full screen background image

ரத்தம் – சினிமா விமர்சனம்

ரத்தம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை Infiniti Film Ventures நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல் போரா, B.பிரதீப், பங்கஜ் போரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் நாயகனாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் மூவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நிழல்கள் ரவி. ஜெகன் கிருஷ்ணா, தர்ஷன், ஓ.ஏ.கே.தேவர், மிஷா கோஷல் மற்றும் பலர்  நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், இசை – கண்ணன் நாராயணன், படத் தொகுப்பு – டி.எஸ்.சுரேஷ், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், பாடல்கள் – யுகபாரதி, அறிவு, உமாதேவி, சந்துரு, உடைகள் வடிவமைப்பு – ஷிமோனோ ஸ்டாலின், ஒப்பனை – ஹரிபிரசாத், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்., எழுத்து, இயக்கம் – சி.எஸ்.அமுதன்.

இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸம்’ என்றால் என்னவென்பதை இயக்குநர் சி.எஸ்.அமுதன், இன்றைக்கு இந்தப் படத்தின் மூலமாய் இன்றைய இளம் பத்திரிகையாளர்களுக்குச் சொல்லியிருக்கிறார்.

‘அனைத்தையும் சந்தேகப்படு’ என்பதுதான் பத்திரிகையாளர்களின் தாரக மந்திரம். இந்த மந்திரம்தான் அனைத்து மர்மங்களையும், அதன் பின்னணிகளையும் தேடிப் பிடித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வர பத்திரிகையாளர்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறது. இதைத்தான் இயக்குநர் அமுதனும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் வீரப்பன் வேட்டை என்ற பெயரில் சத்தியமங்கலம் காடுகளில் மலைவாழ் மக்களுக்கு தமிழக-கர்நாடக கூட்டு அதிரடிப் படை இழைத்த கொடுமைகளையும், வீரப்பனின் வாழ்க்கை பற்றிய அனைத்துக் கதைகளையும் நக்கீரன் இதழ் அதிகப்பட்சமாக சிறப்பான வகையில் செய்தியாளர்களின் உயிரை துச்சமாக நினைத்து புலனாய்வு செய்து வெளியிட்டது.

அதேபோல் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பல்வேறு ஊழல் முறைகேடுகளை ஜூனியர் விகடனும்’, ‘குமுதம் ரிப்போர்ட்டரும்’ தேடிப் பிடித்து வெளிப்படுத்தியது நினைவிருக்கலாம். இதேபோல் போபர்ஸ் ஊழலை ஸ்வீடனுக்கே தனது செய்தியாளரை அனுப்பி விசாரித்து வெளிப்படுத்தியது ‘தி ஹிந்து’ பத்திரிக்கை. இது போன்ற பல இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸம் சார்ந்த செய்திகளை தமிழகம் ஏற்கெனவே பல முறை சந்தித்துள்ளது.

ஆனால் இதுவரையிலும் யாருமே யோசிக்காத வகையில், இப்படியெல்லாம் நடக்குமா என்று நம்மை யோசிக்க வைக்கும் வகையில் ஒரு புதிய கதையை எழுதி, அதை ஒரு சிறந்த புலனாய்வு செய்தியாளர் எப்படி தனது அனுபவ அறிவை வைத்து கண்டறிகிறார் என்பதை ஒரு கல்லூரி பாடம் போல இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறார் இயக்குநர் அமுதன்.

‘வானம்’ என்ற வாரப் பத்திரிகையின் அலுவலகத்திற்குள் நுழைந்து அதன் ஆசிரியரை ஒரு வாலிபன் படுகொலை செய்கிறான். சில நாட்கள் கழித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை தனது மதத்தை அவமானப்படுத்திவிட்டதாகச் சொல்லி ஒரு இளைஞன் லாரியின் முன் தள்ளி சாகடிக்கிறான். இதிலிருக்கும் சுவாரஸ்யம் என்னவெனில் இந்தக் கொலையாளிகள் இருவருமே தப்பித்து ஓடாமல் போலீஸிடம் அங்கேயே சிக்கிக் கொள்கிறார்கள்.

அனைவருமே இது முடிந்த கதை என்று நினைத்திருக்கும் நேரத்தில் இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று சந்தேகிக்கிறார் பிரபலமான புலனாய்வு பத்திரிகையாளரான ரஞ்சித்குமார் என்ற விஜய் ஆண்டனி.

