full screen background image

பிரபாஸின் ‘சலார்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

பிரபாஸின் ‘சலார்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

‘கே.ஜி.எஃப்.’ படத்தின் தயாரிப்பாளரும், ‘பாகுபலி’ படப் புகழ் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாசும் இணைந்து உருவாக்கி வரும் ‘சலார்’ படத்தின் வெளியீட்டு தேதியையும், புதிய போஸ்டரையும் பட குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்திய படைப்பு ‘சலார்’.

ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ‘கே ஜி எஃப்’ பட புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் இந்தப் படம் தயாராகியிருக்கிறது.

இந்த ‘சலார்’ திரைப்படம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வருகிறது. பான் இந்திய அளவிலான எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படங்களில் ஒன்றாக இந்த சலாரும்’ இடம் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், பிருத்விராஜ் சுகுமாரன், ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிரடி ஆக்சன் மற்றும் சாகசங்கள் நிறைந்த காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.  

இப்படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால், தயாரிப்பாளர்கள் இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். இதன் காரணமாக தற்போது ‘சலார்’ படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த ‘சலார்’ படத்தில் பிரபாஸின் கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தை காண்பதற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்தார்கள்.

ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்றைக்கு பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

முழு நீள ஆக்சன் படமான இந்த ‘சலார்’ திரைப்படம் அடுத்தாண்டு செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என்று இன்றைக்கு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் இப்படத்திற்கான இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒட்டு மொத்தக் குழுவும் திட்டமிட்டபடி இயங்கி வருகிறது.

Our Score