full screen background image

ரத்னம் – திரைப்பட விமர்சனம்

ரத்னம் – திரைப்பட விமர்சனம்

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனத்துடன் இணைந்தும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ள திரைப்படம் ‘ரத்னம்’.

இந்தப் படத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், கௌதம் வாசுதேவ மேனன், விஜயகுமார்ஒய்.ஜி.மகேந்திரன், வி.டி.வி.கணேஷ்ஜெயப்பிரகாஷ், முரளி ஷர்மா, ஹரிஷ்  பரேடி, குமார், கும்கி அஸ்வின், அஞ்சலிதேவி, துளசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜி ஸ்டுடியோ, இசை – தேவி ஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவு – எம்.சுகுமார், சண்டை இயக்கம் – கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், திலீப் சுப்பராயன், விக்கி, கலை இயக்கம் – பி.வி.பாலாஜி, படத் தொகுப்பு – டி.எஸ்.ஜெய், எழுத்து, இயக்கம் – ஹரி, பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

தாமிரபரணி, ‘பூஜை’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் விஷாலை வைத்து ஹரி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

பிரியா பவான ஷங்கர் விஷாலுக்குத் தாயாகவும், காதலியாகவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

வேலூர் மார்க்கெட்டில் அந்தப் பகுதியின் சின்ன தாதாவான சமுத்திரக்கனியை கொலை செய்ய வந்த தன் தாயின் சாவுக்குக் காரணமான ஒரு ரவுடி பெண்ணை கொலை செய்துவிட்டு சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்குச் செல்கிறார் ‘ரத்னம்’ என்ற விஷால்.

தன் உயிரைக் காப்பாற்றியதால் ரத்னத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் சமுத்திரக்கனி, ரத்னத்தைத் தன் குடும்பத்தில் ஒருவராக வளர்க்கிறார். இந்தக் கால இடைவெளியில் சமுத்திரக்கனி அதே வேலூர் தொகுதிக்கு எம்.எல்.ஏ.,வாகவும் ஆகிவிடுகிறார். இதைத் தொடர்ந்து வேலூரில் சமுத்திரக்கனி கை காட்டும் செயல்களை, நிமிடத்தில் செய்யும் அடியாளாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார் ரத்னம்.

இந்த நிலையில் வேலூருக்கு வரும் கதாநாயகி மல்லிகா’ என்ற ப்ரியா பவானி சங்கரை, விஷால் சந்திக்கிறார். பிரியாவைப் பார்த்தவுடன் அவர் மேல் ஏதோவொரு காரணத்துக்காக பிரியமாகிறார் விஷால்.

அடுத்தக் கட்டமாக வேலூருக்கு நீட் தேர்வு எழுத வரும் பிரியாவை அடியாட்கள் பலர் கொலை செய்ய முயற்சிக்க.. இதைத் தடுத்து அவர்களுடன் சண்டையிட்டு பிரியாவைக் காப்பாற்றுகிறார் விஷால்.

பிரியாவின் குடும்பத்தில் இது குறித்து விசாரித்துப் பார்க்கும்போது நகரியில் இருக்கும் அண்ணன், தம்பிகளான மூன்று ரெட்டிக்காரு வில்லன்கள், பிரியாவை கொலை செய்ய முயல்வது விஷாலுக்குத் தெரிகிறது.

இந்த மோதல் பிரச்சினை ஒரு கட்டத்தில் பிரியாவுடன் நிற்காமல் விஷாலையும் தொடுகிறது. “இனிமேல் இது என் பிரச்சினை…” என்று சொல்லி களத்தில் இறங்கும் விஷால், பிரியாவையும், அவரது குடும்பத்தினரையும் காப்பாற்றத் துடிக்கிறார்.

காப்பாற்றினாரா..? இல்லையா..? அதற்கு என்ன காரணம்..? அந்த 3 ரெட்டிகள் யார்..? அவர்களுக்கும் பிரியாவுக்கும் என்ன மோதல்..? இந்தக் கேள்விகளுக்கான விடைதான் இந்த ‘ரத்னம்’ படத்தின் மிக நீண்ட, நெடிய திரைக்கதை.

ஹரி படம் என்றாலே அது பரபரப்பான திரைக்கதையில் லாஜிக்கே பார்க்க முடியாத வகையில் இருக்கும் என்பது தமிழ் ரசிகர்களுக்குத் தெரியும். இந்தப் படமும் அந்த வகைதான்.

