ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தமிழ்நாட்டில் தன் வெற்றிப் பயணத்தை ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் வெற்றியின் மூலமும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
வெளியான வார இறுதி நாட்களில் நல்ல ஓபனிங்கை கொடுத்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம் வார நாட்களிலும் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. கடந்த 5 நாட்களில் படத்தின் மொத்த வசூல் 6 கோடியே 29 லட்சம் என்று தியேட்டர் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ராதிகா, தம்பி ராமையா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதும் ரசிகர்களை படத்தை நோக்கி ஈர்த்திருக்கிறது.
கடந்த காலங்களிலும் ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’, ‘காக்கா முட்டை’ என பல அறிமுக இயக்குனர்களின் திறமையை மட்டுமே நம்பி, அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்.
அந்த வரிசையில் இந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் மூலம் ‘ஐக்’ என்ற திறமையான ஒரு இயக்குனரை கண்டுபிடித்து தமிழ் திரையுலகிறகு கொடுத்திருக்கிறது. மீடியம் பட்ஜெட்டில் உருவான இந்த படம் முதல் மூன்று நாட்களிலேயே நல்ல வசூலை கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் சக்ஸஸ் மீட் இன்று மதியம் தி.நகர் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடந்தது.
இயக்குநர்கள் கமல்ஹாசன், பிரியதர்ஷனிடம் தொழில் கற்று இந்த படத்தின் மூலம் இயக்குநராகி வெற்றி பெற்றிருக்கும் இயக்குநர் ஐக் பேசும்போது, “பல நண்பர்கள் எனக்கு ஃபோன் பண்ணி டிக்கட் கிடைக்கல.. வாங்கி கொடுங்கணு கேட்டப்போ அதைக் கேக்குறப்பவே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
அந்த அளவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்த தமிழ் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. அதேபோல் எனக்கு தோளோடு தோள் கொடுத்த என் மாமா ராதாரவியின் ஆதரவுக்கு ரொம்பவும் நன்றி. எனக்கு வாய்ப்பு கொடுத்த மகேந்திரன், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீக்கு நன்றி…” என்றார்.
நடிகர் சூரி பேசும்போது, “ஷூட்டிங்கில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை. படத்தில் ரசிகர்கள் மிகவும் ரசித்த வாழை இலை காமெடி காட்சிக்கு நாங்கள் பட்ட பாடு எனக்கும், ஜீவா சாருக்கும்தான் தெரியும். கிளைமாக்ஸ் காட்சியும் மறக்க முடியாத அனுபவம். என் மகள் படம் பார்த்து விட்டு ஒவ்வொரு காட்சியையும் ரசித்து பேசினாள். வாசிங் மெஷின் காமெடி சீனுக்கு வரும்போது உள்ளுக்குள்ள பதற்றமா இருந்திச்சு. ஆனா அது தெரியல. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் ரசிக்கிறார்கள்…” என்றார்.
நடிகர் ஜீவா பேசும்போது, “ஐக் படம்னு சொன்னவுடனே வேற மாதிரி படமா இருக்கும்னு தான் நினைச்சேன். ஆனா அதையெல்லாம் தாண்டி ஒரு குடும்பம், உணர்வுப்பூர்வமான கதையை இயக்கியுள்ளார். மிக பிரம்மாண்டமான யுவன் சங்கர் ராஜாவின் லைவ் ஷோவை ஐக்தான் இயக்கியிருந்தார். அவ்ளோ பெரிய ஷோவையே நடத்தி முடிச்சவர்.. ரொம்ப திறமையானவர்.
இத்தனை நடிகர்கள் நடித்திருந்தாலும் 55 நாட்களில் படத்தை முடித்தது ஐக்கின் திறமைக்கு உதாரணம். தம்பி ராமையா தவிர்த்து மற்ற நடிகர்களோடு முதல் முறையாக நான் நடித்திருக்கிறேன், இது எனக்குக் கிடைத்த ஒரு புதுமையான அனுபவம்.
தியேட்டரில் ரசிகர்கள் படத்தை அவ்வளவு ரசிக்கிறார்கள். இது எங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் விஜய் சிங், அட்லீ ஆகியோருக்கும், ரசிகர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி…” என்றார்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் சி.இ.ஓ. விஜய் சிங் கூறும்போது, “சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் வெற்றி எங்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நல்ல புதுமையான கதைகளை தேர்ந்தெடுத்து, சிறப்பான மார்க்கெட்டிங் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பதே எங்கள் நோக்கம். இந்த படத்தில் மூலம் ஐக் மற்றும் அட்லீயுடன் இணைந்தது மகிழ்ச்சி…” என்றார்.