full screen background image

‘ஒரு நொடி’ – சினிமா விமர்சனம்

‘ஒரு நொடி’ – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த ஒரு நொடிபடத்தில் தொட்டால் தொடரும்பட நாயகனும் அயோத்திபடத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் முற்றிலும் புதிய பாத்திரம் ஒன்றில் நாயகனாக நடிக்க, அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, பழ.கருப்பையா, கஜராஜ், அருண் கார்த்திக், தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி, குரு சூரியா, விக்னேஷ் ஆதித்யா, மதுரை அழகர், கருப்பு நம்பியார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர்.

எழுத்து, இயக்கம் – பி.மணிவர்மன், ஒளிப்பதிவு – கே.ஜி.ரத்தீஷ், கலை இயக்கம் – எஸ்.ஜே.ராம், இசை சஞ்சய் மாணிக்கம், படத்தொகுப்பு – எஸ்.குரு சூர்யா, பாடலாசிரியர்கள்ஜெகன் கவிராஜ், சிவசங்கர். உதயா அன்பழகன், சண்டை இயக்கம்மிராக்கிள் மைக்கேல், பத்திரிக்கை தொடர்புவெங்கடேஷ்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை வழங்குகிறார்..

முதல் படத்திலேயே முத்திரை பதிக்க விரும்பும் இயக்குநர், ஆர்வமும், நேர்மையும் மிக்க புதிய தயாரிப்பாளர், வளர்ந்து வரும் இளம் நடிகர் பட்டாளம் என்று ஆர்வமிக்க  இந்தக் கூட்டணி இந்த ஒரு நொடிபடத்தின் மூலம் திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை ஒன்றை  புதி கோணத்தில் சொல்லியிருக்கிறது. இத்திரைப்படத்தில் இருக்கும் ரசிகர்கள் யூகிக்க முடியாத மர்ம முடிச்சுகள்தான் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம்.

அலங்காநல்லூரில் சின்னதாக போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் தனது மகளின் கல்யாணத்துக்காக வாங்கிய 6 லட்சம் ரூபாய் கடனை அடைக்க முடியாமல் திண்டாடுகிறார். வட்டியோடு சேர்த்து 8 லட்சம் ரூபாய் ஆன நிலையில் தன்னிடம் வாங்கிய கடனை, கந்து வட்டி தாதாவான ‘கரிமேடு தியாகு’ என்ற வேல ராம்மூர்த்தியிடம் கை மாற்றிவிடுகிறார் கடன் கொடுத்த நபர்.

வேல ராமமூர்த்தியோ எம்.எஸ்.பாஸ்கரின் மகள் வீட்டில் பிரச்சினை செய்வேன் என்று மிரட்டி எம்.எஸ்.பாஸ்கருக்குச் சொந்தமான நிலத்தின் பத்திரத்தை பிடுங்கிச் செல்கிறார்.

மிகுந்த பிரயத்தனப்பட்டு அந்த 8 லட்சம் ரூபாயைப் புரட்டியெடுத்துக் கொண்டு வேல ராம்மூர்த்தியை சந்திக்க செல்லும் எம்.எஸ்.பாஸ்கர், அதற்குப் பின் வீடு திரும்பவில்லை. பாஸ்கரின் மனைவி ஸ்ரீரஞ்சனி அலங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார்.

அந்த ஸ்டேஷனின் இளம் இன்ஸ்பெக்டரான இளமாறன் என்ற தமன்குமார் இந்த வழக்கை விசாரித்து வேல ராமமூர்த்தியையும், அவரது கூட்டாளிகள் நால்வரையும் விசாரிக்கிறார்.

இதே நேரத்தில் அதே ஊரை சேர்ந்த நிகிதா என்ற இளம் பெண் ஒரு தென்னந்தோப்பில் படுகொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலை வழக்கும், எம்.எஸ்.பாஸ்கர் காணாமல் போன வழக்கும் ஒரே நேரத்தில் இந்த ஸ்டேஷன் அதிகாரிகளால் விசாரிக்கப்படுகிறது.

இறுதியில் என்னவாகிறது..? இந்த இரண்டு வழக்குகளுக்கும் சம்பந்தம் உண்டா.. இல்லையா..? எம்.எஸ்.பாஸ்கர் திரும்பக் கிடைத்தாரா..? நிகிதாவை கொலை செய்தது யார்..? என்ற கேள்விகளுக்கான விடையை 128 நிமிடங்கள் கொண்ட இத்திரைப்படத்தின் கிரைம், மர்டர், சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த சுவையான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநரான பி.மணிவர்மன்.

