full screen background image

பெருமாள் பிச்சை சாமிக்கும், ஆறுச்சாமிக்கும் இடையில் நடக்கும் சண்டைதான் ‘சாமி ஸ்கொயர்’ படம்..!

பெருமாள் பிச்சை சாமிக்கும், ஆறுச்சாமிக்கும் இடையில் நடக்கும் சண்டைதான் ‘சாமி ஸ்கொயர்’ படம்..!

தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மாலையில் சென்னையில் உள்ள ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. 

இந்த விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ.ஏ.கே. சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா, பாடலாசிரியர் விவேகா இவர்களுடன் இயக்குநர் ஹரி, சீயான் விக்ரம், தயாரிப்பாளர் ஷிபு தமீன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

IMG_7287

இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேசுகையில், “2002-ம் ஆண்டில் டைரக்டர் ஹரி இயக்கிய முதல் திரைப்படமாக ‘தமிழ்’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் நான், இயக்குநர் பாலசந்தர், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி ஆகியோர் ஒன்று கூடி விவாதித்து, அடுத்த படத்தை இயக்குவதற்கு இயக்குநர் ஹரிக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று தீர்மானித்து ‘சாமி’ பட வாய்ப்பை வழங்கினோம். அதை உணர்ந்து, கூடுதலாக உழைத்து வெற்றியைக் கொடுத்தார்.

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கும் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. அதனை இன்றுவரை காப்பாற்றி வருகிறார்..” என்று பாராட்டினார்.

gnanavelraja

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், “எங்கள் கம்பெனியில் மூன்று படங்களை இயக்கியிருக்கிறார் ஹரி. ஒவ்வொரு படத்திற்கு அசுரத்தனமாக உழைப்பவர். அதற்கேற்ப வெற்றியையும் கொடுப்பவர். ‘சேது ’படத்திலிருந்து விக்ரம் அவர்களுடன் பாலா சார் மூலமாக எனக்கு ஒரு தொடர்பு உண்டு. நாம் மிகவும் நேசித்த கமர்சியல் படங்களில் ‘சாமி’யும் ஒன்று. அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாவதில் சந்தோஷம். இதுபோன்ற மாஸ் படத்திற்காக அவருடைய ரசிகர்களுடன் நானும் காத்திருக்கிறேன்…” என்றார்.

நடிகர் சூரி பேசுகையில்,  “இந்த தருணத்தில் ஒளிப்பதிவாளர் ப்ரியன் இல்லாததிருப்பது வருத்தமான விசயமாக இருக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் பாதி நேரம் ஸ்டூடியோவிலும், பாதி நேரம் ஜிம்மிலும் இருக்கிறார். விரைவில் கதாநாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

soori

தமிழ் சினிமாவில் தற்போது உதவி இயக்குநர்கள் கதை விவாதத்தின் போது வைட் ஷாட், குளோஸ் ஷாட் என்பதைப் போல் ‘ஹரி சார் ஷாட் ’என்று ஒரு விசயத்தைப் பற்றி பேசுகிறார்கள். டைரக்டர் ஹரி சாரோட பரபரப்பு தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாமல் டெல்லியில் உள்ள ஹிந்தி நடிகர்களும் தொற்றிக்கொண்டதை நான் உடனிருந்து கவனித்து சந்தோஷப்பட்டேன். அன்பு தங்கச்சி கீர்த்திசுரேஷ், படபிடிப்பு தளத்தில் என்னிடம் ‘அண்ணே இப்படியொரு பஞ்ச்ச இந்த இடத்தில போடுங்க..’ என்று சொல்லுமளவிற்கு வளர்ந்துவிட்டார்…” என்றார்.

prabhu

நடிகர் பிரபு பேசுகையில், “அப்பாவுடன் சிறிய வயதில் இருந்தே நான் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்ற தேடல் அவரிடத்தில் இருந்ததை கவனித்திருக்கிறேன். உடலை ஏற்றுவார். இறக்குவார். குரலை மாற்றுவார். அதே போல் கமல்ஹாசனிடத்திலும் அந்த ஆர்வம் இருப்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.

அந்தப் பாதையில் என்னுடைய அருமைத் தம்பி சீயான் விக்ரமும் பயணிக்கிறார். அவருடன் ‘ராவணா’, ‘கந்தசாமி’ தற்போது இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அவர் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்…” என்றார்.

