full screen background image

“ரஜினி, கமல்கூட நான் போடாத சண்டையா..?” – இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் பேச்சு..!

“ரஜினி, கமல்கூட நான் போடாத சண்டையா..?” – இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் பேச்சு..!

வடபழனி கமலா திரையரங்கில் இன்று காலை நடைபெற்ற ‘விரைவில் இசை’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது ரஜினி, கமல் பற்றியும், அவர்களுடனான தனது சண்டைகள் பற்றியும் சுவாரஸ்யமாக பேசினார்.

அவருடைய பேச்சில் இருந்து சில பகுதிகள் இங்கே :

“ரஜினி திரையுலகில் நுழையும்போது அவருக்கு ஒரு சவால் இருந்தது. அப்போது நடிப்பில் கொடி கட்டிப் பறக்கும் சிவாஜி இருந்தார். நினைத்த தோற்றத்தில் மாற்றிக் கொண்டு நடிக்கும் கமலும் இருந்தார்.  ‘இவர்களுக்கு இடையில் நான் புகுந்து எப்படி வெற்றி பெறுவது என்று யோசித்தேன். அதனால்தான் எனக்கென்று ஒரு ஸ்டைல், ஸ்பீடு, வேகம் என்பதை என் பாணியாக சேர்த்துக் கொண்டு நடித்தேன். வெற்றி பெற்றேன்’ என்று தன்னுடைய திரையுலக வாழ்க்கையின் வெற்றி பற்றி ரஜினியே என்னிடம் கூறியிருக்கிறார்.

ஏவி.எம்.மின் ‘முரட்டுக் காளை’யில் ஜெய்சங்கரை வில்லனாக்கியபோது எங்களை நம்பி அவர் நடிக்க ஒப்புக் கொண்டார். இதையறிந்த ரஜினி ‘அவரை மதிக்கும் வகையில் ஜெய்-ரஜினி என்று இருவரையும் சம அளவில் போஸ்டர்களில் விளம்பரப்படுத்தச்’ சொன்னார். ‘அந்த வில்லன் பாத்திரத்தை வழக்கமானதாக, சாதாரணமாக அமைத்துவிட வேண்டாம். எனக்கு இணையாக அவரது பாத்திரத்தையும் பெரிதாக அமைக்க வேண்டும்’ என்றார் ரஜினி.  

நான் ரஜினியை வைத்து 25 படங்கள் இயக்கியிருக்கிறேன். கமலை வைத்து10 படங்கள் இயக்கியிருக்கிறேன். நடிகர் திலகத்தை வைத்து 3 படங்களை இயக்கியிருக்கிறேன். இதெல்லாம் எப்படி..?  எங்களுக்குள் அந்தளவுக்கு நல்ல புரிதல் இருந்தது.  

எங்களுக்குள் சண்டையே வந்ததில்லையா..? வந்தது. ரஜினியுடனும், கமலுடனும் நான் போடாத சண்டைகளா..? அந்தச் சண்டையையெல்லாம் பார்த்தவர்கள், ‘இவர் இனி ரஜினி படம் எடுக்கமாட்டார். இவர் இனி கமல் படம் எடுக்கமாட்டார். இதுவே இவர்களது கடைசி படம்’ என்றுதான் பேசுவார்கள். ஆனால் அவர்கள் எனக்குத்தான் அதிகப் படங்களை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்கள்.

எங்களுக்குள் தனி மனித ஈகோ இல்லை. நீயா, நானா போட்டி இல்லை. படம், காட்சி எப்படி சிறப்பாக வர வேண்டும் என்பதற்கான கருத்து மோதல்தான் அது. ஒன்று, எது சரியென்று நான் அவர்களை சமரசம் செய்ய வேண்டும். இல்லையேல் அவர்கள் சொல்வதில் நான் சமரசம் ஆக வேண்டும். எல்லாமே படத்துக்காக மட்டும்தான். இப்படித்தான் எங்களது கலைப் பயணம் கடைசிவரையிலும் தொடர்ந்தது..” என்றார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். 

Our Score