MISHRI ENTERPRISES சார்பில் மறைந்த எஸ்.செயின்ராஜ் ஜெயின் அவர்களின் நல்லாசியுடன், ரஜினி கிஷன் தயாரித்து, நாயகனாக நடித்துள்ள “ரஜினி கேங்” திரைப்படம், இயக்குநர் எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் கலகலப்பான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ளது.
மறைந்த எஸ்.செயின்ராஜ் ஜெயின் அவர்கள் நிறுவிய MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட பைனான்ஸ், விநியோகம் மற்றும் தயாரிப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
‘ஜெய் ஹிந்த்’, ‘அஷ்டகர்மா’ போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இந்த ‘ரஜினி கேங்’ திரைப்படம் அவர்களது நிறுவனத்தின் மூன்றாவது பிரம்மாண்டமான தயாரிப்பு ஆகும்.
இந்தப் படத்தில் ரஜினி கிஷன், திவிகா, மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி ராஜா, ராம் தாஸ் உள்ளிட்டோர். ‘ப்ளூ’ என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
இசை: ‘பொறியாளன்’, ‘போங்கு’, ‘சட்டம் என் கையில்’ போன்ற படங்களில் இசையமைத்த எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் நான்கு அற்புதமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
தயாரிப்பு – C.எஸ். பதம்சந்த், C.அரியந்த் ராஜ் & ரஜினி கிஷன், இயக்கம் – எம். ரமேஷ் பாரதி, இசை – எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு – என்.எஸ்.சதீஷ்குமார், எடிட்டிங் – ஆர்.கே.வினோத் கண்ணா, பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் (AIM).
இந்த வாரத்திய பேய் பட லிஸ்டில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது. பொதுவாக பேய் என்பது ஆவி உருவத்தில் மனிதர்களின் உடலுக்குள் நுழைந்து பேயாட்டம் ஆடுவோம்.ஆனால் இந்தப் படத்தின் பேய் வித்தியாசமாக ஒரு தாலி கொடியில் மறைந்திருக்கிறதாம்.
அந்தத் தாலியை எந்த பெண்ணாவது அணிந்துவிட்டால் அந்தப் பெண் ஆவியாக மாறி பலி வாங்குமாம். இப்படி ஒரு கதையை தானே சிந்தித்து. தானே திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி.
ரஜினி கிஷனும், த்விவிகாவும் காதலர்கள். ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பிளானில் இருக்கிறார்கள். அன்றைக்கு ரஜினி கிஷன் ஓடிப் போவதை தடுக்கும் வகையில் பல்வேறு இடர்பாடுகள் அவருக்கு ஏற்படுகின்றன. ஆனால் அதையும் தாண்டி தன்னுடைய காதலியை அழைத்துக் கொண்டு ஓடும்போது வழியில் முனீஸ்காந்த் திருடி வந்த ஒரு காரில் அவர்களை சந்திக்கிறார்.
அவர்களுக்கு காரில் லிப்ட் கொடுத்து அழைத்துச் செல்கிறார் முனீஸ்காந்த். வழியில் அந்த ஊரில் அப்பொழுதுதான் திருடிவிட்டு தப்பித்து வந்த கல்கியும் அதே காரில் ஏறிக் கொள்ள இந்தப் பயணம் தொடர்ந்து செல்கிறது. கடைசியாக இவர்கள் ஏற்காடு வந்து இறங்குகிறார்கள்.
ஏற்காட்டில் ரஜினி கிஷன் தன் காதலிக்கு கழுத்தில் தாலியை கட்டி திருமணம் செய்து கொள்கிறார். அப்போது ஆரம்பிக்கிறது அனர்த்தம். தாலியில் ஒளிந்திருக்கும் பேய் நாயகியை பாடாய்படுத்த இந்த பேயிடமிருந்து இந்தக் கூட்டணி எப்படி தப்பிக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ரஜினி கிஷன் நாயகனுக்குரிய முகவெட்டு இருந்தாலும் அவருடைய நடிப்பில் வெரைட்டியாக எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும், அப்பாவியான தோற்றத்தில் காமெடியை வரவழைக்கும்விதமாக அவரது பேச்சும், நடிப்பும் அமைந்திருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகளில் இதுவா ரொமான்ஸ் என்று நாம் கேட்பது போல நடித்திருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகளில் தேறியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. இதுதான் அவரது முதல் படம் என்பதால் அவரை வாழ்த்தி வரவேற்போம்.