தனது முதல் படத்திற்கான முனைப்பை இந்தப் படத்திலும் காண்பித்திருக்கிறார் ஹீரோ தமன்குமார். எப்படியாவது லைம் லைட்டுக்கு வந்துவிடவேண்டும் என்று துடியாய் துடிக்கும் தமனின் முயற்சிக்கு இந்தப் படம் ஒரு ஏணியாய் இருக்கட்டும்.

இன்ஸ்பெக்டருக்கான கெத்தோடு, கனத்த வாய்ஸோடு, எம்.எல்.ஏ.வையே எதிர்த்துப் பேசும் தைரியத்தோடும், அடாவடி கந்துவட்டி பார்ட்டியான வேல ராமமூர்த்தியின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் செல்லும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக தன் அளவுக்கு மிரட்டியிருக்கிறார் தமன்.

விசாரணை அதிகாரிகளுக்கே உரித்தான கம்பீரம், இடைவெட்டுப் பேச்சுக்கள், குறுக்கு விசாரணை தோரணைகள், சமயோசித புத்தியின் நடவடிக்கைகள், இறந்த வீட்டில் நாகரிகத்தைப் பேணுதல்.. விசாரணையில் போட்டு வாங்கும் வித்தை என்று தன்னுடைய ஏரியா அனைத்திலும் கச்சிதமாக நடித்திருக்கிறார் தமன்.

ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கான அத்தனை தகுதிகள் இருந்தும் இதுவரையிலும் தமனுக்கு மிகப் பெரிய பிராஜெக்ட்டுகள் கிடைக்காதது வருத்தமே.. இனி வருமென்று நம்புவோம்..!

ச்சும்மாவே நடிப்பை ஊதித் தள்ளும் எம்.எஸ்.பாஸ்கருக்கு ‘சேகரன்’ என்ற சாதாரணமான ‘மிடில் கிளாஸ் மாதவன்’ போன்று லட்டான வேடம் கிடைத்தால்விட்டுவிடுவாரா என்ன..? இதில் தனக்குக் கிடைத்த கேப்பில் எல்லாம் கெடா வெட்டுவதுபோல நடித்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அவருடைய தோற்றமும், பேச்சுமே அப்பாவி அப்பாவுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் கண்ணீரை உதிர்த்து படத்தின் சோகத் தன்மை போய்விடாமல் பார்த்துக் கொண்டு படத்தின் மீதான ஈர்ப்பை ரசிகர்களிடமிருந்து விலகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவி ‘சகுந்தலா’வாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி.

கிளைமாக்ஸ் காட்சியில் விக்னேஷை ஏறெடுத்துப் பார்க்காமல் கையெடுத்துக் கும்பிட்டுக் கதறியழும் காட்சியில் மொத்த தியேட்டரையும் ஆஃப் செய்துவிட்டார் ஸ்ரீரஞ்சனி. வாழ்த்துகள் மேடம்..!

படத்தின் மிக முக்கியமான டர்னிங் பாயிண்ட் கேரக்டரை ஏற்றிருக்கும் விக்னேஷ் ஆதித்யா, தன் தரப்பு நியாயத்தை கதறி அழுது சொல்லும்போது இன்ஸ்பெக்டர் தமனை போலவே நம்மாலும் எதுவும் சொல்லத்தான் முடியவில்லை. இவருடைய மிக இயல்பான நடிப்பே இந்த டிவிஸ்ட்டின் மீதான நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

வழக்கமான தாதாவாக வேல ராமமூர்த்தி முறைத்து, முறைத்தே தனது கனத்த முகத்தை இன்னமும் கனமாக்கியிருக்கிறார். அநியாயத்துக்குத் துணை போகும் எம்.எல்.ஏ.வான பழ.கருப்பையா இன்றைய அரசியலை பிரதிபலிக்கும் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரான அழகர், நிகிதாவின் அப்பா கதாப்பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்துள்ளார். நிகிதாவின் அம்மாவான தீபா சங்கரின் நடிப்பில் கொஞ்சம் ஓவர் ஆக்ட் என்றாலும் அதுதான் அந்தக் காட்சியை மறக்க முடியாமல் செய்திருக்கிறது.

மேலும் நிகிதா, இவரைக் காதலிக்கும் அருண் கார்த்திக் இருவருக்குமான காதல் போர்ஷன் மிகக் குறைவான நேரம் என்றாலும் ரசிக்கக் கூடியதாக இருந்தது.

