‘ஆத்தா உன் கோவிலிலே’, ‘தமிழ் பொண்ணு’, ‘மிட்டா மிராசு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘ரவாளி’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நைரசா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை எழுதி ரவி ராகுல் இயக்கியுள்ளார். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய் ஆனந்த், ஏ.எஸ்.மைக்கேல் யாகப்பன் இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர். வளர் பாண்டியன் படத் தொகுப்பு செய்ய, இளைய கம்பன், கு.கார்த்திக் பாடல்கள் எழுத, சந்திரிகா நடனம் அமைத்துள்ளார். ஹரி முருகன் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக அமைத்துள்ளார். பத்திரிகை தொடர்பு கோவிந்தராஜ்.
படம் குறித்து இயக்குநர் ரவி ராகுல் பேசுகையில், “ஏழை பையனை, பணக்கார பெண் காதலிக்கிறாள். வீட்டில் எதிர்ப்பு வர, காதலனை வெளி மாநிலத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு கோவிலில் வைத்துத் திருமணம் செய்து கொள்கிறாள் காதலி. தாலி கட்டிய கையோடு வேலை தேடி வெளியே சென்ற காதலன் காணாமல் போகிறான். காணாமல் போன கணவனை, மனைவி தேடுவதுதான் மீதி கதை.
குற்றாலத்தில் தொடங்கி, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய ஊர்களில் படப்பிடிப்பு நடத்தி, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது…” என்றார்.