அவருடைய சந்தேகத்திற்குப் பலன் அளிப்பதுபோல சில சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற தனது ‘வானம்’ பத்திரிக்கை செய்தியாளர்களை தமிழகம் முழுவதும் அனுப்பி கிடைத்த நூலைப் பிடித்துக் கொண்டு சென்று உண்மையைக் கண்டறிகிறார்.

அவர் கண்டறிந்த உண்மையென்ன..? இந்தக் கொலைகளின் உண்மையான காரணம் என்ன..? அந்தக் கொலைகளை செய்ய வைத்தது யார்..? என்பவைதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

விஜய் ஆண்டனிக்கென்றே எடுத்துத் தைத்த சட்டையைப் போல் அமைந்துள்ளது அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச். மனைவியின் இழப்பினால் ஏற்பட்ட குற்றவுணர்வில் பாதிக்கப்பட்டு குடிமகனாக இருக்கும்போதும், சென்னையைவிட்டு தொலைதூர கொல்கத்தாவில் இருந்து கொண்டு வர மறுக்கும் அந்த தாடி வளர்த்த தேவதாஸ் கேரக்டரையும் சிறப்பாக செய்திருக்கிறார்.

இதன் பின்பு களத்தில் இறங்கிய புலியாக சேவ் செய்து ஆணழகன் தோற்றத்தில் புலனாய்வில் இறங்கிக் கலக்கும் ரஞ்சித்குமார் கேரக்டரிலும் கடைசிவரையிலும் ரசிக்க வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத தனித்த ஹீரோவாக உருவாகிவிட்டார் விஜய் ஆண்டனி. இதற்கு அவருக்குப் பெரிதும் உதவியாய் இருப்பது அவருடைய குரல்.

இந்தப் படத்திலும் சோகம், பாசம், அன்பு, அடக்கம் இதைக் காட்டவும் அதே குரல் பயன்பட்டிருக்கிறது. வேகம், தேடுதல் வேட்டை, ஆக்ரோஷம், காதல் இதைக் காட்டவும் அதே குரல் வேறொரு மாடுலேஷனில் பெரிதும் உதவியிருக்கிறது. மொத்தத்தில் விஜய் ஆண்டனி, நடிப்புக்கென்ற மேனிபேக்சரிங் டிவைஸ் என்பதில் சந்தேகமில்லை.

இவரையும் தனது கள்ளச் சிரிப்பால் முந்திவிட்டார் சிரிப்பழகி மகிமா நம்பியார். சேலை அணிந்தால் மட்டுமே பெரிய மனுஷியாகத் தெரிவார் என்பதால் படம் முழுவதுமே இதே காஸ்ட்யூமில்தான் வலம் வந்திருக்கிறார். உடை வடிவமைப்பாளருக்கு இதற்காகவே தனி ஷொட்டு.

மகிமா நிஜமாகவே நம்பியாராகிவிட்டார் இந்தப் படத்தில்..! சிரித்தபடியே நடந்தவைகளை விஜய் ஆண்டனியிடம் சொல்லும் அந்த 2 நிமிடக் காட்சியில் மொத்தத் தியேட்டரையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார் மகிமா. படத்தின் டர்னிங் பாயிண்ட்டே இந்தக் காட்சிதான்.. வெல்டன் மகிமா.

நந்திதா ஸ்வேதா ஒரு 2-கே கிட்ஸ் எடிட்டருக்கே உரித்தான பொறுப்புணர்வுடனும், கோபத்துடனும் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனி யார் என்றே தெரியாமல் அவரை வேலை வாங்கும்விதமும், யாரென்று தெரிந்த பின்பு கொஞ்சம், கொஞ்சமாக அவர் விஜய் ஆண்டனியை புரிந்து கொண்டு ஒத்துழைப்பதுமாய் திரைக்கதைக்கு பக்கவாக  உதவியிருக்கிறார்.

