full screen background image

ரன்பீர் கபூர்-ஆலியா பட் திருமணம் – சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பில்லையாம்..!

ரன்பீர் கபூர்-ஆலியா பட் திருமணம் – சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பில்லையாம்..!

பாலிவுட்டின் நட்சத்திர காதலர்களான நடிகர் ரன்பீர் கபூருக்கும், நடிகை ஆலியா பட்டுக்கும் வரும் ஏப்ரல் 14-ம் தேதியான காதலர் தினத்தன்று திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவின் முதல் குடும்பம் என்றழைக்கப்படும் கபூர் குடும்பத்தில் பிருத்விராஜ் கபூரின் கொள்ளுப் பேரனும், ராஜ்கபூரின் பேரனும், ரிஷிகபூரின் மகனுமான ரன்பீர் கபூர் புகழ் பெற்ற திரைப்பட நடிகராகத் திகழ்கிறார்.

இவருக்கும் சக பாலிவுட் நடிகையான ஆலியா பட்டுக்கும் இடையில் பல ஆண்டுகளாக காதல் இருந்தது. அலியா பட் பிரபல பாலிவுட் இயக்குநரான மகேஷ் பட்டின் இளைய மகளாவார்.

இவர்கள் இருவரும் இம்மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளி வந்தது. ஆரம்பத்தில் இவர்களது திருமணம் ஏப்ரல் 17-ம் தேதி என்றும் பின்னர் 16-ம் தேதி என்றும் குழப்பமான தகவல்களே வெளியானது. ஆனால் இது தொடர்பாக ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் குடும்பத்தினர் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். இதனால் திருமணம் எப்போது என்பது குழப்பமாக இருந்தது.

ஆனால், தற்போது ஆலியாபட் குடும்பத்தில் இருந்து திருமண தேதி தொடர்பான செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். வரும் ஏப்ரல் 14-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக ஆலியா பட்டின் சித்தப்பாவான ராபின் பட் தெரிவித்துள்ளார். இந்தத் திருமண நிகழ்ச்சிகள் 15-ம் தேதி வரை நடைபெறுமாம்.

ரன்பீர் கபூரின் பெற்றோரான ரிஷி கபூர்-நீது கபூருக்கு திருமணம் நடந்த செம்பூரில் இருக்கும் ராஜ் கபூர் குடும்பத்தினரின் பூர்வீகமான ஆர்.கே.பங்களாவில்தான் ரன்பீர் கபூர்-ஆலியா பட் திருமணம் நடக்கவுள்ளது.

ஆனால், மற்ற சடங்குகள் பாந்த்ரா சாலையில் இருக்கும் ரிஷிகபூரின் இல்லத்தில் நடக்க இருக்கிறது. பாந்த்ரா இல்லத்தில்தான் மணமக்கள் இருவரும் திருமண உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள் என்று ராபின் பட் தெரிவித்துள்ளார்.

இத்திருமணத்திற்கு பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 450 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனராம். ஆனால், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான சல்மான்கானும், ரன்பீர் கபூரின் முன்னாள் காதலியான கத்ரீனா கைப்பும் அழைக்கப்படவில்லை என்று பாலிவுட் உலகமே கிசுகிசுக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் தென்னாப்பிரிக்காவிற்கு தேனிலவு செல்ல திட்டமிட்டுள்ளனராம்.

Our Score