நடிகர்களில் சிலர்தான் அவ்வப்போது ஆன்மீக பாதை தேடி அலைந்து, திரிந்து யாராவது ஒருவரை குருவாக ஏற்றுக் கொண்டு வேறொரு பாதையில் நடைபோடுவார்கள். நடிகைகளில் அநேகம் பேர் பக்திமான்களாக இருந்தாலும் முழுக்க, முழுக்க இறைப் பணியில் தங்களை ஆழ்த்திக் கொண்டதில்லை.
விதிவிலக்காக மோகினி போன்றோர் கிறித்துவ மதப் பிரச்சார பீரங்கியாகவே மாறிப் போனார்கள். இப்போது பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை என்று பெயரெடுத்த நடிகை சனாகானும் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இவர் சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ படத்தின் வழியாக தமிழுக்கு அறிமுகமானார். பின்னர் ‘பயணம்’ ‘ஒரு நடிகையின் டைரி’ என்று சில படங்களில் நடித்தார். மேலும், தெலுங்கு, கன்னடம் என பிற மொழிப் படங்களில் தனது கவர்ச்சிப் பயணத்தைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.
திடீரென்று இவருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை.. ஆன்மீகத்தில் இறங்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார். அதுவும் அவர் சார்ந்த இஸ்லாமிய மதம் காட்டும் தீவிர இறைப் பணியைத் தொடர்வதாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதிய கடிதத்தில், “இப்போது எனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.
இத்தனை நாட்களாக நான் சினிமா துறையில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் விரும்பப்பட்டு அவர்களால் பெயரும், புகழும், பணத்தையும் அடைந்து பெருமதிப்புடன் வாழ்ந்து வந்திருக்கிறேன்.
ஆனால், தற்போது சில நாட்களாக என் மனதுக்குள் ஒரு போராட்டம்.. ஒரு மனிதன் இந்த உலகத்தில் பிறந்து வாழ்வது என்பதே பெயருக்கும், புகழுக்கும் மட்டும்தானா.. என்ற கேள்வி எனக்குள் ஓடிக் கொண்டேயிருக்கிறது.
மனிதனோ, மனுஷியோ எப்பவும் இறந்து போகலாம். மரணம் என்பது சொல்லிவிட்டு வருவதில்லை. இறந்த பின்னர் அவன் என்னவாகிறான்..? இந்த கேள்விக்கான விடையைத் தேடினேன், எனது மதம் இது பற்றி என்ன சொல்கிறது..?
இந்த மரணத்துக்குப் பின்னர்தான் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன். எனவே படைத்தவனின் கட்டளைக்கு இணங்க பாவப்பட்ட மனித வாழ்க்கையை தவிர்த்து, மனித இனத்துக்கு சேவை செய்ய முடிவு செய்திருக்கிறேன்.
அதனால் சினிமாவுக்கு நிரந்தரமாக விடை கொடுத்துவிட்டேன். இனிமேல் யாரும் என்னை சினிமாவில் நடிக்கக் கூப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்..” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.