பாடலாசிரியர் விவேகா பேசுகையில். “இயக்குநர் ஹரி இயக்கிய முதல் படமான ‘தமிழ்’ படத்திலிருந்து தற்போது இந்த ‘சாமி ஸ்கொயர்’வரைக்கும் அவர் இயக்கிய அனைத்து படங்களிலும் பாடல்களை எழுதியிருக்கிறேன்.

அவர் முதல் படத்தைவிட பத்து மடங்கு கூடுதலாக வேலை பார்த்து வருவதை உடனிருந்து பணியாற்றும் எங்களைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும். ஒவ்வொரு பாடல் வரிகளையும் செதுக்கி செதுக்கி தேர்ந்தெடுப்பார். அவருடைய படத்திற்கு பாடல் எழுதுவது என்னைப் பொறுத்தவரை ஒரு பயிற்சி பெறுவது போலிருக்கும். 

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த அனைத்து தமிழ் படங்களிலும் நான் பாடல்களை எழுதியிருக்கிறேன். விக்ரம் நடித்த ‘கந்தசாமி’ என்ற படத்திற்கு பாடல் எழுதியதன் மூலம்தான் எனக்கு முதன்முதலில் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.

இந்தப் படத்தில் ‘நீதான் ஆணின் இலக்கணம். உன் அருகே இருந்தால் எங்களுக்கு வருமே தலைக்கனம்…’ என்று பாடல் வரிகளை விக்ரமிற்காகவே எழுதினேன். இந்த படத்தில் ‘புது மெட்ரோ ரயிலு..’ என்ற பாடலை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் எழுதியிருக்கிறார்….” என்றார்.

aishwarya rajesh

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில்,  “இந்த படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நான் நடித்திருக்கிறேன். ‘சாமி’ படத்தில் விக்ரமின் நடிப்பில் ஏற்படுத்திய பிரமிப்பு என்னால் ஏற்படுத்த முடியுமா என்றால் முடியாது என்றுதான் சொல்வேன். ஆனால் என்னுடைய ஸ்டைலில் கொஞ்சம் முயற்சித்திருக்கிறேன். முதலில் நான் இதனை ஏற்க தயங்கினேன். ஆனால் இயக்குநர்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதனால் நடித்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம் ’ படத்தைப் பார்த்து வியந்து அவரின் ரசிகையாகிவிட்டேன். இந்த படத்தில் நடைபெற்ற பல சுவராசியமான சம்பவங்களை படத்தின் வெற்றி விழாவில் பகிர்ந்து கொள்கிறேன்…” என்றார்.

keerty suresh

படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இயக்குநர் ஹரியுடன் பணியாற்றும்போது நேரம் குறித்த திட்டமிடல் பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம். படப்பிடிப்பு தளத்தில் அவர் பரபரப்பாக இயங்குவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

இந்தப் படத்தில் சூரி, இமான் அண்ணாச்சி, சுமித்ரா, விக்ரம் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறேன்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போதுதான் எனக்கு ரசிகையாகியிருக்கிறார். ஆனால் நான் அவர் நடித்த ‘காக்கா முட்டை’ பார்த்துவிட்டு அவருக்கு நான் ரசிகையாகியிருக்கிறேன்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன் நான் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படமிது. தமிழில் முதல் படம். இந்தப் படத்தில் நான் ஒரு பாடலை பாடியதற்கு காரணம் தயாரிப்பாளர் ஷிபு அண்ணன்தான். அவர்தான் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திடம் என்னைப் பற்றி சொல்லியிருக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறேன்.

என்னுடைய சிறிய வயதில் ‘அன்னியன்’ படத்தின் போஸ்டரை என்னுடைய அறையில் ஒட்டிவைத்திருந்தேன். அந்த படத்தில் வரும் ‘ரெமோ’வை ரசித்தேன். தற்போது அந்த ‘ரெமோ’வுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ‘சாமி’ படத்தின் முதல் பாகத்தில் விக்ரம் எப்படியிருந்தாரோ அதே போல் இந்த படத்திலும் இருக்கிறார்…” என்றார்.

devi sriprasad

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் பேசுகையில், “நான் இந்த நிகழ்விற்கு தாமதமாக வந்ததிற்கு காரணம் இந்த படத்தில் லேட்டஸ்ட்டாக இணைக்கப்பட்ட ‘அம்மா’ பற்றிய ஒரு சிறப்பு பாடல். அந்த பாடலை உருவாக்கி இறுதி வடிவம் கொடுத்து அதனை ஆடியோவை வெளியிடும் நிறுவனத்திடம் சமர்பித்துவிட்டு வருவதற்கு தாமதமாகிவிட்டது. 

