இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டாக உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை கர்நாடக மாநிலத்தில் புறக்கணிக்குமாறு, கன்னட சினிமா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆவேசமாகப் பேசியும், எழுதியும் வருகின்றனர்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவான ‘பாகுபலி’ என்ற பிரம்மாண்டமான படத்திற்குப் பிறகு, இயக்குநர் ராஜமெளலி இயக்கியிருக்கும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர்.
இந்தப் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட நட்த்திரங்கள் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக, 3-டி தொழில் நுட்பத்திலும் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், உலகம் முழுவதும் நாளை மறுதினம் வெளியாக உள்ளது.
இந்த வெளியீட்டிற்காக இந்தப் படக் குழுவினர் மாநிலம், மாநிலமாக சுற்றுப் பயணம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் சிக்பல்லாபூரில் இந்தப் படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜு பொம்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, “வரவிருக்கும் RRR படம் தேசமே பெருமைப்படும் படமாக இருக்கும்…” என்று பாராட்டினார்.
ஆனால் அதே கர்நாடகாவில் நேற்றில் இருந்து இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும், படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரமும் நடந்து வருகிறது.
இதற்குக் காரணம் இந்த ஆர்.ஆர்.ஆர். படம் கன்னட மொழியில் மட்டும் டப்பிங் செய்யப்படவில்லை என்பதுதான். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, வங்காளம் என்று அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டிருக்கும் இந்தப் படம் கன்னடத்தில் மட்டும் டப் செய்யப்படவில்லை.
ஒரு வகையில் இது கன்னட மொழிக்கு ஏற்பட்ட அவமானம் என்று கர்நாடகாவில் இருக்கும் சினிமா ரசிகர்கள் கோபம் கொண்டுள்ளனர். மொழிப் பற்றால் பொங்கியெழுந்திருக்கும் அம்மாநில சினிமா ரசிகர்கள், “கன்னட மொழியில் ஆர்.ஆர்.ஆர். படத்தை வெளியிடாவிட்டால் இந்தப் படத்தைப் பார்க்க மாட்டோம்…” என்று சொல்லி #BoycottRRRinKarnataka என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்கள்.
மேலும், ட்விட்டரில் “ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை புறக்கணியுங்கள்…” என்பதையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.