‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலமாக இந்தியாவிலேயே அதிகச் சம்பளம் பெற்ற இயக்குநராக உருவெடுத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
கடந்த மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன்-1’ படம், உலகம் முழுவதும் தமிழர்களையும் தாண்டி சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டது.
240 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் வசூல், தற்போது 500 கோடியையும் தாண்டிவிட்டது என்கிறார்கள் திரையுலகத்தினர்.
இந்தப் படத்தை லைக்காவுடன் இணைந்து மணிரத்னம் தனது ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தில் ‘ஆதித்ய கரிகாலனாக’ நடித்த விக்ரம் 10 கோடி சம்பளம் பெற்றதாக அதிகாரப்பூர்வம் இல்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ‘வந்தியதேவனாக’ நடித்த கார்த்திக்கு 8 கோடியும், ‘அருள்மொழி வர்மனாக’ நடித்த ஜெயம் ரவிக்கு 8 கோடியும், ‘நந்தினி’யாக நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு 8 கோடியும், ‘குந்தவை’யாக நடித்த த்ரிஷாவுக்கு 1.5 கோடி சம்பளமும். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு 4 கோடியும் சம்பளமாக கொடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர மற்றைய நடிகர், நடிகைகளுக்கும் சேர்த்து மேலும் 10 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாம். இந்த வகையில் இந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகையருக்கு சம்பளமாகவே 49 கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இத்திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 95 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது. மேலும் ஆந்திராவில் 11 கோடி, கேரளாவில் 5.5 கோடி, கர்நாடகாவில் 3.5 கோடி மற்றும் ஹிந்தியில் 13 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இப்படி அனைத்து இந்திய மொழிகளிலும் ஒட்டு மொத்தமாக இந்தப் படம் 429 கோடியே 75 லட்சத்தை வசூல் பண்ணியுள்ளது. மேலும் படம் சம்பந்தமான மற்றைய உரிமங்களின் மூலமாகவும் இந்தப் படத்திற்கு கூடுதலாக 190 கோடி கிடைத்துள்ளது.
இப்படத்தை இயக்கியதற்கான சம்பளமாக 60 கோடி ரூபாயை மணிரத்தினம் பெற்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல் கோடம்பாக்கத்தில் வலம் வருகிறது.
மேலும் படத்தின் லாபத்திலும் பங்கு என்ற ஒப்பந்தத்தின்படி மேலும் 60 கோடி ரூபாய் மணிரத்னத்திற்குக் கிடைத்துள்ளதாம். மொத்தமாக இந்தப் பொன்னியின் செல்வன் படம் மூலமாக இயக்குநர் மணிரத்னத்திற்கு 120 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

அந்த வகையில் இந்திய சினிமாவில் எந்தவொரு இயக்குநரைவிடவும் உயர்ந்தபட்ச சம்பளத்தை மணிரத்னம் வாங்கியதோடு, நடிகர்களின் சம்பளத்தையும் தாண்டி சாதனை படைத்திருக்கிறாராம்.
நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் ‘வாரிசு’ படத்திற்காக 118 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளாராம். இப்போது இயக்குநர் மணிரத்னம் இதைவிடவும் கொஞ்சம் கூடுதலாக 2 கோடியைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் இந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலமாக லைகா நிறுவனத்திற்கு 140 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இது முதல் பாகத்தின் வரவு-செலவுதான்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக ஆயிரம் கோடியை வசூல் செய்யும் என்று இப்போதே திரையுலகத்தில் பேச்சு எழுந்துள்ளது.