படத்தில் நாயகனக்கும் சேர்த்து நாயகி த்விவிகா சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும் அவரைப் பேய் பிடித்த பின்பு அவர் ஆடுகின்ற ஆட்டமும், காட்டுகின்ற காட்டும் நடிப்பும் அபாரம் என்று சொல்லலாம். உண்மையில் இந்தப் படத்தைக் காப்பாற்றி இருப்பது நாயகி த்விவிகாதான் என்பதில் சந்தேகம் இல்லை.
முனீஸ்காந்த் எப்போதும்போல தனக்கு எது வருமோ அதை மட்டுமே செய்து இருக்கிறார். அவர் காமெடி என்ற பெயரில் வசனங்களை பேசிக் கொண்டே போனாலும், நமக்கு சிரிப்பே என்பதுதான் உண்மை.
நாயகியின் தாய் மாமனாக நடித்திருக்கும் கூல் சுரேஷ் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக பேச நம்மை வறுத்து எடுக்கிறார். சுத்தமாக காமெடியே வரவில்லை. இதில் கூடுதலாக மொட்டை ராஜேந்திரனும், கல்கியும் காமெடியை கொண்டு வர முயன்றிருக்கிறார்கள். ஆனால் அதிலும் தோல்விதான்.
ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் தன்னால் முடிந்த அளவுக்கான ஒளிப்பதிவினை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார். இரவு நேர காட்சிகள் பரவாயில்லை. ஏற்காட்டில் நடக்கும் காட்சிகளில் இன்னமும் கொஞ்சம் அழகாக அந்த ஊரை காட்டி இருக்கலாம்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் அதேபோல காமெடியாகவே படம் முழுவதும் தாளித்திருக்கிறார்.
இடைவேளைக்கு முன்பு சவ சவ என்ற நகரும் சுவாரசியமே இல்லாத திரைக்கதையை இன்னும் கொஞ்சம் நறுக்கித் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், படத் தொகுப்பாளர் வினோத் கண்ணா நீங்கள் இதை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்று சொல்வதுபோல தன்னால் முடிந்த அளவுக்கு கத்தரி போட்டு கொடுத்திருக்கிறார்.
பேயின் அட்டகாசம் என்று ஒற்றை வரி கதைக் கருவை வைத்துக்கொண்டு இந்த காமெடி படமாக எடுத்திருக்கிறோம் என்று இயக்குநர் சொன்னாலும், காமெடி எங்கிருந்து வந்தது என்று நாம்தான் தேட வேண்டி இருக்கிறது. காமெடியை தவிர்த்து ஆக்சன், சென்ட்டிமெண்ட் காட்சிகளில் படத்தின் நாயகி இந்தப் படத்தை காப்பாற்றி இருப்பதால் இயக்குநர் எம்.எஸ்.ரமேஷ் பாரதி நம்மிடமிருந்து தப்பித்துவிட்டார்.
ஒரு காமெடி என்கின்ற வஸ்துவை வைத்து ராஜாங்கம் நடத்தும் அளவுக்கான காமெடி ரைட்டர் தமிழ் சினிமாவில் இல்லை என்பதுதான் உண்மை. அதே காமெடியை வெளிப்படையாக நடிப்பினால் காட்டக் கூடிய நடிகர்களும் இங்கு இப்போது இல்லை என்பதும் உண்மைதான்.
ஆக., இப்படி வறட்சி பிரதேசத்தில் வாழும் தமிழ் சினிமா உலகம் காமெடியே கையாளும் வித்தகர்களை கொஞ்சம் அடையாளம் காட்டினால் தமிழ் திரை ரசிகர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.
RATING : 2.5 / 5









