‘லிங்கா’ விநியோகஸ்தர்களுக்கு பணத்தைத் திருப்பித் தர ரஜினி முடிவு..!

‘லிங்கா’ விநியோகஸ்தர்களுக்கு பணத்தைத் திருப்பித் தர ரஜினி முடிவு..!

‘லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரத்தில் புதிய திருப்பமாக விநியோகஸ்தர்கள் நஷ்டப்பட்ட தொகையில் குறிப்பிட்ட அளவு தொகையைத் திருப்பித் தர சூப்பர் ஸ்டார் ரஜினி சம்மதம் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பலவிதங்களில் முயன்றும் ரஜினியை அணுக முடியாமல் தவித்த விநியோகஸ்தர்கள் கடைசியாக ரஜினி வீட்டு முன்பாகவே பிச்சையெடுக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாகவும், இதற்கு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் வரப் போவதாகவும் எச்சரிக்கை செய்தியொன்றை கடைசியான பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தனர்.

இதைக் கேட்டு இன்னும் குழப்பமான கோடம்பாக்கம் உண்மையிலேயே இந்த விநியோகஸ்தர்களின் பின்னணியில் இருப்பது யார் என்பது தெரியாமல் த்த்தளித்த்து.. அரசியலா..? விநியோகஸ்தர்களா..? அல்லது தியேட்டர் உரிமையாளர்களா என்பது இப்போதுவரையிலும் தெரியாத அளவுக்கு அரசியல்வாதிகளுக்கே சவால் விடும்வகையில் அரசியல் நடத்தி வருகிறார்கள் லிங்கா விநியோகஸ்தர்கள்.

இன்றைய செய்தியின்படி சூப்பர் ஸ்டார் ரஜினி இதற்கு மேலும் வீணாண பிரச்சனைகள் வேண்டாம் என்று கருதியும், விநியோகஸ்தர்களின் நலன் கருதியும், நஷ்டஈடாக பல கோடிகளைத் தர முன் வந்திருக்கிறாராம்.

விநியோகஸ்தர்கள் கடைசியாக பேசும்போது தங்களுக்குக்கூட வேண்டாம். தியேட்டர்காரர்களிடமிருந்து வாங்கிய அட்வான்ஸ் தொகையான 18.50 கோடியை மட்டுமாவது கொடுத்தால்போதும் என்று கோரியிருந்தார்கள். ஆனால் ரஜினியோ இதனுடன் கூடவே 6.50 கோடியை விநியோகஸ்தர்களுக்கும் சேர்த்து மொத்தம் 25 கோடியை தர சம்மதம் தெரிவித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது நிச்சயம் வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது.. இந்த 25 கோடி ரூபாயை ரஜினி தனக்குக் கிடைத்த சம்பளத்தில் இருந்து தனியே கொடுக்கப் போவதாகவும் தகவல்.. இந்தச் செய்தி உண்மையானால் சினிமா துறையில் என்றைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது இதன் மூலமும் உறுதியாகும்..!

இப்படி நஷ்ட ஈடாக செல்லும் பணம் நிச்சயம் இதே கோடம்பாக்கத்திற்குள்தான் மறுபடியும் நுழையப் போகிறது. ரஜினியின் இந்தச் செயல் தமிழ்ச் சினிமாவை நிச்சயம் வாழ வைக்கும் என்றே சொல்லலாம்..!

 

Our Score