மும்பை, தென்னிந்தியாவுக்கு குறிப்பாக தமிழ் திரை உலகிற்கு ஏராளமான அழகு பதுமைகளை தந்ததுண்டு. இப்போது ‘சரபம்’ படத்தின் மூலம் தன நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் கவர்ந்த ‘சலோனி லூத்ரா’ திமிறும் அழகுடன், மூட்டை மூட்டையாக திறமையுடனும் தமிழ் திரையுலகிற்கு வந்துள்ளார்.
‘கதக்’ நடனத்தில் தேர்வு பெற்ற சலோனி நடிப்பில் Theatre எனப்படும் பயிலரங்குகளில் பயிற்சி பெற்றுள்ளார். மும்பையில் திரை கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் கபூருடன் இணைந்து நடனம் ஆடியது தன்னுடைய வாழ்வில் முக்கிய தருணம் என்கிறார் சலோனி. அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ரன்வீர் கபூர் தன்னிடம் “உன் கவனத்தை திரை உலகம் பக்கம் திருப்பு..” என்று சொன்னதுதான் தனக்கு தூண்டுகோலாக இருந்தது.. என்கிறார்.
பிரபல தயாரிப்பாளரான சி.வி. குமார் தயாரிப்பில் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனது தன்னுடைய பாக்கியம் என கூறும் இவர் ‘சரபம்’ கதாபாத்திரத்தை வடிவமைத்த இயக்குனர் அருண் குமார், அந்த பாத்திரத்துக்கு உயிர் ஊட்டியதை போலவே தன்னுடைய நடிப்பு பயணத்துக்கும் உயிர் ஊட்டியதை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.
“நான் பார்த்தது குறைந்த அளவே தமிழ் படங்கள் என்றாலும், அதில் என்னை மிகவும் கவர்ந்தது விக்ரம் சாரின் ‘அந்நியன்’தான். நொடியில் முகம் மாறும் அந்த நடிப்புதான் எனக்கு உந்துதல் என்று சொல்லலாம். ‘சரபம்’ படத்தில் நான் இந்த அளவுக்கு நடித்து இருப்பதற்கும், அந்த கதாபாத்திரத்தின் வெற்றிக்கும் விக்ரம் சாருக்குத்தான் நன்றி சொல்வேன்.
‘சரபம்’ படத்தில் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது புகை பிடிக்கும் காட்சிகள்தான். எனக்கு அந்த பழக்கம் இல்லை என்பதால் நான் பல்வேறு படங்களில் கதாநாயகிகள் புகை பிடிப்பதை பார்த்து தெரிந்து கொண்டு அவைகளின் சாயலே இல்லாமல், எனக்கென ஒரு ஸ்டைலை ஏற்படுத்திக் கொண்டு அந்தக் காட்சியில் நடித்தேன்.
இப்போது சென்னையின் சூழ்நிலையும், தமிழ் சினிமாவும் பிடித்து விட்டதால் இங்கேயே குடியிருக்கலாம் என முடிவும் செய்துள்ளேன். இதுவரை எனக்கு வரும் வாய்ப்புகள் எல்லாமே ‘சரபம்’ படத்தின் பாத்திரம் போலவே உள்ளது. அதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்கவே எனக்கு விருப்பம்..” என்கிறார் சலோனி லூத்ரா.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், இவங்களையும் வாழ வைச்சிராதா என்ன..? பொறுமையுடன் காத்திருங்கள் மேடம்..!