லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்படும் ‘அப்பாடக்கர்’ என்ற படத்தின் பெயர், ‘சகலகலாவல்லவன் அப்பாடக்கர்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த ‘அப்பாடக்கர்’ படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா, அஞ்சலி நடித்திருக்கின்றனர். மேலும் விவேக்கும், சூரியும் நடித்திருக்கின்றனர். U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா எடிட்டிங் செய்திருக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். சுராஜ் இயக்கியிருக்கிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ்.ரங்கராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
‘அப்பாடக்கர்’ என்கிற பெயர் வழக்கு தமிழில் இருந்தாலும் நிறைய பேருக்கு இதன் அர்த்தம் புரியாது என்பதாலும் கதையில் ஹீரோவின் கேரக்டருக்கு கெத்து ஏற்றுவதுபோல வேறொரு அழுத்தமான பெயர் இருந்தால் நன்றாக இருக்குமே என்றெண்ணி ‘சகலகலாவல்லவன்’ பெயரையும் இப்போது இணைத்திருக்கிறார்களாம்.
ஏவி.எம். தயாரிப்பில் பிரபல இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1982-ல் வெளியான ‘சகலகலாவல்லவன்’ திரைப்படம் நடிகர் கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்தப் படம்தான் தமிழ்த் திரையுலகை முழுக்க முழுக்க வணிக மயமாக்கத்திற்கு திசை திருப்பியது என்று திரையுலக விமர்சகர்கள் இன்றளவும் சொல்லி வருகிறார்கள்.
இந்த ‘அப்பாடக்கரை’ தாங்கிப் பிடிக்க அந்தப் புகழ் பெற்ற ‘சகலகலாவல்லவன்’ பெயரை வாங்கிச் சேர்த்திருக்கும் இயக்குநரின் திறமைக்கு நமது பாராட்டுக்கள்..!
இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டி என்னவெனில், நடிகர் விவேக்கும், நடிகர் சிம்புவும் தமனின் இசையில் தலா ஒரு பாடலை பாடியிருப்பதுதான்..
‘சகலகலாவல்லவன் அப்பாடக்கர்’ திரைப்படத்தின் இசை நாளை ஜூலை 20-ம் தேதி வெளியிடப்படுகிறது. ஜூலை 31-ம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது. இத்திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு சென்சார் செய்யப்பட்டது. ஒரு கட் கூட சொல்லாமல் ‘யு’ சர்டிபிகேட் பெற்றுள்ளது.
சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘ரோமியோ ஜூலியட்’ படம் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவரது அடுத்த படமும் திரைக்கு வரவிருப்பதால் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர், விநியோகஸ்தர்கள் இடையே இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.