‘ரம்’ திரைப்படம் இன்று துவங்கியது..!

‘ரம்’ திரைப்படம் இன்று துவங்கியது..!

ஆல் இன் பிக்சர்ஸ் (All in Pictures) தயாரிப்பு நிறுவனம் தங்களது இரண்டாவது படமான ‘ரம்’ படத்தின் படப்பிடிப்பை சென்னையில் இன்று துவக்கியது.

மிக வித்தியாசமான படமாகப் பாராட்டப்பட்ட ‘மசாலா படம்’தான் இந்த நிறுவனத்தின் முதல் படம். 

ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா, மியா, விவேக், நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும், இந்தப் படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குனரான சாய் பரத். 

‘அவளுக்கென்ன’  ஆல்பத்தின் மூலம் மீண்டும், மீண்டும் பாராட்டுக்களை  அள்ளிக் கொண்டிருக்கும் யூத் ஐகானான இசையமைப்பாளர் அனிருத்  ‘ரம்’ படத்துக்கு இசையமைக்கிறார். 

படத்தில் பங்கு பெரும் கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் சூழ ஒரு சிறு பூஜையோடு நேரடியாக  படப்பிடிப்புதான்..! 

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் இளைஞருமான  விஜய ராகவேந்திரா படம் பற்றிக் கூறும்போது,  “படத்தின் நாயகன் ஹ்ரிஷி எனது நல்ல நண்பர். படத்தின் கதையை கேட்டபோது, ‘ஆரம்பிச்சுடுவோம்’ என்று சொல்வதைத் தவிர வேறேதும் சொல்ல முடியாத அளவுக்கு திருப்தியாக இருந்தது. வித்தியாசமான கதைகளை  தருவதில் புதிய  எல்லைகளைத் தொட வேண்டும் என்பதே எங்கள்  ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின்  லட்சியம். அடுத்து இரண்டு படங்களை விரைவில் தயாரிக்கத் துவங்கவிருக்கிறோம்.

இந்த ‘ரம்’ ஒரு விதமான,  இதுவரையிலும் வெளிவந்திருக்காத ஒரு  திகில் கலந்த படம். ஜனங்களின் கலைஞன் விவேக் நடிக்கும் முதல் திகில் படமும் இதுதான். ‘அஞ்சாதே’ புகழ் நரேன் இதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத மாதிரியான  ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . 

அண்மையில் ‘வேதாளம்’, ‘நானும் ரவுடிதான்’, ‘தங்க மகன்’ ஆகிய படங்களில் மிக பிரமாதமாக இசை கொடுத்த அனிருத் முதன்முதலாக ஒரு ஹாரர் படத்துக்கு இசை அமைப்பது இதுதான் முதல் முறை.

உற்சாகமான பல இளம் கலைஞர்கள் மனப்பூர்வமாக இந்தப் படத்துக்கு தங்கள் முயற்சியைப் போடுகிறார்கள். ‘ரம்’ படம் ஒரு முழுமையான பொழுதுபோக்குப் புதையலாக இருக்கும்..” என்று உறுதியாகச்  சொல்கிறார்.

Our Score