full screen background image

மதராஸ் மாபியா கம்பெனி – சினிமா விமர்சனம்

மதராஸ் மாபியா கம்பெனி – சினிமா விமர்சனம்

படத்தின் தலைப்பு போலவே இதுவும் ஒரு மாபியா கும்பலின் கதைதான். சென்னையில் வசித்து வரும் மிகப் பெரிய ரவுடி கும்பல் தலைவனான ஆனந்தராஜ் சென்னையில் ஒவ்வொரு வார்டு பகுதியிலும் தனக்கு கீழாக ஒரு குட்டி தலைவனை உருவாக்கி அதன் மூலமாக சென்னையில் பல சமூக விரோதத் தொழில்களையும் தாதாயிசத்தையும் செய்து வருகிறார்.

ஆனந்தராஜ் மீது இதுவரையிலும் எந்த ஒரு புகார் வராததால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது போலீஸ். இந்த நேரத்தில் புதிதாக பணிக்கு வரும் இன்ஸ்பெக்டர் சம்யுக்தா எப்படியாவது ஆனந்தராஜை கையும், களவுமாக பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என்று உறுதி கொண்டு ஆனந்தராஜை தொடர்ந்து  கண்காணித்து வருகிறார்.

இதே நேரம் ஆனந்தராஜை போட்டுத் தள்ள எதிர் கோஷ்டி ஆனந்த்ராஜை பின் தொடர்ந்து வருகிறார்கள். இப்போது பிரச்சனை போலீஸிடம் இருந்து தப்பிப்பது அல்லது தன்னை கொலை செய்ய முயலும் வேறொரு கேங்கிடமிருந்து தப்பிப்பது… என்று ரெண்டும்கெட்டான் நிலையில் சிக்கி இருக்கிறார் ஆனந்தராஜ்.

இதன் முடிவு என்ன?.. ஆனந்த்ராஜ் காப்பாற்றப்பட்டாரா.. அல்லது ஆனந்தராஜ் சிறைக்கு சென்றாரா? இதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

கடைசியான சில வருடங்களாக ஆனந்தராஜ் ஒரே காமெடி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அவருடைய டயலாக் டெலிவரியில் காமெடி தானாக வருகிறது. இதை உணர்த்து பல இயக்குநர்களும் சின்ன பட்ஜெட் படங்களில் ஆனந்தராஜை வில்லன் பிளஸ் காமெடியன் கதாபாத்திரத்திலேயே நடிக்க வைத்து வருகிறார்கள். இந்த படத்தில் அதே போலத்தான்.

சென்னையின் முக்கிய தாதாவான ஆனந்தராஜின் பேச்சுக்களும், செயல்களும், கோபமும் தமிழக ரசிகர்களிடையே மிகவும் நெருங்கி வருவதைப் போல இந்தப் படத்தில் அவரை காண்பித்து இருக்கிறார்கள்.

ஆனந்தராஜ் பேசும் பல டயலாக் டெலிவரிகளே நம்மை சிரிக்க வைத்திருக்கின்றன. அதேபோல் அவர் பிணமாக படுத்து கிடக்கும் போதும் ஷகிலாவை வைத்து அவருக்கு செய்திருக்கும் ஒரு காமெடியும் அந்த சோகத்திலும் நம்மால் சிரிக்க முடிந்து இருக்கிறது.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சம்யுக்தா காக்கி ட்ரஸுக்கு எடுப்பாகவே தெரிகிறார். அழகாகவே இருக்கிறார். சிறந்த முறையில் வசனத்தை பேசுகின்றார். நிச்சயம் அவருக்கு ஒரு குறிப்பிடத்தக்க படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.

ஆனந்தராஜ் மகளாக நடித்திருக்கும் ஆரத்யா கொஞ்சம் அழகாக இருக்கிறார். அதே சமயம் கதை, திரைக்கதையை நகர்த்துவதற்கும் பெரிதும் பயன்பட்டு இருக்கிறார். இவருடைய அம்மாவாக நடித்திருக்கும் சசி லயாவும், ஆனந்தராஜின் வண்டவாளங்களை நம்மிடம் சொல்வது போல நடித்திருக்கிறார். ஆனந்தராஜின் ஒரிஜினல் மனைவியாக நடித்திருக்கும் தீபாவும் தன்னுடைய கேரக்டருக்கான நடிப்பையே காண்பித்து இருக்கிறார். இன்னும் கொஞ்சம் வசனம் மூலமாக இவருடைய குடும்ப சண்டையை பெரிதாக எழுதியிருக்கலாம்.

இவர்களுக்கு இடையில் கிச்சு மூச்சு மூட்டுவதற்காகவே ‘கொண்டிதோப்பு வரதன்’ என்ற கதாபாத்திரத்தில் வலம் வரும் முனீஸ் காந்தும் அவ்வப்பொழுது வந்து நம்மை கொஞ்சமேனும் சிரிக்க வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அசோக் ராஜின் ஒளிப்பதிவில் சின்ன பட்ஜெட் படம் என்றாலும் பெரிய பட்ஜெட் படம் போல அனைத்து காட்சிகளையும் அழகாக படமாக்கி இருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள். அதேபோல் இசையமைத்திருக்கும் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் என்றால், பின்னணி இசையில் அடித்து தூள் பறத்தியிருக்கிறார். பின்னணி இசை மூலமாக அந்தக் காட்சியின் நோக்கத்தை நம்மிடம் முன்பை சொல்லி விடுகிறார் ஸ்ரீகாந்த் தேவா.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஆனந்தராஜ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இவரை முதன்மை கதாபாத்திரத்தில் தைரியமாக நடிக்க வைத்திருக்கும் தயாரிப்பாளரையும், இயக்குநரையும் நம் மனதார பாராட்ட வேண்டும்.

போலீஸ் தேடுதல் வேட்டை.. போதை மருந்து கும்பல்.. ரவுடிகள் சாம்ராஜ்யம் இதை அனைத்தையும் ஒன்றாக வைத்துக் கொண்டு மிக அழகான பரபர என்று ஓடக் கூடிய திரைக்கதையில் கடைசிவரையிலும் படத்தைப் பார்க்க வைத்திருக்கும் அளவுக்கு இயக்கியிருக்கும் இந்த படத்தின் இயக்குநரை நாம் மனதார பாராட்டுகிறோம்.

இந்தப் படம் நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம் என்ற வகையில் வந்திருக்கிறது. படத்தில் பங்கு கொண்ட அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நமது பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

RATING : 3 / 5

Our Score