full screen background image

ரெண்டு புள்ளைய பெத்திட்டு.. என் கைல கொடுத்திட்டு.. – ரஜினியின் ஆசை..!

ரெண்டு புள்ளைய பெத்திட்டு.. என் கைல கொடுத்திட்டு.. – ரஜினியின் ஆசை..!

நேற்றைய ‘கோச்சடையான்’ இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியதில் இருந்து சில பகுதிகள் :

kochadaiyaan-audio-25

“இந்த விழாவுக்கு நன்றி சொல்வதற்காகவே வந்தேன்.  படத்தோட வெற்றி விழாலதான் நிறைய பேசுவேன். பேசப் போறேன். இப்போ முதல்ல இந்தப் படம் எப்படி உருவாச்சுன்றதை சொல்லிடறேன்.

மொதல்ல எனக்கு எப்பவுமே ராஜா, ராணி கதைன்னா ரொம்பப் பிடிக்கும். நான் படிக்கிற புத்தகத்துலயே once upon a time one raja and queen அப்படீன்னு இருந்தால்தான் அந்தக் கதையையே படிப்பேன். 200 படத்துக்கு மேல நடிச்சும் இது மாதிரியான ராஜா, ராணி கதைல நடிக்க முடியலையேன்ற ஆதங்கம் எனக்குள்ள இருந்துக்கிட்டேயிருக்கு..  ஆண்டவன் புண்ணியத்தில் பணம், புகழ் நிறைய சம்பாதிச்சிருக்கேன். எல்லாமே இந்தத் தமிழக மக்கள் கொடுத்தது.

சரி.. இனிமே யாரும் அந்த மாதிரி ராஜா ராணி கதையோட வர மாட்டாங்க.. நாமளே செய்ய முடியாதோன்னு நினைச்சேன். தமிழக மக்கள் என் மீது காட்டுன அன்புக்காக அவங்களுக்கான நன்றிக் கடனா தமிழ்ச் சினிமால ஏன் இந்தியாவிலேயே இதுவரைக்கும் யாருமே செய்ய முடியாத அளவுக்கு பிரமாண்டமா ஒரு படத்தை எடுக்கலாம்னு பிளான் பண்ணேன்..

இந்த ராணா கதை 20 வருஷமா என் மைண்ட்ல ஓடிக்கிட்டிருக்கு.. சரி.. இதை எடுத்துப் பார்ப்போம்னு எடுக்க ஆரம்பிச்சப்போ எனக்கு உடம்பு சரியில்லாம போயி.. நான் ஆஸ்பத்திரில சேர்ந்து.. அதெல்லாம் உங்களுக்குத் தெரியும். இப்போ வேண்டாம்.. ஆஸ்பத்திரில இருந்து வந்தப்புறம் யோசிச்சுப் பார்த்தா அந்தக் கதைல நடிக்கவே முடியாத மாதிரியிருந்துச்சு. உடம்பு சரியாகி நல்லா வந்து நிறைய ஆக்சனோட நடிக்கணும்னா 2 வருஷமாவது ஆகும்ன்ற நிலைமை.

அப்போ முரளிமனோகர் வந்து கே.எஸ்.ரவிக்குமார் ராணா டைப்ல ஒரு லைன் வைச்சிருக்கார்.. கேளுங்கன்னார். அது எப்படிங்க.. இப்ப நான் நடிக்க வர்றதுக்கே டூ இயர்ஸ் ஆகுமேன்னேன்.. மொதல்ல கேளுங்க.. அப்புறமா அதை எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்னாரு. நானும் ரவிக்குமாரை கூப்பிட்டுக் கேட்டேன்.  நான் சொன்ன ராணாவைவிட அவர் சொன்ன கோச்சடையான் கதை ரொம்பவும் பிடிச்சது.

ஆனா இதை இப்போ எப்படி, இந்த நிலைமைல பண்றதுனு கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட கேட்டேன். நீங்க சரின்னு சொன்னா வேற ஒரு ஐடியா இருக்குன்னாரு. செளந்தர்யா ‘சுல்தான்’னு ஒரு அனிமேஷன் படத்தை பண்ணிக்கிட்டிருக்காங்க. அதை நான் பார்த்துட்டேன்.. அதை மோஷன் கேப்சர் அமினேஷன்ல செஞ்சிருக்காங்க. அதே மாதிரி இதையும் பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு டெக்னாலஜி பத்தியெல்லாம் தெரியாது. அதில எனக்கு நம்பிக்கை வேற இல்லை.

ஆனா தயாரிப்பாளர் என் மேல வைச்ச அன்புக்கு ஏதாவது செய்யணும்ன்னு நினைச்சேன். அதே மாதிரி ஏதாவது புதுசா.. யாருமே செய்ய முடியாததை இவ்ளோ பெரிய பட்ஜெட்ல பெருசா செய்யணும்னு நினைக்குற இந்த்த் தயாரிப்பாளருக்கு என்னால முடிஞ்ச உதவியா இதைச் செய்யலாம்ன்னு நினைச்சுத்தான் பேசுனோம்..

