மஞ்சு வாரியரின் ‘பிரதி பூவன் கோழி’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது

மஞ்சு வாரியரின் ‘பிரதி பூவன் கோழி’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாரினியாக இருக்கும் நடிகை மஞ்சு வாரியர் நடித்த ‘பிரதி பூவன் கோழி’ என்னும் திரைப்படம் தமிழுக்கு வரவிருக்கிறது.

இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியிருக்கிறார்.

‘பிரதி பூவன் கோழி’ திரைப்படம் ஆணாதிக்க உணர்வை எதிர்த்துப் போராடத் துணியும் ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படத்தில் பேருந்தில் பயணிக்கும்போது தன்னிடம் தவறாக நடந்து கொண்ட ஒருவனை விரட்டிப் பிடித்து அடித்து உதைக்கும் காட்சி மலையாள ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பினைப் பெற்றது.

இந்தப் பரபரப்பான காட்சியில் படத்தின் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸே நடித்திருந்தார். இத்திரைப்படம் இன்றைய இந்தியா இருக்கும் சூழலில் படமாக்கி வெளியிட்டால் நிச்சயமாக பேசப்படும் என்னும் உண்மையை உணர்ந்து கொண்டு போனி கபூர் படத்தை மொழி மாற்றம் செய்யத் துணிந்திருக்கிறார்.

தமிழிலும் மஞ்சு வாரியாரே நடிப்பார் என்று தெரிகிறது. அவர் அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்திற்கு வெயிட் கொடுத்து நடிக்க இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் ஜோதிகா மட்டுமே இருக்கிறார். ‘அசுரன்’ படத்தில் நடித்ததற்காக தமிழ் மக்களிடையே மஞ்சு வாரியர் ஒரு கவன ஈர்ப்பினை செய்திருப்பதால் அவரே இந்தப் படத்திலும் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.