மீடியம் பட்ஜெட் படங்களுக்கே உரித்தான வகையிலான ஒளிப்பதிவு சஸ்பென்ஸ், திரில்லர் படங்களின் தன்மை கெடாமல் வலம் வந்திருக்கிறது. குறிப்பாக நிகிதாவின் சடலத்தைக் காணும் தருணம், அந்தச் சடலத்தைக் காட்டும் கோணங்கள்.. நாய்களுக்கு உணவளிக்கும் இடத்தில் முகத்தையே காட்டாமல் படமாக்கியிருக்கும்விதம்.. இது போன்றவற்றில் ஒளிப்பதிவாளர் கதைக்கு மிகவும் உதவியிருக்கிறார்.

ஒரே சம்பவத்தை பலரும் மீண்டும், மீண்டும் சொல்லிக் காட்டும்விதத்தில் புதிய, புதிய விஷயங்களை ஒவ்வொன்றாகச் சொல்வதால் அது அத்தனையையும் கச்சிதமாகப் பொருந்திப் போகும் அளவுக்குப் படத் தொகுப்பு செய்திருக்கும் தொகுப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள்.

காதைக் கிழிக்கும் இசையெல்லாம் போடாமல் திரைக்கதையினூடேயே நாம் பயணிக்கும் வகையில் பின்னணி இசையை அமைத்திருக்கும் சந்தோஷ் மாணிக்கத்திற்கும் ஒரு பாராட்டு.

பாடல்களில் ‘ஒரு நொடி’ பாடலை முழுமையாக கேட்கும்வகையில் மெல்லிய இசையை அமைத்திருக்கிறார். ‘கொல்லாத கண்ணார’ பாடலை பாதியோடு நிறுத்திவிட்டார்கள். திரைக்கதையின் சோகத்தை திசை திருப்புகிறது என்பதால் இந்தத் தடை போலும்..! இது போன்ற சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கு பாடல்கள் எப்போதுமே வேகத் தடைதான்..!

இது போன்ற கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் டைப் படங்கள்தான் தற்போது அதிகமாக தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்கின்றன. அந்தப் படங்களில் இருந்து இத்திரைப்படம், சஸ்பென்ஸை கடைசிவரையிலும் கட்டிக் கப்பாற்றி, எதிர்பாராத டிவிஸ்ட்டை முன் வைத்த வகையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

ஒரு நொடியில் நடக்கும் அசம்பாவிதத்தால் விளையும் எதிர்வினைகளால் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை முழுக் கதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அவராக இருக்குமோ.. இவராக இருக்குமோ என்று நம்மை பதைபதைக்க வைக்கும் வகையில் திரைக்கதையைக் கொண்டுபோய் கடைசியில் யாருமே ஊகிக்க முடியாத அளவில் உண்மையை உடைத்திருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதைக்காக இயக்குநருக்கு மிகப் பெரிய ஷொட்டு..!

தன்னை அறியாமல் தவறுகள் எதை செய்தாலும் உடனடியாக அதை ஒத்துக் கொள்வதுதான் நல்லது. ஒரு தவறை மறைக்க மேலும், மேலும் தவறுகளை செய்து கொண்டே போவதால் பிரச்சினைகள் வளர்ந்து கொண்டேதான் போகுமே ஒழிய.. பிரச்சினை தீராது.. நிம்மதியும் இராது.

நாளை யாருக்கு என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாத நிலையில் எதிர்பாராத விபத்துக்களுக்கு நாம் முற்றிலும் பொறுப்பேற்க முடியாது என்றாலும் தார்மீக ரீதியில் நாம் அதற்கு உடன்பட்டுத்தான் வேண்டும் என்பதோடு, அதன் பின் விளைவுகளையும் நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதை அழுத்தமாக இத்திரைப்படம் முன் வைத்திருக்கிறது.

சிற்சில லாஜிக் எல்லை மீறல்கள் இருந்தாலும் சிறந்த திரைக்கதைக்காகவும், இயக்கத்துக்காகவும் அவற்றை நாம் மன்னிப்போம்..!

இந்த ‘ஒரு நொடி’ திரைப்படம், நிஜமாகவே தியேட்டருக்கு வருபவர்களை ஒரு நொடிகூட ஏமாற்றாது என்று உறுதியளிக்கிறோம்..!

 RATING : 4 / 5

 

Our Score