தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் என் மீது போலீஸில் கொடுத்துள்ள புகாரை சட்டப்படி சந்திப்பேன் என்றும், இந்த புகார் அரசியல் உள்நோக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க அறக்கட்டளையில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக நடிகர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் மீது விஷால் அணியினர் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
இந்தச் செய்தி வெளியான சில மணி நேரத்திலேயே, நடிகர் சரத்குமார் தனது கட்சி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்களுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு மத்திய குற்றப் பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமாரை சந்தித்து, ஒரு புகார் மனுவை கொடுத்தார்.
அதில், ‘‘நான் இந்திய சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் குடிமகன். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவராக உள்ளேன். எம்.பி.யாக இருந்து உள்ளேன். தற்போது தென்காசி எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். நான் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராக கடந்த 6 ஆண்டுகளும், தலைவராக கடந்த 9 ஆண்டுகளும் இருந்து வந்தேன்.
தற்போது உள்ள புதிய நிர்வாகிகள் கேட்ட வரவு-செலவு கணக்குகள் அனைத்தும் நடிகர் சங்க பொதுக் குழுவால் நியமிக்கப்பட்ட ‘ஆடிட்டர்’ மூலமாக தணிக்கை செய்யப்பட்டு, ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக நடிகர் சங்கம் சார்பாக கேட்கப்பட்ட ஒவ்வொரு கடிதத்திற்கும் முறையாக விளக்க கடிதங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில் வேண்டும் என்றே கெட்ட எண்ணத்தில் எனது வளர்ச்சியை தடுக்கும் விதமாக என் பெயருக்கும், புகழுக்கும் கட்சிக்கும், களங்கம் ஏற்படுத்தும் வகையில் என்மீதும், ஏற்கனவே இருந்த 2 அறங்காவலர்கள் மீதும் போலீஸ் கமிஷனரிடம் ஊழல் புகார் கொடுத்து உள்ளதாக பூச்சி முருகன் என்பவர் ஊடகங்கள் மூலம் செய்தி பரப்பி வருகிறார்.
இந்த புகாரில் உண்மையில்லை. இந்த செய்தியை பார்த்த பலர் போன் மூலம் என்னை விசாரித்தனர். இதனால் மன உளைச்சலுக்கும், மன வேதனைக்கும் ஆளாகியுள்ளேன். பூச்சி முருகன் தொடர்ந்து எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதை தடுத்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
புகார் மனுவினை அளித்துவிட்டு கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கேட்ட கணக்கு விவரங்கள் அனைத்தும், நடிகர் சங்கத்தால் நியமிக்கப்பட்ட ‘ஆடிட்டர்’ மூலம் தணிக்கை செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டு விட்டன. அதில் தவறு இருந்தால் மீண்டும் என்னிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். நானும் பதில் சொல்ல தயாராகவே இருக்கிறேன்.
அவர்களே விசேஷமாக ‘ஆடிட்டரை’ நியமித்து கணக்கினை சரி பார்த்து அதில் தவறு இருந்தால்கூட என்னிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். நான் பதில் சொல்லியிருப்பேன். ஆனால் விசேஷ ‘ஆடிட்டரை’ நியமிக்க நடிகர் சங்க பொதுக் குழுவில் முறையான ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்யவில்லை.
இப்போது, பூச்சிமுருகன் மூலம் நடிகர் சங்க அறக்கட்டளையில் ஊழல் நடந்திருப்பதாக தகவல் பரப்புகிறார்கள். வருமானமே இல்லாத சங்கத்தில் ஊழல் எப்படி நடந்திருக்க முடியும்..? இந்த அவதூறால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.
என் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் விருப்ப மனு வாங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வேண்டும் என்றே அரசியல் உள்நோக்கத்துடன் எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதற்காக இந்த அவதூறுகளை பரப்புகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கமிஷனரிடம் புகார் அளித்திருக்கிறேன். என் மீதான புகார்களை நான் சட்டப்படி சந்திப்பேன்..” என்றார்.
மறுபடியும் இவுங்க பஞ்சாயத்து களைகட்டும் போலிருக்கே..!