‘கட்டப்பாவ காணோம்’, ‘சத்யா’ படங்களுக்குப் பிறகு நடிகர் சிபிராஜின் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படம் ‘ரங்கா’.
BOSS மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கே.செல்லையா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் சிபிராஜுடன் படத்தின் நாயகியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். மேலும், சதீஷ், ரேணுகா, ‘லொள்ளு சபா’ ஸ்வாமிநாதன், ஜீவா ரவி, சுஜாதா பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – வினோத், இசை – ராம் ஜுவன், ஒளிப்பதிவு – அர்வி, கலை இயக்கம் – அருண் ஷங்கர் துரை, சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன், ஆடை வடிவமைப்பு – சத்யா என்.ஜே., விளம்பர வடிவமைப்பு – ட்யூனி ஜான், 24 A.M. நடன இயக்கம் – விஜி, தஸ்தா, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்தே ஏதோ புதிதாக ஒரு விஷயம் படத்தில் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு சமூகப் பிரச்சினையின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தின் மொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துவிட்டது. படம் சிறப்பாக வந்திருப்பதால் படக் குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இத்திரைப்படம் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் விஜய் கே.செல்லையா, “வழக்கமாக, தயாரிப்பாளர்கள் படத்தின் வெற்றிக்கு பிறகுதான் நன்றி சொல்வார்கள். ஆனால் நான் இதுதான் நன்றி சொல்ல சரியான நேரம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், படக் குழுவினரின் உழைப்பும், ஒத்துழைப்பும், ஆதரவும் அப்படி இருந்தது.
குறிப்பாக, காஷ்மீரின் கடும் குளிரில், மிகவும் அசாதாரணமான சூழலில் சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் இருவரும் அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்தது பாராட்டுக்குரியது. இந்த மாதிரியான சிக்கலான இடங்களில், குறிப்பிட்ட காலத்துக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்தது. சிபிராஜ், நிகிலா மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது.
குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை பார்த்தபோதே, எனக்குள் உற்சாகம் தொற்றிக் கொண்டது. படத்தின் இறுதி வடிவத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்…” என்றார் தயாரிப்பாளர் விஜய் கே.செல்லையா.
இயக்குநர் வினோத் பற்றி அவர் கூறும்போது, “அவர் என்னிடம் கதை சொன்னவிதமும், ரங்கா என்கிற தலைப்பின் முக்கியத்துவத்தை சொன்னதும் என்னை மிகவும் கவர்ந்தது. ‘காக்கும் கடவுள் ரங்கநாதன்’ என்பதன் தொடர்புதான் ‘ரங்கா’ என்ற தலைப்பு.
இயக்குநர் வினோத் சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தது என்னை போன்ற ஒரு தயாரிப்பாளருக்கு கிடைத்த வரம். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த திரைப்படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்…” என்றார்.