கோவையில் உள்ள புரோஷன் மாலில் நேற்று மாலை 6 மணி அளவில் ‘ரெஜினா’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வை விஜய் டிவி புகழ் பாலா சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கினார்.
கோவை மக்கள் திரளாக கூடியிருந்த இந்த அரங்கத்தில் விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ‘ரெஜினா’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதே சமயத்தில் சோஷியல் மீடியா மூலமாக நடிகர் ஆர்யா இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டார்.
யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் பல படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர். ‘ரெஜினா’ படத்தின் இசை உரிமையை டைம்ஸ் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்தப் படத்திற்கு பவன் K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் மேற்கொள்கிறார்.
இந்த விழாவில் நடிகை சுனைனா பேசும்போது, ஒரு சாதாரணமான பெண் அசாதரணமாக மாறும் கதைதான் இந்த ‘ரெஜினா’ திரைப்படம். அந்த வகையில் இந்த ‘ரெஜினா’ முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இருக்கும். இது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
தினசரி செய்தித் தாள்கள், தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் அவ்வப்போது சில வித்தியாசமான நிகழ்வுகள், வித்தியாசமான மனிதர்களை நாம் பார்க்க முடியும். இயக்குநருடன் இந்த கதை பற்றி விவாதிக்கும்போதுகூட, இது போன்று நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்று கேட்டேன். நடக்கும் என்று சொன்னார்.
மனிதர்களின் வாழ்க்கையில் பெரும்பாலானவர்கள் நகைச்சுவை, சென்டிமென்ட் என இருந்தாலும் ஒரு சிலர் அதைத் தாண்டி விசித்திரமாக நடந்து கொள்வார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் கடினமான சம்பவங்கள் நடந்திருந்தால் அதன் அடிப்படையில் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை மையப்படுத்திதான் இந்தப் படம் உருவாகியுள்ளது” என்றார்.
பன்மொழி படமாக தமிழில் தயாராகியுள்ள ‘ரெஜினா’ இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் டிரைய்லர் வெளியீட்டு விழா சென்னையில் வருகிற ஜூன்-5-ம் தேதி நடை பெறுகிறது.
Our Score










