ஒல்லிப்பிச்சானாக இருந்து கொண்டு அலட்சியமாக பொன்னம்பலத்தைத் தலைக்கு மேலை தூக்கி வீசுவதைபோல, பட ரிலீஸுக்கு முன்பேயே கரன்சியை கட்டுக்கட்டாக அள்ளும் லெவலில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவருடைய படங்கள் வரிசையாக கல்லா கட்டி வருவதாலும், ‘ரஜினி முருகன்’ தந்த கசப்பான அனுபவத்தாலும், அடுத்தடுத்து தனது தயாரிப்பிலேயே படங்களை உருவாக்க முனைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அந்த வலையில் முதலில் சிக்கியிருப்பவர் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. இவரது ’24 ஏ.எம்.’ பேனரின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘ரெமோ’ படம் வரும் அக்டோபர் 7-ம் தேதியன்று நவராத்திரி விடுமுறை தினத்தில்தான் வெளியாகவிருக்கிறது. ஆனால் இப்போதே படத்தின் வியாபாரம் முடிந்துவிட்டதாக அவர்களே செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.
இதன்படி வட ஆற்காடு, தென்னாற்காடு பகுதிக்கான விநியோக உரிமையை எஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.சீனிவாசன் வாங்கியிருக்கிறார். திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவை பிரான்சிஸ் அடைக்கலராஜ் பெற்றிருக்கிறார். மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஏரியாவை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் சார்பில் ஜி.என்.அழகர்சாமி வாங்கியுள்ளார். கோவை திருப்பூர் ஏரியாவை பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் கைப்பற்றியிருக்கிறாராம்.
இது அனைத்துமே அவுட்ரேட் அடிப்படையில் விற்கப்பட்டிருக்கிறதாம். பட ரிலீஸுக்கு இரு வாரங்களுக்கு முன்பு பேசிய மொத்தத் தொகையையும் தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டு லைசென்ஸை பெற்றுக் கொள்ளலாம் என்று பேசி முடித்துள்ளார்களாம்..!
“அக்டோபரில் ரிலீஸாகவுள்ள படத்திற்கு இப்போதே எதுக்குய்யா அக்ரிமெண்ட்..?” என்றால், எல்லாம் ரஜினிமுருகனில் சம்பாதித்த ‘பாடத்தின்’ விளைவுதான் இது என்கிறார்கள்..!
‘அனுபவமே இறைவன்’ என்பதை சிவகார்த்திகேயன் நன்றாகப் புரிந்து கொண்டார் போலிருக்கிறது..!
வாழ்த்துகள்..!













