விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தைத் தயாரித்து. நாயகனாக நடித்தும் இருக்கிறார். இப்படம் விஜய் ஆண்டனியின் 25-வது படமாகும்.
இப்படத்தை ‘அருவி’ படத்தின் இயக்குநர் அருண் பிரபு இயக்கியிருக்கிறார். இசையை விஜய் ஆண்டனியே அமைத்திருக்கிறார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நடிகை திருப்தி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
கொள்ளையடிப்பதற்கும், திருடுவதற்கும் லைசன்ஸ் கொடுத்த எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சாக இருக்கும் இந்திய அரசியல் களத்தில் ஒரு சாதாரண மனிதன் எப்படி தன்னுடைய அரசியல் சித்து விளையாட்டை விளையாண்டு, அரசியல் புரோக்கராக மாறி மிகப் பெரும் பணக்காரனாகிறான் என்பதுதான் இந்த படத்தின் அடிப்படைக் கதை.
மயிலாடுதுறையைச் சேர்ந்த கிட்டு என்ற விஜய் ஆண்டனி இப்போது சென்னையில் பவர்ஃபுல் பொலிடிகல் புரோக்கராக இருக்கிறார். தலைமைச் செயலகத்தில் அவர் என்ன சொன்னாலும் நடக்கும். எதை வேண்டுமானாலும் அவர் செய்து காட்டுவார்.
ஒரு போலீஸ் ஐஜிக்கே டிரான்ஸ்பர் வாங்கி தருகிறார். அமைச்சர்கள் இருவருக்கும் இடையில் டீலிங் முடித்துக் கொடுக்கிறார். தனியார் நிறுவனங்கள் தங்களுடைய தேவைகளை இவர் மூலமாகவே தீர்த்துக் கொள்கின்றன. பணம் எதிர்பார்க்கும் அதிகாரிகளுக்கு பணத்தை வாங்கி கொடுக்கிறார். பணம் இல்லாமல் சல்லாபங்களில் ஈடுபட விரும்பும் அதிகாரிகளுக்கு அதையும் சப்ளை செய்கிறார். அதே சமயம் கொஞ்சம் ஈர மானதோடு ஏழைகள் பாளைகளுக்கும் வேண்டியதையும் உடனே செஞ்சு முடித்து கொடுக்கிறார்.
நீண்ட பல வருடங்களாக சென்னையில் மத்தியில் ஆளும் கட்சியின் அதிகார மையமாக இருக்கும் சுனிலின் மிக நெருங்கிய ஆதரவாளராகவும் இருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த நேரத்தில் சுன்னிலை இந்தியாவின் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்க மத்தி அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் ஒரு பெண் அமைச்சர் சில அரசியல் முன்னெடுப்புகளை செய்ய இதை அறியும் விஜய் ஆண்டனி அதை கெடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்கிறார்.
அந்தப் பெண் அமைச்சருக்கும், சுனிலுக்குமான நட்பில் இடையில் புகுந்து சில சித்து வேலைகளை விஜய் ஆண்டனி செய்ய, இப்போது ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலேயே சுனில் இல்லாத சூழல் ஏற்படுகிறது.
திடீரென்று தங்களை சுற்றி அமைக்கப்பட்ட ஒரு பொறியில் நாம் எப்படி சிக்கிக் கொண்டோம் என்பதை உணரும் மத்திய பெண் அமைச்சரும், சுனிலும் கொஞ்சம் யோசித்து இதில் ஏதோ சூது இருக்கிறது என்பதை உணர்ந்து தங்களை சுற்றி வலைப் பின்னல் செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க டெல்லியிலிருந்து ஒரு போலீஸ் உயர் அதிகாரியை சென்னைக்கு வரவழைக்கிறார்கள்.
அந்த போலீஸ் அதிகாரி கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க துவங்க அனைவரின் கைகளும் கிட்டுவையே காட்டுகின்றன. இப்போது கிட்டு இவர்களிடமிருந்து தப்பித்தாரா? இல்லையா? இவருக்கும் சுனிலுக்கும் என்ன சண்டை? உண்மையில் கிட்டு ஏன் இதை எல்லாம் செய்கிறார்? அவர் எப்படி இந்த 6000 கோடி ரூபாயை சம்பாதித்தார்?.. என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
விஜய் ஆண்டனிக்கு மிகவும் பொருத்தமான கதை இது. பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு ஒரு ஃபாஸ்ட் ஸ்கிரீன்பிளே படத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார்.
