Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில், நாயகியாக நடித்துள்ள திரைப்படம் “ரிவால்வர் ரீட்டா”.
நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், பிளேடு சங்கர், ராமச்சந்திரன் அக்ஷதா அஜித், குஹாசினி, காயத்ரி ஷான் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்கம் – JK சந்துரு, ஒளிப்பதிவாளர் – தினேஷ் கிருஷ்ணன்.B, எடிட்டிங் – பிரவீன் K.L., கலை இயக்கம் – MKT, ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன், நிர்வாக தயாரிப்பாளர் – வீர சங்கர், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் – ஐஸ்வர்யா சுரேஷ், தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம் & ஜெகதீஷ் பழனிசாமி, தயாரிப்பு நிறுவனம் – The Route & Passion Studios, பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் (AIM).
ஹீரோயினை மையமாக வைத்து படங்கள் வருவது அரிது. அதிலும் ஒரு சில முக்கியமான மிகப் பெரிய நடிகைகளுக்கு மட்டுமே அது வாய்த்திருக்கிறது. இப்போது கீர்த்தி சுரேஷின் முறை. கன் பைட் காஞ்சனா போல் ரிவால்வர் ரீட்டா என்று பொருத்தமான ஒரு ரைமிங்கான தலைப்பை வைத்துக் கொண்டு, அதில் ரீட்டாவாக களமிறங்கி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
பாண்டிச்சேரியில் மிகப் பெரிய தாதாவாக இருப்பவர் சூப்பர் சுப்பராயன். அவருக்கும் ஒரு வீக்னஸ் உண்டு. அவர் கொஞ்சம் பெண் பித்தர். அடிக்கடி பாலியல் தொழில் செய்யும் பெண்களை வரவழைத்து உற்சாகமாக இருப்பார்.
அப்படியொரு முகூர்த்த நாளில் ஒரு பெண் மானை தேடி செல்கிறார் சூப்பர். ஆனால் சரியான முகவரிக்கு செல்லாமல் ஒரு தவறான முகவரிக்கு சென்று கதவை தட்டுகிறார் சுப்பராயன். அந்த வீட்டில் செல்லம்மா என்ற ராதிகா தன்னுடைய மூன்று மகள்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதில் மூத்த மகளான ரீட்டா என்னும் கீர்த்தி சுரேஷ் உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
ரீட்டாவின் அக்கா குழந்தைக்கு முதல் பிறந்த நாள் விழா அன்று கொண்டாடப்படுகிறது. இதற்கான வேலைகளில் இருக்கும் போது திடீரென்று சூப்பர் நடுவீட்டுக்குள் வந்து நிற்க.. கீர்த்தி சுரேஷ் அண்ட் கோ–விற்கும், சூப்பருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் தலையில் அடிபட்டு கீழே விழுந்த சூப்பர் இறந்தும் போகிறார்.
பாண்டிச்சேரியின் சகல திசைகளிலும் எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கும் சூப்பர் சுப்பராயன் திடீரென்று காணாமல் போனதால் அவரது மகனான சுனில் அப்பாவை வலைவீசி தேடுகிறார். அதே நேரம் ஏற்கனவே நடந்த ஒரு மோதலில் ஒரு கண் பார்வையை இழந்த அஜய் ஜோஸ் எப்படியாவது சூப்பர் சுப்பராயனை கொலை செய்ய வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.
தானே நேரில் சென்றால் நடவாது என்பதால் அதற்கு ஒரு தனி டீமை அனுப்பி வைக்கிறார். அந்த டீமும் சூப்பர் சுப்பராயனின் தலையை வெட்டி அஜய் ஜோஸின் காலடியில் வைத்தால் ஐந்து கோடி ரூபாய் கிடைக்கும் என்ற நப்பாசையில் சூப்பரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷுக்கும் அந்தப் பகுதியின் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஜான் விஜய்க்கும் ஏற்கனவே ஒரு முன் விரோதம் இருக்கிறது. இந்த முன் விரோதத்தை வைத்து கீர்த்தி சுரேஷ் குடும்பத்தையே தூக்கி உள்ளே வைக்க ஜான் விஜய் முயற்சி செய்கிறார்.
இப்படி ஆளாளுக்கு ஒரு பக்கம் சூப்பர் சுப்பராயனை வைத்து பல்லாங்குழி விளையாடுகிறார்கள். சூப்பரின் தலையை கொடுத்தால் கோடி ரூபாய் கிடைக்கும் என்ற ஆசையில் ஒரு பக்கம் அவருடைய உடலை எடுத்துக் கொண்டு கீர்த்தி சுரேஷ் குடும்பம் ஓட… இன்னொரு பக்கம் அவர்களை தேடி கல்யாண மாஸ்டரின் தலைமையில் ஒரு குழு தேட, கீர்த்தி சுரேஷ் குடும்பத்தை ஜான் விஜய் தேட இன்னொரு பக்கம் சுனில் தன்னுடைய அப்பாவை தேட.. ஒரே தேடுதல் வேட்டையாகவே படத்தின் கடைசி வரைக்கும் கொண்டு சென்று இருக்கிறார்கள் இயக்குநர் ஜே.கே.சந்துரு.
படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் பொருத்தமாக இருந்தாலும், அவருடைய க்யூட்டான குழந்தைத்தனமான முகம் அவரும் ஒரு பெரிய தாதாவாக உருவெடுப்பதை நம்மால் ஏற்க முடியவில்லை.
