full screen background image

“நடிகர் சங்க விவகாரத்தில் நான் தவறேதும் செய்யவில்லை…” – நடிகர் சரத்குமார் தன்னிலைவிளக்கம்..!

“நடிகர் சங்க விவகாரத்தில் நான் தவறேதும் செய்யவில்லை…” – நடிகர் சரத்குமார் தன்னிலைவிளக்கம்..!

தலையைச் சுற்ற வைக்கும் அளவுக்கு பிரச்சினை மேல் பிரச்சினையாக இருக்கிறது நடிகர் சங்க தேர்தல் விவகாரம்.

இன்று மாலை 4 மணிக்கு தேனாம்பேட்டை ரெயின்ட்ரீ ஹோட்டலில் நடிகர் சரத்குமார் தனது தரப்பு நியாயங்களை பத்திரிகையாளர்கள் முன் வைத்தார்.

அவர் பேசியதில் இருந்து சில முக்கியமான பகுதிகள் :

“நான் கடந்த 33 ஆண்டுகளாக கலைத்துறையில் பயணம் செய்து வருகிறேன். கடுமையான உழைப்பின் மூலம்தான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். உண்மையான உழைப்பு, நியாய தர்மங்கள் என்ற அடிப்படையில் என் வாழ்க்கையை நடத்தி வருகிறேன்.

ராதாரவி, ராம்கி இருவரும் முதலில் எனக்கு நண்பர்கள். பின்புதான் உறவினர்கள். எனவே அவர்கள் சொல்வதைத்தான் நான் கேட்கிறேன் என்றோ.. நாங்கள் ஒரு குழுவாக செயல்படுகிறோம் என்பதோ அர்த்தமில்லாத பேச்சு.

நடிகர் சங்கக் கடனை அடைத்ததில் எனக்கு பெரும் பங்குண்டு. விஜயகாந்த் தலைவராகவும், நான் செயலாளராகவும் பணியாற்றியபோது நடிகர் சங்கத்திற்கு 4 கோடியே 24 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. இந்த நேரத்தில் நான் ஒருவன்தான் வங்கிகளுக்கு அலையோ அலை என்று அலைந்து அவர்களிடம் பேசிப் பேசி 1 கோடியே 25 லட்சமாக கடன் தொகையைக் குறைத்தேன்.

அதில் 55 லட்சம் ரூபாயை உடனேயே கட்ட வேண்டும் என்றார்கள். அப்போது விஜயகாந்த் 10 லட்சம், நான் 5 லட்சம், அஜித்குமார் ஏழரை லட்சம் என்று ஒவ்வொரு நடிகர்களிடமும் வசூல் செய்து அந்த 55 லட்சத்தை திரட்டி வங்கியில் கட்டினோம்.

மீதமிருக்கும் 75 லட்ச கடனுக்காக சிங்கப்பூர், மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தி அதில் வசூலான பணத்தில் கடனை கட்டி முடித்தோம். அப்படியும் மீதமான 1 கோடி ரூபாய் சங்கத்தின் நிதியில் சேர்க்கப்பட்டது.

நடிகர் சங்கத்தின் தாய் பத்திரம் இன்னமும் சங்கத்தில்தான் இருக்கிறது. நிலம் விற்கப்படவில்லை. கட்டிடம் மட்டுமே இடிக்கப்பட்டது.

25-07-2010 அன்று நடந்த பொதுக்குழுவில் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் எனக்கும், ராதாரவிக்கும் வழங்கினார்கள்.

24-09-2010 – அன்று நடந்த செயற்குழுவில் ஸ்பை சினிமாஸுடனான ஒப்பந்தம் பற்றி உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

25-10-2010 – அன்று ஸ்பை சினிமாஸுடனான ஒப்பந்தம் கையெழுத்தானது.

30-11-2010 – அன்று நடந்த செயற்குழுவில் ஒப்பந்தம் கையெழுத்தானது தெரிவிக்கப்பட்டு, இதற்கு ஒப்புதல் பெற வேண்டி சிறப்பு பொதுக்குழுவைக் கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

29-12-2010 – அன்று சிறப்பு பொதுக்குழு கூடியது. இந்தப் பொதுக்குழுவிற்கு பூச்சிமுருகனும் வந்திருந்தார். அன்றைக்கு இந்த ஒப்பந்தம் பற்றி உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி எங்களை பாராட்டினார்கள்.  இந்த பொதுக்குழுவிலேயே கட்டிடத்தை கட்டும் பணியை ஆரம்பிக்கலாம் என்று எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

19-01-2011 – அன்று ஸ்பை சினிமாஸூடனான ஒப்பந்தம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது.