அவருடைய தீர்க்கமான பார்வையே படத்தில் பல கதைகளை சொல்கின்றன. பல வசனங்களையும் பேசுகின்றன. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் தன்னுடைய நடிப்பை வைத்தே மொத்தக் கதையையும் நகர்த்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி.
கடைசி வரையிலும் தான் எதற்காக இதையெல்லாம் செய்தேன் என்பதை அவர்களிடத்தில் சொல்லிக் காட்டாமல் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு அரசியல் அதிகார வர்க்கத்தை வைத்து செய்யும் விஜய் ஆண்டனியை நமக்கு ரொம்பவே பிடித்துப் போகிறது.
பார்த்த மாத்திரத்திலேயே நாயகி மீது காதலில் விழுந்து பிறகு, கல்யாணம் நடந்து பிறகு, மனைவியை நட்டாத்தில் விட்டு விட்டு தப்பி ஓடுகின்ற அந்த சில காட்சிகளில் கொஞ்சம் உருக்கத்தையும் காட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி.
இரண்டாம் பதிவில் மிக அதிகமான வசனங்களை மட்டுமே பேசி திரைக்கதையை நகர்த்தி இருப்பதால் அதில் அன்னாரின் நடிப்பை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
ஹீரோயினாக நடித்திருக்கும் திருப்தி ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்ணாக காட்ட வேண்டும் என்பதால் அவரை தேர்வு செய்திருக்கிறார்கள் போலும்! ஆனாலும் மிக அடக்கமாக, அழகான, அமைதியான குணமுள்ள அந்தக் கதாபாத்திரத்திற்கு இந்த நடிகை கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
காதல் ஓவியம் திரைப்படத்தில் கண்ணனாக நடித்து அந்த ஒரு படத்தோடு தமிழ் சினிமாவை விட்டு விலகிப் போன சுனில் இந்தப் படத்தில் ஒரு பவர்ஃபுல்லான மத்திய அரசின் ஏஜென்ட், தொழிலதிபர், அரசியல் புரோக்கர் என்று பல்வேறு கேரக்டர்ஸ்களை ஏற்று மிக அழகாக நடித்திருக்கிறார்.
அவருடைய பேச்சு, நடை, உடை, டயலாக் டெலிவரி அனைத்துமே இதுவரை நாம் பார்க்காத ஒரு வில்லனைக் காட்டுகிறது. யாரையும் பார்க்க கூடாது.. எதற்கும் தயங்கக் கூடாது.. நாம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எவரையும் பலி கொடுக்கலாம் என்கின்ற அரசியல் சித்து விளையாட்டை பல காட்சிகளில் வசனத்தின் மூலம் சொல்லி நடித்திருக்கும் சுனில் இன்றைய பல அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
விஜய் ஆண்டனியின் தாத்தாவாக நடித்திருக்கும் வாகை சந்திரசேகரன் பெரியாரின் தொண்டன் என்கின்ற வகையில் அவருடைய கேரக்டர்ஸ்க்கு ஏற்ற நடிப்பை காண்பித்திருக்கிறார்.
மறைந்த நடிகர் விவேக்கின் அனைத்து படங்களிலும் அவருக்கு உதவியாளராக நடித்திருக்கும் செல் முருகன் இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஆண்டனியின் உதவியாளராக, நண்பனாக, குணசித்திர வேடத்தில் அழகாக நடித்திருக்கிறார்.
மேலும் சிறப்பு போலீஸ் அதிகாரியாக வருபவரும், வித்தியாசமான தோற்றத்தில் இப்போதுதான் முதல் படத்தில் பார்ப்பது போல சிறப்பாக நடித்திருக்கிறார், அவருடன் மற்ற போலீஸ் அதிகாரிகள், அரசியல் வியாதிகள் என்று அனைவருமே நாம் இதுவரையில் பார்த்திருக்காது பலரையும் நடிக்க வைத்து நம்மை கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
கதைக்குப் பொருத்தமான ஒரு ஒளிப்பதிவினை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி. வேகமான திரைக்கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடிப்பையும் சிங்கள் சாட்டிலேயே ஓகே சொல்லி இருப்பது போல இந்த படம் வேகவேகமான காட்சிகளால் நிரம்பி வழிகிறது.
விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் கொஞ்சம் சுமார் ரகம்தான். ஆனால் பின்னணி இசையில் அடித்து அடி இருக்கிறார். எந்த அளவுக்கு நம்மை அடுத்தடுத்த காட்சிகளுக்கு தயார்படுத்த முடியுமோ, அதேபோல் இசையின் மூலமாகவே நம்மை படம் முழுவதும் ரசிக்க வைத்திருக்கிறார்.
கலை இயக்குனரையும் நாம் வேகமாக பாராட்ட வேண்டும். இந்த படத்தில் காட்சிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் அந்த இடத்தின் சூழலுக்கு ஏற்ப மிக அழகாக வடிவமைத்து தந்திருக்கிறார்.
பொதுவாக அரசியல் என்றால் நிச்சயமாக அது ஏமாற்று வேலை என்கின்ற கருத்துதான் இந்திய மக்களுடைய மனதில் நிரம்பி இருக்கிறது. அதை எந்தவித குறையையும் இல்லாமல் நீங்கள் நினைத்ததை எல்லாம் நாங்கள் படத்தில் காட்டி இருக்கிறோம். இந்த படத்திற்கு வந்து பாருங்கள் என்று சொல்லாமல் செய்வதை போல இயக்குநர் அருண் மிக அழகான வேகமான ஒரு திரைக்கதையினால் இந்தப் படத்தை முழுமையாக ரசிக்கவும் பார்க்கவும் வைத்திருக்கிறார்.
எதிர்க் கட்சிகளே பெயர் சொல்லக்கூட பயப்படும் இந்தக் காலத்தில் நிர்மலா சீத்தாராமனைப் போலவும், குருமூர்த்தி போலவும் கதாப்பாத்திரங்களை வடிவைத்திருக்கும் இந்த இயக்குநரையும், விஜய் ஆண்டனியையும் வெகுவாகப் பாராட்டுகிறோம்.
முதல் பாதியில் அரசியல் களேபரத்தில் திரைக்கதை பறக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ வேண்டிய கட்டாயம் இருப்பதால் படம் மெதுவாக நகர்வதைப் போல தெரிகிறது.
படத்தில் நாம் மிகவும் குறையாக பார்ப்பது, அளவுக்கு அதிகமான ஆங்கில வசனங்கள்தான். அதோடு விஜய் ஆண்டனி வசனத்தை உச்சரிக்கும் பாங்கினால் சில வசனங்கள் சட்டென்று நமக்குப் புரியாமலேயே போய்விட்டது.
லாஜிக் எல்லாம் பார்த்தால் எந்த படமும் உண்மை இல்லை என்றே சொல்லுவோம். அதேபோல் இந்த படத்திலும் சில, பல காட்சிகள் லாஜிக் இல்லாமல் இருந்தாலும் லஞ்சம், ஊழல் என்று வரும் பொழுது அதை செய்பவர்கள், எதை வேண்டுமானாலும் எதிர்கொள்வார்கள்.. எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது நமக்குத் தெரியும் என்பதால் இந்தப் படத்தில் லாஜிக் எல்லை மீறலை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அதிகார வர்க்கம் சட்டென்று தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுக்க வராது. எந்த இடத்திலும் இறங்கி வரவும் தயாராக இருக்காது. அந்த வகையில் அரசியல் என்ற புலியின் வாலை படித்தால் நிச்சயமாக அதில் அல்லல்பட்டுத்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு பிரச்சனையை தான் விஜய் ஆண்டனி இந்த படத்தில் சந்தித்து இறுதியாக அதில் இருந்து தெளிவு பெறுகிறார்.
ஒரு குற்றத்தை தடுப்பதற்கு இன்னோரு குற்றத்தின் மூலமாக சென்றால்தான் முடியும் என்று நினைப்பதும், சொல்லுவதும் தவறுதான். ஆனால் வேறு வழியே இல்லாமல் அரசியல்வாதிகளை சமாளிக்க வேண்டும் என்றால் இப்படியும் சில நேரங்களில் செயல்பட்டாக வேண்டும் என்பதை இந்தப் படத்தின் ஹீரோவின் வாழ்க்கையில் இருந்து இயக்குநர் அருண் பிரபு சொல்லி இருக்கிறார்.
ஒரு சாதாரண கமர்சியல் படமாக பார்த்தால்கூட இந்த சக்தி திருமகன் திரைப்படத்தை நிச்சயமாக நாம் அமர்ந்து ரசிக்கலாம்.
அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. மிஸ் பண்ணிராதீங்க..!
RATING : 4 / 5