ரம்யா நம்பீசன் சின்னக் கதாப்பாத்திரம் என்றாலும் நினைவில் நிற்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் மகளாக நடித்த சிறுமியும், மகிமாவின் மகளாக நடித்த சிறுமியும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எப்போதும் ‘வானம்’ ஆபீஸ் வாசலிலேயே நிற்கும் அந்த ஏஜெண்ட்டின் முகம் இன்னமும் நினைவில் இருக்கிறது. ‘சுப்ரமணியபுரம்’ சமுத்திரக்கனியை நினைவுபடுத்தும் வகையில் டாஸ்மாக்கில் கொலையாளியை உசுப்பேற்றிவிடும் காட்சியில் தனது நடிப்பிலேயே ரசிக்க வைத்திருக்கிறார் அந்த மனிதர். மற்றும் நிழல்கள் ரவி, டி.ஐ.ஜி.யாக நடித்தவர் இருவருமே அவரவர் வேடத்திற்கு கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், கண்ணன் நாராயணனின் இசையும் அமுதனின் முந்தைய 2 படங்களைப் போலவே இந்தப் படத்திலும் அமுதனுக்குத் தோள் கொடுத்திருக்கிறது.

கலை இயக்குநர் பக்காவாக போட்டுக் கொடுத்த செட்டுக்குள் அழகழகான லைட்டுகளை ஒளிக்க வைத்து காட்சிகளை படமாக்கியிருக்கிறார் கோபி அமர்நாத். டிஐஜி-போலீஸ் மோதல் நடக்கும் அந்த இரவு நேரக் காட்சியில் ஒளிப்பதிவு சிறப்போ சிறப்பு. சண்டை காட்சியில் விஜய் ஆண்டனியை சிறந்த ஆக்சன் ஹீரோவாகவும் காண்பித்திருக்கிறார் திலீப் சுப்பராயன்.

பக்கவாக எழுதப்பட்டிருக்கும் கதைக்கு அழகான வடிவத்தில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் அமுதன். அதிகப்பட்சம் லாஜிக் எல்லை மீறல் பற்றிய சிந்தனையே நமக்கு வராத அளவுக்கு திரைக்கதையையும், வசனங்களையும், காட்சியமைப்புகளையும் வைத்து சமாளித்திருக்கிறார் இயக்குநர்.

சீக்கிரமாக முடிவை நோக்கிப் பயணிக்கும் வகையில் திரைக்கதையை வடிவமைத்திருப்பது இயக்குநரின் திறமைதான். “கடைசியாக குழந்தை இருந்ததால் மகிமாவை விட்டுவிட்டேன்…” என்று விஜய் ஆண்டனி சொல்வது ஏற்க முடியாததாக இருக்கிறது என்றாலும் படத்தின் அடுத்தப் பாகத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் லீடிங் இது, என்பது புரிவதால் இதையும் நாம் ஏற்கத்தான் வேண்டும்..!

இப்போது இந்தியா முழுவதுமே மிக அதிகமாகப் பேசப்பட்டு வரும் வார்த்தை ‘வெறுப்பு அரசியல்’. இது மதம், இனம், மொழி, மாநிலம், சாதி சார்ந்தும் இருக்கலாம். இப்படியிருக்கும் இந்த வெறுப்பு அரசியலை வைத்து பக்கவாக ஒரு பட்ஜெட் போட்டு டிவி சேனல்களில் வைத்திருக்கும் மிகப் பெரிய சேவிங் ஹார்ட் டிஸ்க் செட்டப்பில் டேட்டாக்களை வைத்துக் கொண்டு முகம் காட்டாத வில்லியான மகிமா மூலமாக ஒரு அழித்தொழிக்கும் நிறுவனத்தினை திறம்பட காட்டியிருக்கும் இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இப்படியெல்லாம் நடக்குமா என்று நாம் யோசிக்கவே தேவையில்லை. கூலிக்கு கொலை செய்யும் கும்பல்களை இப்போதும் இப்படித்தான் பல பேர் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மூலமாக சில ஆதாயக் கொலைகளையும், பல ஆணவக் கொலைகளையும் செய்துவிட்டு தாங்கள் மட்டும் தப்பித்துக் கொள்கிறார்கள்.

பசியோடு போனவனுக்கு சைவத்திற்குப் பதிலாக அசைவத்தை போட்டு விருந்தளித்துப் பசியாற்றிய கதையாக, எதையும் எதிர்பார்க்காமல் வரும் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு இனிய அதிர்ச்சியை கொடுக்கிறது.

இரண்டரை மணி நேர பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தருகிறார் இயக்குநர்..!

அவசியம் பாருங்கள்..! மிஸ் பண்ணிராதீங்க..!

RATING : 4.5 / 5

Our Score