full screen background image

“கதை கேட்டவுடனேயே நடிக்க சம்மதித்தார் சமந்தா” – ‘யசோதா’ தயாரிப்பாளரின் நன்றி பேச்சு..!

“கதை கேட்டவுடனேயே நடிக்க சம்மதித்தார் சமந்தா” – ‘யசோதா’ தயாரிப்பாளரின் நன்றி பேச்சு..!

நடிகை சமந்தா கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கும் ‘யசோதா’ திரைப்படத்தை தெலுங்குலகின் மூத்தத் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தெலுங்கு சினிமா துறையில் 40 வருடங்களாக பணியாற்றி வருகிறார். 450-க்கும் மேற்பட்ட மொழி மாற்றம் செய்த படங்களை ஆந்திராவில் அவர் வெளியிட்டு இருக்கிறார். ‘ஆதித்யா 369’ போன்ற கல்ட் க்ளாஸிக் படங்களை அவர் தயாரித்தும் இருக்கிறார்.

இப்போது அவர் பான் இந்தியா படமான ‘யசோதா’ வை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் நவம்பர் 11ம் தேதி வெளியிட இருக்கிறார். இந்த ‘யசோதா’ படம் குறித்தான சில சுவாரஸ்யமான தகவல்களை ஊடகத்திடம் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் பகிர்ந்து இருக்கிறார்.

“இந்த ‘யசோதா’ படத்தைப் பான் இந்தியா அளவில் வெளியிடவும் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் சரியான நபராக சமந்தா இருப்பார் என நினைத்தோம். ’ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸ் மூலம் தேசிய அளவில் பார்வையாளர்களின் கவனத்தை சமந்தா கவர்ந்திருந்தார்.

அதனால், அவர் இந்தக் கதையைக் கேட்பாரா இல்லையா என்ற சந்தேகமும் இருந்தது. சமந்தா எல்லாருடையக் கதைகளையும் கேட்கத் தயாராக இருப்பதாக அவரின் மேலாளர் மகேந்திரா எங்களுக்கு நம்பிக்கைக் கொடுத்தார்.

கடைசியாக சென்ற வருடம் செப்டம்பர் 8-ம் தேதி அவர் இந்த யசோதா கதையைக் கேட்டதும் உடனே நடிக்க ஒத்துக் கொண்டார். மேலும், பல மொழிகளில் வெளியாவதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார். வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பல முக்கியமான நடிகர்களைத் திரைக்கதையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தோம்.  

’யசோதா’ படத்தின் கதையைக் கேட்ட நொடியில் இருந்து அவர் கதையுடன் பயணம் செய்ய ஆரம்பித்தார். ’சாகுந்தலம்’ படம் முடித்ததும் அவருடைய கவனம் முழுவதும் இந்தப் படம் மீதுதான் இருந்தது.

சமந்தாவின் உடல் நிலை பற்றி டப்பிங்கின்போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. அவர் தெலுங்கில் டப்பிங் பேசிய அதே சமயம் தமிழிலும் அவரே டப்பிங் பேசினார். அப்போது அவர் எனர்ஜி லெவல் குறைவாகவே இருந்தது. வேறு டப்பிங் கலைஞரைக் கொண்டு வரலாம் என நாங்கள் கருத்து தெரிவித்தோம்.

அவர் குரல் தமிழில் அனைவருக்கும் தெரியும் என்பதால் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் டப்பிங் பணிகளை மேற்கொண்டார்.  அவரின் அர்ப்பணிப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். இந்தியில் சமந்தாவுக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார்...” என்றார் தயாரிப்பாளர்.

Our Score