22-02-2011-ம் தேதியன்று முறைப்படி சென்னை மாநகராட்சியில் அனுமதி பெறப்பட்டு கட்டிடம் இடிக்கப்பட்டது. கட்டிடத்தை இடிக்க கட்டணமாக 10,42,130 ரூபாயை மாநகராட்சிக்கு கட்டினோம்.

நடிகர் சங்கத்தின் மொத்த இடம் 1 ஏக்கர். அதில் 1500 சதுர அடி கட்டிடத்தில்தான் சங்கம் இயங்கி வந்தது.  

சங்க இடத்தில் பிளாட்ஸ் கட்டலாம் என்று எஸ்.வி.சேகர் ஆலோசனை கூறினார். அப்படி கட்டினால் மாநகராட்சிக்கு கூடுதலாக இடங்களை தர வேண்டி வரும். அதனால் வேண்டாம்  என்று முடிவெடுத்தோம்.

ஸ்பை சினிமாஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தப்படி அந்த 1 ஏக்கர் நிலத்தில் 2500 சதுர அடியில் சங்கத்திற்கென்றே புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பது விதி. அந்த ஒட்டு மொத்த கட்டிடமே 29 வருடங்கள் 11 மாதங்கள் குத்தகைக்குத்தான் தரப்பட்டது.

புதிய கட்டிடம் கட்ட அதிகப்பட்சம் 15 கோடி ரூபாய் செலவாகும். இந்த 15 கோடியை 15 ஆண்டுகளில் தங்களால் மீட்க முடியாது என்று ஸ்பை சினிமாஸ் நிறுவனம் தெரிவித்ததால் நம்முடைய சங்கத்தின் ஆடிட்டர்கள், வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்கப்பட்டு அதன் பிறகு குத்தகை காலத்தை 29 வருடங்கள் 11 மாதங்கள் என்று நீட்டித்தோம்.

குத்தகைக் காலத்தில் சங்கத்திற்கு அந்தக் கட்டிடம் தொடர்பாக, அதன் பராமரிப்பு தொடர்பாக எந்தவொரு செலவும் இல்லை. அனைத்துமே ஸ்பை சினிமாஸ் நிறுவனத்தையே சாரும்.

இதன் மூலமாக மாதந்தோறும் சங்கத்திற்கு 24 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். குத்தகைக் காலம் முடிந்த பிறகு மொத்த இடமும் சங்கத்திற்கே திரும்பக் கிடைத்துவிடும்.

முன் வைப்புத் தொகையாக 1 கோடியே 48 லட்சம் ரூபாய் சங்கத்திலிருந்து ஸ்பை சினிமாஸுக்கு தரப்பட்டது. இந்தப் பணமும் 29 ஆண்டு காலம் கழித்து திரும்பவும் வட்டியுடன் சங்கததிற்கு தரப்பட வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது.

கட்டிடத்தை இடித்த பின்னர்தான் பூச்சி முருகன் வழக்கு தொடர்ந்தார். தடையுத்தரவை பெற்றார். பூச்சி முருகன் வழக்கை வாபஸ் வாங்கியிருந்தால் அன்றைக்கே நாங்கள் கட்டிடத்தைக் கட்டியிருப்போம்.

எங்களிடம் நேராக பேசாமல், பேச வராமல், பத்திரிகைகள் மூலமாக அவர்கள் கேள்வி கேட்டார்கள். பேசினார்கள். எதிரணியினரின் பொய்ப் பிரச்சாரம் எங்களை வருத்தத்திற்குள்ளாக்குகிறது.

நடிகர் கமல்ஹாசனிடம் கையெழுத்து இயக்கம் பற்றி நானே கேட்டேன். அப்போது அவர் ‘உங்க்கிட்ட அவங்க ஏதே பேசணும்னு சொல்றாங்களே?’ என்றார். ‘சரி.. வரச் சொல்லங்க ஸார். கண்டிப்பா நான் பேசுகிறேன்’ என்றேன். ஆனால் அவர்கள் வரவில்லை. அதற்குப் பதிலாக கையெழுத்து வேட்டைதான் நடத்தினார்கள்.

