நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி நடிகர் விஜய்யின் தனிப்பட்ட பேட்டி நேற்று மாலை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநரான நெல்சனே விஜய்யிடம் கேள்விகளை கேட்டார்.
இந்தப் பேட்டியில் நடிகர் விஜய் பலவித கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது “நாளை என்னை தலைவனாகு என்று என் ரசிகர்கள் சொன்னால் அதுவும் நடக்கும்” என்று தெரிவித்தார்.
இதில் இருந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்குத் தயார் நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
நடிகர் விஜய் அளித்த பேட்டியின் தொகுப்பு இது :
“10 வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருந்தேன். அப்போது அவர்கள் எழுதியது படிக்கும்போது வேற மாதிரியான அர்த்தத்தில் இருந்தது. அது எனக்குக் கொஞ்சம் சந்தோஷமாக இல்லை.
என் குடும்ப உறுப்பினர்கள் உட்பட சிலர், “அந்தப் பேட்டியைப் படிக்கும்பொழுது தெனாவட்டா பேசுன மாதிரி இருந்துச்சு”ன்னு சொன்னாங்க. நான் உடனேயே சம்பந்தப்பட்ட நபரை அழைத்து, “நான் அப்படிச் சொல்லவில்லை” என்பதை விளக்கினேன். மேலும் என்னால், எல்லா நேரத்திலும் இது மாதிரி எல்லோருக்கும் விளக்கம் சொல்லிட்டிருக் முடியாதில்லையா…? அதனால்தான் சில காலம் பேட்டி கொடுக்காமல் விலகி இருந்தேன்.
எனக்கு ஒரு விஷயம் பிடிச்சிருக்கா.. இல்லையான்னு தெரிஞ்சுக்கவே முடியலைன்னு என் குடும்பத்தினர்கூட சொல்லுவாங்க. எனக்கும் சில சமயங்களில் கோபம் வரும். ஆனால், நான் பெரிதாக, வெளிப்படையாக ரியாக்ட் செய்ய மாட்டேன். நமது பிரச்சனைகளில் பெரும்பாலானவை கோபம் அல்லது வெறுப்பின்போது எடுக்கும் முடிவுகளிலிருந்துதான் வருகின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இப்போது என்னிடம் இருப்பது ஒரேயொரு கொள்கைதான். அது “எல்லாத்தையும் ஈஸியாக எடுத்துக்கணும்..!” அவ்வளவுதான்.
அப்பா என்பவர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மரத்தோட வேர் மாதிரி. அப்பாவுக்கும் கடவுளுக்கும் ஒரு வித்தியாசம்தான். கடவுளை நம்ம பார்க்கவே முடியாது. ஆனால், அப்பாவைப் பார்க்க முடியும். அதுதான் வித்தியாசம்.
எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கு. ‘துப்பாக்கி’ படப்பிடிப்பின்போது தேவாலயத்திற்கும், கோவில்களுக்கும், அமீன் பீர் தர்காவிற்கும் சென்றிருக்கேன். எல்லா இடங்களிலும் தெய்வீக உணர்வை உணர்ந்திருக்கிறேன்.
என் அம்மா ஒரு இந்து. என் அப்பா ஒரு கிறிஸ்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான் எங்கு செல்ல வேண்டும் அல்லது செல்லக்கூடாது என்று ஒருபோதும் கட்டுப்படுத்தாத குடும்பத்தில் வளர்ந்தேன். நானும் என் குழந்தைகளுக்கும் இதைத்தான் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.
என் மகன் சஞ்சய் நடிப்பதை பார்க்க நானும்தான் ஆசைப்படுகிறேன். அதேசமயம், அவருக்கு அதில் விருப்பவில்லை என்றால் அதை வற்புறுத்தவும் மாட்டேன். ஒரு தடவை ‘பிரேமம்’ பட இயக்குநர் என் வீட்டுக்கு வந்தாரு. எனக்குத்தான் கதை சொல்ல வராருன்னு நினைச்சேன். ஆனால், அவரோ “உங்க பையன்கிட்ட கதை சொல்லணும்” என்று சொல்லி அந்தக் கதையைச் சொன்னாரு. அந்தக் கதை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. சஞ்சய் ஒத்துக்கணும்ன்னு நினைத்தேன். ஆனால் அவன் சினிமாவில் கால் வைக்க கொஞ்சம் கால அவகாசம் கேட்டான். அவன் எது பண்ணிணாலும் எனக்கு சந்தோஷம்தான். நான் எந்தவிதத்திலும் அவனை வற்புறுத்தவில்லை.
இன்று எனது ரசிகர்கள் நான் ‘தளபதியாக’ ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாளை நான் ‘தலைவனாக’ இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், அதுவும் அப்படியே நடக்கும்…” என்றார் நடிகர் விஜய்.