அப்புறம் இந்த படத்தை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பேரிடம் கருத்து கேட்டேன். இந்தப் படம் பண்றதுக்கு 5, 6 வருஷமாகும். 700 கோடி, 800 கோடியாகும்னு சொன்னாங்க. அவ்வளவு செலவெல்லாம் ஆகாது. நம்மோட பட்ஜெட்லயே பண்ண முடியும்னு இவங்க சொன்னாங்க. உடனே செளந்தர்யாகிட்ட பேசினேன். இந்த படத்துக்காக உனக்கு பெரிய பொறுப்பு இருக்கும். பண்ண முடியுமான்னு கேட்டேன். அவங்க உடனே நிச்சயமா நான் பண்ணி காட்றேன்னு சொன்னாங்க. இந்த படம் இந்தளவிற்கு வந்ததுக்கு முக்கியக் காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த ஊக்கமும், தயாரிப்பாளர் முரளிமனோகரின் தைரியமும்தான் காரணம்.

இந்தப் படம் எடுப்பதற்கு எவ்வளவு கஷ்டம் என்று வாயால் சொல்ல முடியாது. முழுப் படத்தையும் நான் பார்த்திட்டேன்.. இப்போ 3-டில மாத்திக்கிட்டிருக்காங்க.. நல்லா வந்திருக்கு. எல்லாருக்கும் இந்தப் படம் நிச்சயமா பிடிக்கும்னு எனக்கு நம்பிக்கையிருக்கு. நிச்சயமா இந்தப் படத்தோட வெற்றி விழாவை எல்லாரும் சொன்ன மாதிரி ஒரு பெரிய விழாவா நடத்துவோம்னு எனக்கு நம்பிக்கையிருக்கு..

செளந்தர்யா, ஐஸ்வர்யா இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்ப ரெண்டு பேரும் படம் இயக்குறாங்க.. அப்படின்னா அதுக்கு ஐஸ்வர்யாவோட இன் லா.. ஐஸ்வர்யாவோட இன் லா அவங்கதான் காரணம். ஏன்னா அவங்களும் இந்தப் பொண்ணுகளை தங்களோட குழந்தைகள் மாதிரி பார்த்து நீங்க நல்லா செய்யுங்கன்னு சொல்லி ஊக்குவிக்கிறாங்க. அதுக்கு அவங்களுக்குத்தான் பர்ஸ்ட் தேங்க்ஸ் சொல்லணும்..  இன்னும் ஐஸ்வர்யா, செளந்தர்யா நிறைய படங்கள் பண்ணனும்.

பெண்கள் முதலில் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக்க கொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுத்தால்தான் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து.  குழந்தைகளுக்கு 10, 12 வயசு வருகிறவரைக்கும் வீட்ல பெண்கள்தான் அவங்களை நல்லபடியா வளர்க்கணும். அதற்கு பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த படம் வந்த பிறகு நிறைய பேர் செளந்தர்யாவை படம் இயக்கச் சொல்லி கேட்பாங்க. ரெண்டு குழந்தைகளை பெத்துட்டு.. அதை என்கிட்ட கொடுத்துட்டு அதற்கு பிறகு நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்க.. அப்படிங்கிறது எனது கருத்து.

சவுந்தர்யாவை நான் குழந்தையாவே பார்த்துவிட்டேன். இந்தப் படத்துக்காக அந்தப் பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கு.  செளந்தர்யாவை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையாவும் இருக்கு. இப்போ இங்கே பேசும்போதுகூட அது செளந்தர்யாதானான்னு எனக்கே சந்தேகம் வந்திருச்சு. ரொம்ப டேலண்டட்டா இதுல வொர்க் பண்ணியிருக்காங்க. அவங்க முதல்ல ‘ஆக்‌ஷன்’ன்னு சொன்னப்போ எனக்கு சிரிப்பு வந்திருச்சு. அப்புறம் ‘ரவிக்குமார் சார் நீங்க வாங்க. இவரு ஆக்‌ஷன் எல்லாம் சொல்லட்டும்… நீங்க கட் மட்டும் சொல்லுங்க’ன்னு சொன்னேன்.

ரவிக்குமார் வெறும் ரைட்டரா மட்டும் இல்லாம இந்தப் படத்துல இயக்குநர் வேலையையும் சேர்த்தே செஞ்சிருக்காரு.. அவருக்கு என்னுடைய நன்றி.. இந்தப் படக் குழுவினரை மனதாரப் பாராட்டுறேன்.. இதுக்கு மேல இந்தப் படத்தோட வெற்றிவிழால உங்களையெல்லாம் சந்திக்கிறேன்.. தேங்க்யூ வெரி மச்..”

“Definetly” என்ற வார்த்தையை அதிக முறை யார் பயன்படுத்துவது என்று போட்டி வைத்தால் அதில் சூப்பர்ஸ்டார்தான் கின்னஸ் ரிக்கார்டு அடிப்பார் போலிருக்கிறது..! இதில் அத்தனை முறையை உச்சரித்திருக்கிறார்…!!!

Our Score