நமது சென்னையை அடுத்த பல்லாவரத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சமந்தா, தெலுங்குலகின் மிகப் பெரிய பாரம்பரியமிக்க குடும்பங்களான அக்கினேனி மற்றும் டக்குபதி சாம்ராஜ்யத்தில் ஒரு மருமகளாகப் போவது உறுதியாகிவிட்டது.
பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவின் மகனான நாகார்ஜூனா, டக்குபதி குடும்பத்தின் மூத்தவரும், தெலுங்கு உலகின் மிகப் பெரிய தயாரிப்பாளருமான டி.ராமாநாயுடுவின் மகள் லட்சுமியை மணந்திருந்தார். இவர்களுக்கு பிறந்தவர்தான் நாக சைதன்யா. மகன் பிறந்த ஒரு வருடத்திலேயே நாகார்ஜூனாவும், லட்சுமியும் மன வேற்றுமையால் பிரிந்து முறைப்படி விவாகரத்து செய்து கொண்டார்கள்.
இதன் பின்பு நாகார்ஜூனா நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன்தான் அகில். லட்சுமியும் விஜயராகவன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். மகன் நாக சைதன்யாவை நாகார்ஜூனாவே, தெலுங்குலத்திற்கு ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
2009-ம் ஆண்டு ‘ஜோஷ்’ என்கிற தெலுங்கு படத்தில் அறிமுகமான நாக சைதன்யா அந்தப் படத்திற்கே சிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றவர். இதுவரையிலும் 10 படங்களில் நடித்திருக்கும் நாக சைதன்யா தற்போது ‘பிரேமம்’ தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.
2010-ம் ஆண்டு ye maaya chesave என்கிற படத்தில்தான் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இதன் பின்பு 2014-ம் ஆண்டு ‘மனம்’ என்ற படத்திலும், ‘ஆட்டோ நகர் சூர்யா’ என்ற படத்திலும் சமந்தாவுடன் ஜோடியாக நடித்தார் நாக சைதான்யா. இந்தக் காலத்தில்தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
சமந்தாவும் இதற்கு முன்பே நடிகர் சித்தார்த்தை காதலித்துக் கொண்டிருந்தது ஊரறிந்த விஷயம். சித்தார்த் சொந்தமாகத் தயாரித்த ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குக்கூட சமந்தா ஸ்பெஷல் கெஸ்ட்டாக வந்து அசத்தியிருந்தார்.
சித்தார்த்தின் குடும்பத்தினருடன் சேர்ந்து காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று வேண்டுதலையெல்லாம் செய்துவிட்டு வந்தார் சமந்தா.
ஆனால் கொஞ்ச நாளிலேயே இருவருக்குள்ளும் காதல் பிரேக்கப்பாக.. அந்தப் பக்கம் சமந்தாவுக்கு நாக சைதன்யாவுடன் காதல் பற்றிக் கொண்டது போலும். சென்ற மாதம்தான் டிவிட்டரில் சமந்தா தனது காதலர் பற்றியும், திருமணம் பற்றியும் ஒரு செய்தியைப் போட்டு பற்ற வைத்திருந்தார். யார் அந்த தெலுங்கு நடிகர் என்று ஆராயப் போய் அது கடைசியாக நாக சைதன்யாவின் பக்கம் போய் நின்றது.
இதுவரையிலும் நாக சைதன்யாவும், சமந்தாவும் வெளிப்படையாக இது பற்றி பேசவில்லையென்றாலும் ஒரு திரைப்பட அரங்கில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகி அவர்களது காதலை உறுதிப்படுத்தியது.
இதற்கு மேலும் வலுவூட்டும்விதமாக நாக சைதன்யாவின் அப்பாவான நாகார்ஜூனா தெலுங்கு மீடியாக்களிடம் நேற்றைக்கு பேசும்போது, “நாக சைதன்யா தனது வாழ்க்கை குறித்து எடுத்திருக்கும் முடிவில் எனக்கும், அமலாவுக்கும் சந்தோஷம்தான்..” என்று சொல்லியிருக்கிறார்.
அதே சமயம், நாகார்ஜூனா, அமலா தம்பதியினரின் மகனான நடிகர் அகிலும் தானும் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்லி ஒரு மாடலிங் பெண்ணை தனது பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறாராம். இது பற்றியும் பேசியிருக்கும் நாகார்ஜூனா, “அகிலுக்கு நிச்சயத்தார்த்தம் என்கிற செய்தியெல்லாம் உண்மையில்லை. அது வதந்திதான்..” என்று அதற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
நடிகர் சித்தார்த் சில மாதங்களுக்கு முன்பாக போட்டிருந்த ஒரு ட்வீட் இப்போது நினைவுக்கு வந்து தொலைகிறது.
“நாகூர் பிரியாணி, உளுந்தூர்பேட்டைல இருக்கும் தெரு நாய்க்குத்தான் கிடைக்கணும்னு இருந்தால் அதை யாராலேயும் தடுக்க முடியாது..” என்று கடந்த ஜனவரி 28-ம் தேதியன்று தனது ட்வீட்டர் பக்கத்தில் ‘தமிழ்’, ‘தத்துவம்’ என்கிற தலைப்பில் டிவீட் செய்திருந்தார் சித்தார்த். அதற்கு முந்தைய நாள்தான் நடிகர் தனுஷ், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது.
சித்தார்த் தனுஷை கிண்டல் செய்துதான் இப்படி எழுதியிருக்கிறார் என்று சொல்லி செய்திகள் பரவ.. சித்தார்த்தும் படபடப்புடன், “நான் தனுஷை குறி வைத்து சொல்லவில்லை. ச்சும்மா யதார்த்தமா போட்டதுதான்..” என்று இதற்கு விளக்கமெல்லாம் கொடுத்து ஓய்ந்து போனார்.
ஆனால் இப்போது யோசித்து பார்த்தால், அந்த ட்வீட் தனுஷுக்காக போட்டது போல தெரியவில்லை. அப்படியானால்..?