full screen background image

“என்னிடம் பணம் பறிக்க முயல்கிறார் பைனான்ஸியர் போத்ரா” – சூப்பர் ஸ்டார் ரஜினி பதில் மனு தாக்கல்..!

“என்னிடம் பணம் பறிக்க முயல்கிறார் பைனான்ஸியர் போத்ரா” – சூப்பர் ஸ்டார் ரஜினி பதில் மனு தாக்கல்..!

திரைப்பட பைனான்ஸியர் எஸ்.முகுல்சந்த் போத்ராவின் வழக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பல திரையுலக புள்ளிகளை கோர்ட்டு இழுத்து சாதனை படைத்துள்ள பைனான்ஸியரான முகுல்சந்த் போத்ரா கடைசியாக இயக்குநர் கஸ்தூரி ராஜாவை கோர்ட்டுக்கு இழுத்திருந்தார். தன்னிடம் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்று சொல்லி ஜார்ஜ் டவுன் மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் கஸ்தூரி ராஜா மீது வழக்கு தொடுத்திருந்தார் போத்ரா. ஆனால் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதன் பின்பு மீண்டும் சென்ற மாதம் முகுன்சந்த் போத்ரா விடாப்பிடியாக உயர்நீதிமன்றத்தில்  மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “சினிமா இயக்குனர் கஸ்தூரி ராஜா, என்னிடம் கடந்த 2012-ம் ஆண்டு பல லட்சம் ரூபாயை கடனாக வாங்கினார். அப்போது, ‘என் மகன் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்துள்ளார். எனவே, நான் பணம் தரவில்லையென்றாலும், என் சம்பந்தி கொடுத்து விடுவார்’ என்று எழுதிக் கொடுத்துதான் பணத்தை வாங்கினார். 

பின்னர், கடன் தொகையை காசோலையாக திருப்பிக் கொடுத்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது கஸ்தூரிராஜாவின் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து அவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தேன். 

பின்னர், ரஜினிகாந்த் வீட்டை தொடர்பு கொண்டு விவரம் சொன்னபோது, ‘பல பேர் ரஜினிகாந்த் பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர்’ என்று பதில் வந்தது. இதனால், 2012-ம் ஆண்டு ரஜினிகாந்தின் பெயரை சொல்லி பணம் வாங்கி மோசடி செய்து விட்டார் என்று கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக போலீசில் புகார் செய்தேன். 

என் புகாரை விசாரித்த போலீசார், இது ‘சிவில்’ பிரச்சினை என்று கூறி புகாரை முடித்து வைத்துவிட்டனர். இதற்கிடையில், ‘மேன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்தி படத்துக்கு தடை கேட்டு இந்த ஐகோர்ட்டில் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தபோது, அந்த வழக்கில் நானும் மனு தாக்கல் செய்தேன். 

அப்போது, ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தன் பெயரை பயன்படுத்த யாருக்கும் அனுமதி வழங்கவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த பதிலை முன்பே அவர் தெரிவித்து இருந்தால், கஸ்தூரி ராஜா மீது நான் கொடுத்த புகாரை ‘சிவில்’ பிரச்சினை என்ற போலீசார் கூறியிருக்க மாட்டார்கள். 

மேலும், இதுவரை கஸ்தூரி ராஜா மீது ரஜினிகாந்த் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். இதனால், ரஜினிகாந்தும், கஸ்தூரி ராஜாவும் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்திய தன் சம்பந்தி கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும்..” என்று வித்தியாசமான ஒரு கோரிக்கையை எழுப்பியிருந்தார். 

இந்த மனு நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ரஜினி தனது மனுவில், “முகுல்சந்த் போத்ரா தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த வழக்கை கெட்ட எண்ணத்துடன் எனக்கு எதிராக போத்ரா தாக்கல் செய்துள்ளார். என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், என்னிடம் பணம் பறிக்கவும் அவர் முயற்சிக்கிறார். அவருடன், எனக்கு எந்த வகையிலும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

கடன் வாங்க நான் உத்தரவாதம் எதுவும், யாருக்கும் அளிக்கவில்லை. கஸ்தூரி ராஜா மீது நான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இப்படிப்பட்ட கோரிக்கையுடன் வழக்கை தாக்கல் செய்ய முடியாது.

இது போன்ற வழக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மனுதாரருக்கு அபராதமும் விதிக்க வேண்டும். கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக மனுதாரர் தொடர்ந்த செக் மோசடி வழக்கை ஏற்கனவே ஜார்ஜ் டவுன் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. 

வேண்டுமென்றே எனக்கு எதிராக இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார். இதனால், என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்…” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

இந்த மனுவுக்கும் உடனடியாக போத்ரா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

உஷ்ஷ்ஷ்ப்பாபா.. எத்தனை வழக்குகளைத்தான் தாங்குவார் சூப்பர் ஸ்டார்..!? 

Our Score