எல்லோரும் தகவலைச் சொல்வதற்காகவும், தங்களுடைய கருத்தைத் தெரிவிப்பதற்காகவுமே ட்வீட் செய்வார்கள். பேஸ்புக்கில் கமெண்ட் போடுவார்கள். இயக்குநர் ராம்கோபால்வர்மா மட்டுமே விதிவிலக்கு. ஏதாவது பரபரப்பை உண்டு செய்வதற்காகவே மனிதர் ட்வீட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்திய அவரது ட்வீட்டில் ரஜினி, ஜெயலலிதா இருவரையுபம் சேர்த்தே வாரியிருக்கிறார்.
‘ஐ’ படத்தின் டிரெயிலர் கடந்த வாரம் வெளியானது தெரிந்ததே. இந்தப் படத்தின் டிரெயிலரை பார்த்த ராம்கோபால்வர்மாவுக்கு ஷங்கர் மீது காதல் வந்துவிட்டதுபோலும். மனிதர் பொங்கித் தீர்த்திருக்கிறார் ட்வீட்டரில்..!
ராம்கோபால்வர்மா தனது ட்வீட்டில், “திரையுலகத்துக்கு அப்பாற்பட்ட ஒரு சராசரி மனிதனாக இந்த டிரெய்லரை பார்த்த பிறகு… தமிழ்நாட்டில் ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோரைவிட ஷங்கர் மிகப் பெரியவர் என நான் உணர்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார்.
மேலும், “ஐ’ படத்தின் முதல் நாள் வசூல் ‘லிங்கா’ படத்தின் வசூலைவிட அதிகமாக இருக்கும் என்பது எனது கணிப்பு. அதனால்தான், ரஜினிகாந்தைவிட ஷங்கர் மிகப் பெரியவர் என்று நான் கூறுகிறேன். இதற்கு முன்பு ரஜினிகாந்தின் மிகப் பெரிய விசிறியாக இருந்த நான், தற்போது ஷங்கரின் ஆதரவாளனாக மாறிவிட்டேன்..” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நமக்கும் ஒரு சந்தேகம்.. ஒரு படத்தின் டிரெயிலர் அசத்தலாக இருப்பதற்கு.. அந்த படத்தின் இயக்குநர் திறமைசாலியாக இருப்பதற்காக.. மாநிலத்திலேயே அந்த இயக்குநர்தான் மிகப் பெரியவர் என்று எப்படி, எந்த அளவுகோலை வைத்து சொல்ல முடியும்..? வர்மாவுக்கே வெளிச்சம்..!
ரத்தத்தின் ரத்தங்கள் அதிகமாக இது போன்ற செய்திகளை படிக்க மாட்டார்கள். ஆக.. இப்போதைக்கு தப்பித்திருக்கிறார் வர்மா..!