்.

சிவக்குமாரின் இந்தக் கேள்விகள் என்னை வேதனைப்படுத்துகிறது. நீ ஆம்பளையா இருந்தா என்னிடம் கேள்வி கேள். அதைவிட்டுவிட்டு பொம்பளைகிட்ட போய் கேக்குற..!? சிவக்குமார் வீட்டின் முன் நின்று அவர் பேச்சுக்கு விளக்கம் கேட்பேன். அவர் பேசிய பேச்சுக்களை வாபஸ் வாங்கியே ஆக வேண்டும்.

‘பாயும்புலி’ படத்துக்காக பிரச்சனை வந்தபோது விஷால் தன்னுடன் 20 அடியாட்களை அழைத்து வந்தார். விஷாலே.. கராத்தே, கபடி, புட்பால் உள்ளிட்ட விளையாட்டுக்களில் வீரனாய் இருந்தால் என்னை ஜெயித்து பார். .!

அந்த அளவுக்கு விஷால் பெரிய ஆள் இல்லை. உன்னுடைய படத்தைவிடவும் என்னுடைய ‘சண்டமாருதம்’ படம் நன்றாக ஓடியது. விஷாலுக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசை. அதை நேரடியாகச் சொல்ல வேண்டியதுதானே..?

நடிகர் முரளி இறந்தபோது, இவர்கள் யாரும் வரவில்லை. நடிகர் திலகம் சிவாஜிகணேசனை கையில் தூக்கி வைத்திருந்தேன். கமல்ஹாசன் அவரது குருநாதர்  சாவுக்கே வரவில்லை. அமெரிக்காவில் இருந்தார். இவர் போய் நாசர் போட்டியிட முன்மொழிகிறார். விஸ்வரூபம் படப் பிரச்சினையின்போது நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று பேட்டியளித்து தமிழக முதல்வரையே அவமானப்படுத்தியவர் கமல்ஹாசன். நாட்டை விட்டு ஓடப் போகிறேன என்று ஒப்பாரி வைத்தவர் கமல்ஹாசன்.

அவர் ‘கலையுலக பிரம்மா’. ஓடக் கூடாது என்றார்கள். பிரச்சினை என்று வந்தால் ஊரைவிட்டு ஓடக் கூடாது. இங்கேயே களத்தில் நின்று போராட வேண்டும். நடிகர்களை இயக்குவது இயக்குநர்களே. கமலுக்கு வாய்த்த இயக்குனர்கள் போல், மற்றவர்களுக்கும் வாய்த்தால், அனைவரும் நடிப்பார்கள்.

‘உத்தமவில்லன்’ படம் பிரச்சினையில் சிக்கியபோது, அந்த படத்தை வெளிக்கொண்டு வர சாப்பிடாமல், தூங்காமல் 36 மணி நேரம் உழைத்தேன். அதற்கு அவர் நன்றி கூட சொல்லவில்லை. 

நடிகர் சங்க இடத்தை விற்று விட்டதாக சொன்னார்கள். விற்கவில்லை என்று பத்திரத்தை காட்டினேன். வருமான வரி செலுத்தவில்லை என்றனர். அதற்கும் விளக்கம் அளித்தேன். நடிகர் சங்க கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி சான்று பெறவில்லை என்றார்கள். அந்த சான்றிதழையும் காட்டினேன். ஆனாலும் தொடர்ந்து பொய் பேசி வருகிறார்கள். 

ராதாரவி தகாத வார்த்தையால் பேசிவிட்டார் என்கிறார்கள். அதற்காக சங்கத்தை உடைக்க வேண்டுமா? நடிகர் சங்க கட்டிட ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது, பணம் வாங்கிவிட்டேன் என்று குற்றம் சொல்கிறார்கள். வேதனையாக இருக்கிறது. நான் உழைத்து சம்பாதித்து சொந்த காலில் நிற்கிறேன். 

நடிகர் சங்கம் ஒரு குடும்பம் போன்றது. சாதி மொழிக்கு அப்பாற்பட்டது. அந்த சங்கத்துக்காக போராடியவனை, ‘வெளியே போ’ என்கிறீர்கள். கஷ்டப்பட்டு கூடு கட்டிய தூக்கணாங்குருவியை கூட்டைவிட்டே விரட்ட பார்க்கிறீர்கள்.

நடிகர் சங்கத்துக்காகத்தான் பாடுபடுகிறோம். இப்போது இதே சங்கத்துக்காகவே பிரச்சனைகள் வந்துவிட்டது. நடிகர்களுக்குள் பிரிவினை வந்துவிட்டது. நட்பு உடைந்தது உடைந்ததுதான். இனி நாம் ஒன்று சேரவே முடியாது.   

அந்த அணியினர் என்னை காயப்படுத்திவிட்டார்கள். அந்த வடு எனக்கு ஆறவே ஆறாது. அளவு கடந்த வேதனையை அனுபவித்துவிட்டேன். அவமானத்தால் ஆளைவிட்டால் போதும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டேன்.கொஞ்சம்விட்டால் அழுதுவிடுவேன். இந்தப் பணி வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்துவிட்டேன்.

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நல்லது செய்தவதற்காகவே தேர்தலில் நிற்கிறோம்.  எங்கள் அணி சேவை மனப்பான்மை கொண்டது. தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். வழக்கை வாபஸ் பெறாவிட்டாலும், என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கட்டிடம் கட்டப்படும். என் இறுதி ஊர்வலம் அந்தக் கட்டிடத்தில் இருந்துதான் துவங்கும். நல்லது நடக்க எங்கள் அணிக்கு ஓட்டு போடுங்கள்..”  

இவ்வாறு அவர் பேசினார். 

Our Score