அம்மாவின் சிறப்பைப் பற்றி பேசும் இந்த பாடல் ஒரு அருமையான சூழலில் இடம் பெறுகிறது. நான் ஏற்கனவே அப்பாவின் முக்கியத்துவம் பேசும் பாடலை உருவாக்கியிருக்கிறேன். அம்மாவைப் பற்றி பேசும் பாடலை உருவாக்கவேண்டும் என்ற ஆசையிருந்தது. அந்த ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியது.

வெற்றிப் பெற்ற ஒரு படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்குவது கடினமான பணி. அதிலும் கமர்சியல் வெற்றிப் பெற்ற ‘சாமி’ படத்தை போல் ஒரு படத்தின் அடுத்த பாகத்தை எடுப்பது சிரமமான காரியம். அதனை ஹரி தலைமையிலான இந்த குழுவினர் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பாட்டு என்பது ஒரு மெட்டு என்பதைவிட அது ஒரு பாவனை (எக்ஸ்பிரஸன்) என்பேன். நான் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். விவேகா எழுதிய ‘அதிரூபனே..’ என்ற வார்த்தையில் ஒரு மியூசிகல் லென்த் இருந்தது. அதனால் தான் விவேகா எனக்கு ஸ்பெஷல் என்று நான் அடிக்கடி சொல்வேன்.

இந்த படத்தில் விக்ரம் அவர்களை ஒரு பாட்டு பாட வைக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் அவரை எந்த பாடலை பாட வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது ‘புது மெட்ரோ ரயிலு..’ என்ற பாடலை பாட வைக்கலாம் என்று தீர்மானித்து பாட வைத்தோம். இந்த பாடல் அவருடைய ரசிகர்களுக்கும் பொருத்தமாக இருக்கும். படத்திலும் கச்சிதமாக இருக்கும் என்று நினைத்தோம்.

ஆனால் பெண் குரலில் யாரை பாட வைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது ஷிபு சார்தான் கீர்த்தி சுரேசை சிபாரிசு செய்தார். நான் முதலில் சற்று தயங்கினேன். பிறகு அவர் ஸ்ருதியில் பாடியதை கண்டு ஆச்சரியப்பட்டேன். பிறகு அவரை அழைத்து பாட வைத்தோம்.

அவர் சிறிய வயதில் இசையை முறைப்படி கற்றிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டோம்.  அவரின் குரலினிமையால் இந்த பாடல் வெற்றி பெறும். நடிகை கீர்த்தி சுரேசிடமிருந்து மற்றொரு திறமையை கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கிறோம்.  

என்னுடைய ரோல் மாடலே ‘சீயான்’ விக்ரம்தான். அவருடைய ஒரு நேர்காணல் படித்துதான் நான் என்னை உணர்ந்தேன். அவருடன் இணைந்து ஒரு படம் பணியாற்றவேண்டும் என்று ஆசையிருந்தது. அது ‘கந்தசாமி’ படத்தில் நிறைவேறியது. இந்த படத்தில் அவரை ஒரு பாடல் பாட வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுவும் நடந்தேறியிருக்கிறது.