அவர்களுக்கு இந்த ஒப்பந்தம் ஆட்சேபணையாக இருந்தால் அன்றைக்கு அந்தப் பொதுக்குழுவுக்கு வந்திருந்து எதிர்ப்புத் தெரிவித்திருக்கலாமே..? ஏன் வரவில்லை. விஷாலுடன் இன்றைக்கு அணி சேர்ந்திருக்கும் யாரெல்லாம் பொதுக்குழுவுக்கு தவறாமல் வந்திருக்கிறார்கள்..?

கொஞ்சம், கொஞ்சமாக அவர்கள் தங்களது தாக்குதலை விரிவுபடுத்தி கடைசியாக இப்போது ‘ஊழல்’ என்று குற்றச்சாட்டு சொல்கிறார்கள். என்ன ஊழல் என்பதை அவர்கள் விளக்கவேயில்லை.

ஸ்பை சினிமாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தைவிடவும் மிகச் சிறப்பான ஒப்பந்தத்தை அவர்கள் கொண்டு வந்திருக்கலாமே..? ‘இதை பரிசீலனை செய்யுங்கள்’ என்று என்னிடம் சொல்லியிருக்கலாமே..? நிச்சயமாக ஸ்பை சினிமாஸைவிடவும் சிறப்பாக இருந்தால் நான் கண்டிப்பாக அதை ஏற்றுக் கொண்டிருப்பனே..? ஏன் அவர்கள் செய்யவில்லை..?

தேர்தலில் ஜெயித்துதான் நல்லது செய்ய வேண்டுமா.. இப்போதே… உறுப்பினர்களாக இருக்கும்போதே தற்போதைய நிர்வாகிகளுக்கான எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் இப்போதே நாங்கள் கட்டிடத்தை கட்டியிருப்போமே..?

சங்கத்திற்கு வருமான வரி சட்டப்படி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால்தான் வரி கட்டவில்லை. வருமானமே இல்லை. அதனாலும் வரி கட்டவில்லை. இதிலொன்றும் தவறில்லை. சங்கத்தின் ஆடிட்டரே இதற்கு கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார்..” என்றார் சரத்குமார்.

“பழைய நிர்வாகம் கட்டிடம் கட்டவில்லை. அதனால்தான் நாங்கள் போட்டியிடுகிறோம்..” என்றார்கள் நாசர் அணியினர். “கட்டிடம் கட்ட பூச்சி முருகனின் வழக்குதான் தடையாக இருக்கிறது. அதனை ஏன் வாபஸ் வாங்கச் சொல்லவில்லை..” என்கிறது சரத்குமார் தரப்பு.

“ஒப்பந்தம் போட்ட பின்புதான் செயற்குழு, பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றார்கள்…” என்று குற்றம் சாட்டுகிறது நாசர் தரப்பு. “அதற்கு முன்பேயே கட்டிடம் கட்டும் பணியினை செய்ய பொதுக்குழு சரத்துக்கும், ராதாரவிக்கும் சிறப்பு அனுமதியை தந்துவிட்டது..” என்கிறது சரத்குமார் தரப்பு.

“கட்டிடம் கட்ட ஒப்பந்தமிட்டதில் ஊழல் நடந்திருக்கிறது…” என்று கடைசி நேரத்தில் சொல்கிறது நாசர் தரப்பு. “நாங்கள் செய்த ஊழலுக்கு ஆதாரத்தைத் தாருங்கள்..” என்கிறது சரத்குமார் தரப்பு.

“ஜனநாயக உரிமைப்படி தேர்தலில் போட்டியிட எங்களுக்கும் உரிமையுண்டு. அதனால் போட்டியிடுகிறோம்..” என்கிறது நாசர் தரப்பு. “போட்டியிடலாம். ஆனால் ஊழல், லஞ்சம் என்று எங்களை குற்றம்சாட்டியதால் நாங்களும் போட்டியிடுகிறோம்..” என்கிறது சரத்குமார் தரப்பு.

ஆக மொத்தம்.. இந்தத் தேர்தலில் போட்டி ஏன் ஏற்பட்டது என்பதற்கான உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகளை  பரிசாக அளிக்கலாம்..!

Our Score