இந்தப் படம் முழுவதையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார் ‘ரத்ன’மாக நடித்திருக்கும் நாயகன் விஷால். கட்டுமஸ்தான உடல் வாகுவுடன், கமர்ஷியல் பட ஹீரோவுக்கு ஏற்ற தோற்றத்துடன் இருக்கும் விஷாலை நம்பித்தான் ஹரி ந்த ரத்னத்தையே உருவாக்கியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

விஷாலின் கடுமையான உழைப்பு படத்தின் அனைத்து சண்டை காட்சிகளிலும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஆக்சன் காட்சிகளில் விஷால் காட்டியிருக்கும் வேகம் அலாதியானது. “இவ்வளவு ஸ்பீடு உடம்புக்கு ஆகாதுய்யா…” என்று எச்சரிக்கையும் செய்ய வேண்டியிருக்கிறது.

அதே நேரம் நடிக்க வேண்டிய காட்சிகளிலும் மனிதர் பொங்கித் தீர்த்திருக்கிறார். அம்மா சென்டிமெண்ட் காட்சிகளில் நடிப்பைக் கொட்டியிருக்கிறார். வில்லன்களிடம் ஸ்டைலாக பேசும்விதத்திலும் கவர்ந்திழுத்திருக்கிறார்.

வழக்கமான கமர்ஷியல் படங்களின் நாயகியாக பாடல் காட்சிக்கு மட்டும் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் போல் இல்லாமல் படம் முழுவதும் வந்து கொண்டேயிருக்கும் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பிரியா பவானி சங்கரால்தான் படம் முழுவதையும் பார்க்க முடிந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

படத்துக்குப் படம் அழகைக் கூட்டிக் கொண்டே போகிறார் பிரியா. நிறைய குளோஸப் காட்சிகளை வைத்து பிரியாவின் ரசிகர்களையும் கூல்’ செய்து படத்துக்கு ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிட்டார் இயக்குநர் ஹரி.

விஷாலை திருமணம் செய்ய விரும்புவதாக வீட்டில் சொல்லி அது தொடர்பாக நடக்கும் பிரச்சினையிலும், பிரச்சினைகளின் அழுத்தம் தாங்காமல் பேசாமல் இடத்தைக் கொடுத்துவிடலாம் என்று விஷாலிடம் சொல்லுமிடத்திலும் அழுத்தமான நடிப்பையும் காண்பித்திருக்கிறார் பிரியா.

வேலூர் எம்.எல்.ஏ.வாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி தனது கம்பீர நடிப்பின் மூலம் தனது கேரக்டருக்கு வலு சேர்த்திருக்கிறார். திரைக்கதையில் மிக முக்கியமான கட்டங்களிலெல்லாம் தலையை நீட்டி திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்.

யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடிதடியைப் பார்த்து நம் கண்ணிலும், காதிலும் வரும் ரத்தத்தைத் துடைக்கும்விதமாக அமைந்து கொஞ்சம் மூச்சுவிட உதவியிருக்கிறது.

வில்லன்களான ரெட்டிகள் முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார் ஆகியோரின் வில்லத்தனம் வழக்கம் போல் மிரட்டியிருக்கிறது. அதிலும் முரளி சர்மாவின் கேரக்டர் ஸ்கெட்ச் சுவாரசியமாகவும், மினிஸ்டரான கஜராஜையே சட்டையைப் பிடித்து உலுக்கும் கோபத்தைப் பார்க்கும்போது அவரது நடிப்பு சபாஷ்போட வைக்கிறது.

மேலும் பிரியாவின் தாத்தா விஜயகுமார், அப்பா ஜெயப்பிரகாஷ், அம்மா துளசி மூவரும் தங்களது குணச்சித்திர நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். அமைச்சரான கஜராஜ் ஒரு சில காட்சிகள் என்றாலும் ரசிக்க வைத்திருக்கிறார். ஒரேயொரு காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனன் அதிரடியாய் நடித்திருக்கிறார்.

“இவாளெல்லாம் அரிவாளைத் தூக்குவாளா..? கத்தியைப் பிடிப்பாளா..?” என்ற சர்ச்சைகள் வரும் அளவுக்கு ஒரு ஐயங்கார் பேமிலியையே பழி வாங்கத் துடிக்கும் குடும்பத்தினராகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஹரி.

ஒய்.ஜி.மகேந்திரன், கணேஷ் வெங்கட்ராமன், மோகன்ராமன் என்று நிஜத்திலும் பிராமணர்களான இவர்களே.. இந்தக் கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பதால் சர்ச்சைகள் எழ வாய்ப்பில்லைதான்.

ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் 10 படங்களில் பார்க்க வேண்டிய வேலையை இந்த ஒரு படத்தில் செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளை அந்த அளவுக்கு தத்ரூபமாக, பயங்கரமாக படமாக்கியிருக்கிறார்.