அவருடைய எளிமையான அணுகுமுறை என்னையும் என்னுடன் பணியாற்றுபவர்களையும் கவர்ந்திருக்கிறது. அதுதான் அவரின் பலம் மற்றும் அவரது வெற்றிக்கு காரணம்…” என்றார்.

director hari

இயக்குநர் ஹரி பேசுகையில், “தயாரிப்பாளர் ஷிபு ஒரு வெற்றிகரமான விநியோகஸ்தராக இருந்து தரமான தயாரிப்பாளராக உயர்ந்திருப்பவர். ஒரு படத்தின் வெற்றிக்கும், தோல்விக்கும் உள்ள உண்மையான காரணத்தை நடுநிலையோடு சொல்பவர் ஷிபு. தரமான படத்திற்காக தேவைப்படும் அனைத்து செலவுகளையும் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஐந்து மாநிலங்கள், ஆறு விமான நிலையங்கள், இருபதிற்கும் மேற்பட்ட சுமோக்கள். சுமோக்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது. இருபதிற்கும் மேற்பட்ட கார்களை வாங்கி அடித்து உடைத்திருக்கிறோம். இதெல்லாம் வலிந்து திணிக்கப்பட்டவையல்ல. கதை கேட்டதால் செலவு செய்திருக்கிறோம். 

‘சாமி’ படத்தின் முதல் பாகத்தை முடிக்கும்போது இரண்டாவது பாகத்திற்கான லீட் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த போலீஸ் கதைகள் பண்ணும்போது ஒரு ஒரு எபிசோடாக காலியாகிவிட்டது. ஆனால் விக்ரமை சந்திக்கும்போதெல்லாம் அவரிடம் சரியாக கதை அமைந்தால் மட்டுமே அடுத்த பாகத்தைத் தொடர்வேன் என்று சொல்லிவிட்டேன். 

ஏனெனில் விக்ரம் கமர்சியல் ஹீரோ மட்டுமல்ல நடிப்பு திறன் வாய்ந்த நடிகரும் கூட. பிறகு நல்லதொரு கதை அமைந்த பிறகே சாமி ஸ்கொயரை தொடங்கினேன். இந்த படத்தில் பெருமாள் பிச்சை சாமிக்கும் ஆறுசாமியின் சாமிக்கும் இடையே நடைபெறும் போராட்டம்தான் கதை.

கடைசி நேரத்தில் கேட்டபோது முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷை மனதார பாராட்டுகிறேன்…” என்றார்.

actor vikram

நடிகர் விக்ரம் பேசுகையில், “சாமி’ திரைப்படம் என்னை கமர்சியல் ஹீரோவாக நிலைநிறுத்திய படம். ‘தில்’, ‘தூள்’ வரிசையில் அமைந்த மற்றொரு மாஸான படம். இயக்குநர் ஹரியைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் அவர் ஒரு படத்தை இயக்குவதை தவம் போல் ஒய்வேயில்லாமல் அர்ப்பணிப்புடன் செய்வார். 

‘கந்தசாமி’ படத்தில் எல்லா  பாடல்களையும் பாட வைத்ததற்கு இயக்குநர் சுசிக்கும், தேவி ஸ்ரீபிரசாத்திற்கும் நன்றி சொல்லவேண்டும். அந்தப் படத்தில் அந்த ஒரு விசயத்தை நான் புதிதாக செய்திருக்கிறேன்.

அதே சமயத்தில் மற்ற இசையமைப்பாளர்களைவிட தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் பாடும்போது, பாடல் வரிகளுக்குள் இருக்கும் எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடச் சொல்வார். இந்த வரிக்கு காமெடியாக முயற்சிக்கலாமா…? இந்த எமோஷனில் பாடலாமா..? என சொல்வார்.

இந்தப் படத்தில் நான் பாடிய பாடலில்கூட ஒரு இடத்தில் ‘ஏக்க்க்க்..’ என ஒரு இடத்தில் வரும். அதில் ஒரு எமோஷனை முயற்சித்திருப்போம். இது அவரின் ஸ்பெஷல். ஆனால் எனக்கு மெலோடி பாடல் பாட ஆசை. அடுத்த முறையாவது எனக்கு மெலோடி பாட்டை பாட வாய்ப்பு கொடுக்கவேண்டும்.

இந்த படத்தில் பாபி சிம்ஹா வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் உடலை ஏற்றி இறக்கி நடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும்.

ஒரு சிக்கலான சூழலில் ‘இருமுகன்’ படத்திற்கு கை கொடுத்து ஒத்துழைப்புக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஷிபு. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது சந்தோஷம்…” என்றார்.

படக் குழுவினருடன் வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களான திருப்பூர் சுப்ரமணியம், பைனான்சியர் அன்புசெழியன் முன்னிலையில் படத்தின் இசை வெளியிடப்பட்டது.

Our Score