இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் வெளியீடு திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 7-ம் தேதியன்று அத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு புதிதாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் தியேட்டர்களில் ஜனவரி 10-ம் தேதிவரையிலும் 50 சதவிகிதம் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது.
300 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் தற்போது திரைக்கு வந்தால் பாதிக்குப் பாதியாக வசூல் குறையும். இதனால் தயாரிப்பாளர்கள் நிச்சயமாக நஷ்டமடைவார்கள் என்பது நிஜம்.
மேலும் மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் தியேட்டர்களை மூடிவிட்டார்கள். அங்கே கொரோனா மூன்றாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது.
இன்னொரு பக்கம் ஆந்திராவில் தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை அந்த மாநில அரசு குறைத்துவிட்டதால் 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் இந்தப் படத்தைக் கொண்டு வருவது தற்கொலைக்கு சமம் என்பதை உணர்ந்த இந்தப் படக் குழு தற்போதைக்கு படத்தின் வெளியீட்டை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.