படத்தில் இருக்கும் 7 சண்டை காட்சிகளிலும் உயிரைக் கொடுத்து உடலைக் கொடுத்து உழைத்திருக்கிறார்கள் சண்டை இயக்குநர்களான கனல் கண்ணன், திலீப் சுப்பராயன், விக்கி, மற்றும் பீட்டர் ஹெயின். படத்தின் இடைவேளை பகுதியில் வரும் தொடர்ச்சியான அந்த 5 நிமிட சண்டை காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது.

தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம். டோண்ட் வொர்ரி’ பாடல் மிகப் பிரபலமாகிவிட்டது. மற்றுமொரு தாய்ப் பாசத்தைச் சொல்லிக் காட்டும் பாடலும் மனதுக்குள் உட்கார்ந்துவிட்டது. பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார் டிஎஸ்பி. தன்னிடம் இருக்கும் அத்தனை வாத்தியக் கருவிகளையும் பயன்படுத்தி நமது காதைப் பஞ்சராக்கியிருக்கிறார்.

இயக்குர் ஹரியின் இயக்கம் என்றாலே அது தொடக்கம் முதல் இறுதிவரையிலும்  பரபரவென இருக்கும் என்பதை அவரது முந்தைய படங்களைப் பார்த்தே நமக்குத் தெரியும். அதே வேகத்தை இந்தப் படத்திலும் காண்பித்திருக்கிறார் ஹரி.

கதைக் களமான ஆந்திரா – தமிழ்நாடு பார்டரான நகரி, வேலூர் என்ற பகுதிகளில் சுழன்றடிக்கும் திரைக்கதை இங்கிட்டும், அங்கிட்டுமாக ஓடி, ஓடி வந்து நம்மையும் தூக்கிக் கொண்டு போகிறது. முதல் காட்சியில் துவங்கும் வேகத்தைக் கடைசிவரையிலும் அப்படியே மெயின்டெயின் செய்திருக்கிறார் ஹரி.

எப்போதும் குடும்ப உறவுகளை விட்டுக் கொடுக்காமல் அவர்களை மையப்படுத்தியே திரைக்கதை அமைக்கும் ஹரி, இந்தப் படத்தில் அதைவிட்டுவிட்டு முழுக்க, முழுக்க ஆக்சனுக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

ஹரியின் மற்றைய படங்களைப் போலவே இந்தப் படத்திலும் அரிவாளும், கத்தியும் அதிகமாகப் பறந்தாலும், அதைவிடவும் வாகனங்கள்தான் அதிகமாக வானத்தில் பறந்துள்ளது.

கூடவே, படம் நெடுகிலும் கால் மணி நேரத்திற்கு ஒரு முறை அவர் கொடுத்திருக்கும் டிவிஸ்ட்டுகள்தான் படத்தை ஆழ்ந்து ரசிக்க வைத்திருக்கின்றன. விஷாலுக்கும் அந்த ரெட்டிகளுக்கும் என்ன தொடர்பு என்ற சஸ்பென்ஸ் மிகவும் சுவாரசியமானது. அந்த முடிச்சை அவிழ்க்கும் இடமும் ரசிக்கக் கூடியதாக அமைந்திருந்தது.

மேலும் வசனங்கள் மூலமாக, மாநிலப் பிரிவினையின்போது தமிழர்களின் நிலங்கள் ஆந்திராவில் ஆக்கிரமிக்கப்பட்டவிதம், நிலச்சுவான்தாரர்களின் அடாவடித்தனம், அரசியல்வியாதிகளின் அட்டூழியம், சாதாரண மனிதனுக்கு ஒரு சட்டம்.. அரசியல்வியாதிகளுக்கு வேறொரு சட்டம் என்றிருப்பதையும் பல வசனங்கள் மூலமாகச் சுட்டிக் காட்டியிருக்கார்.

நீட் தேர்வு பற்றிய கிண்டல், தேர்வில் தோற்றால் தற்கொலை எண்ணத்திற்குச் செல்லாமல் அடுத்தடுத்து படிப்புகளை தொடர்ந்து கொண்டு விடாமுயற்சியாக நீட்டை எழுதி தேர்வாக வேண்டும் என்று பிரியாவின் கதாப்பாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ரவுடிகள் சாம்ராஜ்யம், அரசியல் அடாவடிகள், காதல், காமெடி, அம்மா செண்டிமெண்ட், ன்று அனைத்து மசாலாக்களையும் சரியான விதத்தில் கலந்தளித்து  அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இந்தப் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் ஹரி,

என்ன ஒரேயொரு குறை..!? படத்தின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் படத்தின் பின் பாதியில் நெளிந்து கொண்டே, கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே படம் பார்க்கும் தோரணை நமக்கு வந்திருக்காது.

RATING : 3.5 / 5

Our Score