இது நகைச்சுவை திரைப்படம் என்று முதலிலேயே சொல்லிவிட்டதால் தன்னால் முடிந்த அளவுக்கு காமெடியை கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார் கீர்த்தி. ஆனால் முடியவில்லை. ஆனாலும் அவர் வருகின்ற காட்சிகளில் எல்லாம் இளசுகள் அவரையே பார்க்க வைப்பது போல குளோசப் காட்சிகளில் அவ்வளவு அழகாக தெரிகிறார். தன்னால் முடிந்த அளவுக்கு நடித்தும் இருக்கிறார் கீர்த்தி.
கீர்த்தி சுரேஷின் அம்மாவாக நடித்திருக்கும் கலையரசி ராதிகாதான் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோயின். பல காட்சிகளில் அவர் ஒருவர் மட்டுமே நம்மை சிரிக்க வைத்திருக்கிறார். அப்பாவியாய் அவர் பேசுகின்ற வசனங்களும். நடித்திருக்கும் நடிப்பும், டயலாக் டெலிவரியும் குபீர் சிரிப்பை வரவழைத்து இருக்கிறது.
அப்பாவிபோல நடித்து ஏமாற்றும் வேலையை ராதிகா கச்சிதமாக செய்திருக்கிறார். படம் முழுவதும் வரும் அவருடைய ஒன் லைன் காமெடிதான் படத்தின் கதையை நகர்த்தி இருக்கிறது. அதிலும் ஒரு காட்சியில் “சுட்ருங்க மாப்பிள்ளை” என்று அவர் சொல்லுகின்ற அந்தக் காட்சியில் தியேட்டரே அதிர்ந்தது போன்ற கை தட்டல்கள் எழுந்தது. வாழ்த்துக்கள் ராதிகா மேடம்.
படத்தை துவக்கத்திலேயே செத்துப் போகும் சூப்பர் சுப்பராயன் அவருடைய கருத்த முகமும், ரவுடித்தனமான தோற்றமும் அவரை இது மாதிரியான கேரக்டரில் தொடர்ச்சியாக நடிக்க வைக்கிறது. அவரும் வஞ்சகம் இல்லாமல் நடித்திருக்கிறார். வசனம் பேசி, உடல் அசைவுகளால் நடிப்பது வேறு. ஆனால் பிணமாக நடிப்பது என்பது வேறு. பாவம் சூப்பர் சுப்பராயனைப் பார்த்தால் நமக்கே பாவமாகத்தான் இருக்கிறது. அத்தனை காட்சிகளிலும் அவ்வளவு நேரமும் எப்படித்தான் மூச்சு விடாமல் இருந்தாரோ.. தெரியவில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே சூப்பர் சுப்பராயனை சூப்பர் என்று சொல்லி பாராட்டலாம்.
சூப்பர் சுப்பராயனின் மகனாக நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் சுனில், தன்னுடைய வில்லத்தனத்தை படம் முழுவதும் காட்டியிருக்கிறார். அவருடைய முகம் காட்டும் அந்தக் கடுமையே அவரை வில்லன் என்று காட்டுகிறது. இவரது தம்பியாக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி எப்போதும் போல் தனது வழக்கமான டயலாக் டெலிவரியாலும், உடல் மொழி நடிப்பாலும் நம்மை கவர்கிறார்.
சூப்பர் சுப்பராயன் தலைக்கு 5 கோடி ரூபாய் விலை வைத்து தலையை தேடிக் கொண்டிருக்கும் அஜய் கோஷ் பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறார். அதிலும் ஒருவர் மாற்றி ஒருவர் “பாடி எங்களிடம்தான் உள்ளது” என்று அவரிடம் போன் போட்டு சொல்லும் போது அவர் படுகின்ற அவஸ்தை.. அதுவே ஒரு அழகான நகைச்சுவைதான்.
தாதாவுக்கு ஒரு தாதாவாக இருக்கும் கல்யாணம் மாஸ்டர். மாமா வேலை பார்க்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், சென்ராயன், அகஸ்டின், அக்ஷதா, அஜித் சேகர், ராமச்சந்திரன், காயத்ரி என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இந்தப் படத்தில் இறக்கியிருக்கிறார்கள். அனைவரும் காமெடி வரவேண்டும் என்பதற்காக வசனம் பேசினாலும் சிச்சுவேஷன் காமெடியாக இல்லை என்பதால் இவர்கள் நடிப்பும் சாதாரணமான ஒரு கமர்சியல் படத்தில் வருவது போலவே இருக்கிறது.
தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்தை முதலில் இருந்து கடைசிவரையிலும் ஒரு அழகான கலர்ஃபுல்லான படமாக காட்டியிருக்கிறது. சான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அதோடு பின்னணி இசையையும் சரியான இடத்தில் சரியான விதத்திலேயே அமைத்திருக்கிறார். காமெடி கதையில் அமைந்திருக்கும் இந்தப் படத்தை படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவினும் தன்னால் முடிந்த அளவுக்கு காட்சிகளை நறுக்கி கொடுத்து படத்தை ஸ்பீடாக்கி இருக்கிறார்.
எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் சாதாரணமான கமர்ஷியல் திரைப்படமாக இப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் ஜே.கே.சந்துரு எழுதிய சிச்சுவேஷன் காமெடியான திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சிரிப்பு வரும்படி இயக்கி இருக்கலாம். ஆனால், ராதிகாவை தவிர வேறு யாரிடமும் இந்த சிரிப்பு நடிப்பு இல்லாததால் இடைவேளைக்கு பின்பு சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க முடிந்து இருக்கிறது.
ரிவால்வர் ரீட்டாவின் துப்பாக்கி சுட்டாலும், தோட்டா வெளியில் வரவில்லை.
RATING : 3.5 / 5









