full screen background image

“தமிழகத்தைப் பார்த்து மற்ற மாநில மக்கள் சிரிக்கிறாங்க..” – ரஜினியின் அரசியல் பிரவேசம் துவக்கம்..!

“தமிழகத்தைப் பார்த்து மற்ற மாநில மக்கள் சிரிக்கிறாங்க..” – ரஜினியின் அரசியல் பிரவேசம் துவக்கம்..!

தென்னக சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் கடைசியாக தனது அரசியல் பிரவேசத்தை இன்று காலை அறிவித்துள்ளார்.

கடந்த ஐந்து நாட்களாக ரஜினி அவரது ரசிகர்களை சென்னையில் உள்ள அவரது  ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்து பேசி வந்த ரஜினி 31-ம் தேதி எனது முடிவினை அறிவிப்பதாக ஏற்கெனவே சொல்லியிருந்தார்.

சொன்னதுபோலவே இன்று காலை ரசிகர்களைச் சந்தித்து அவர்கள் முன்னிலையில் ரஜினி அவருடைய அரசியல் களம் புகும் முடிவை திட்டவட்டமாக அறிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் ரஜினி பேசும்போது, “என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களே.. தமிழக மக்களே.. எல்லோருக்கும் அன்பான வணக்கம்.

ரசிகர்களை நான் எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. கடந்த ஆறு நாட்களாக எந்த ஒரு தொந்திரவும் இல்லாமல் கட்டுப்பாடாக, ஒழுக்கமாக என்னுடன் புகைப்படம் எடுத்துச் சென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தக் கட்டுப்பாடு, ஒழுக்கம் இருந்தால் போதும். நாம் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம். புகைப்படம் எடுக்காதவர்களுக்கு சரியான நேரத்தில் நான் ஏற்பாடு செய்வேன். 

ரொம்ப பில்டப் ஏற்பட்டுவிட்டது. ஆனால் நான் பில்டப் கொடுக்கவில்லை. அது தானாகவே உருவாகிவிட்டது.  

எனக்கு அரசியலுக்கு வருவது பற்றி பயமில்லை. இந்த மீடியாக்களை பார்த்துதான் பயப்படுகிறேன். பெரிய, பெரிய ஜாம்பவான்களெல்லாம் மீடியாவைப் பார்த்து திணறுகிறார்கள். பயப்படுகிறார்கள். நான் இன்னும் குழந்தை. எனக்கு எப்படி இருக்கும். காரில் போகும்போது, வீட்டில் இருந்து வரும்போதெல்லாம் டக் டக்கென்று மைக்கை நீட்டி ஏதாவது கேட்டு விடுகிறார்கள். நானும் ஏதாவது சொல்ல உடனே அது விவாதமாகிவிடுகிறது.

முந்தாநாள் ஒருவர் டக்கென்று மைக்கை நீட்டி ‘ஸார் உங்கள் கொள்கைள் என்ன..?’ என்று கேட்டார். ‘என்னது கொள்கைகளா..?’ என்று நினைத்து எனக்கு இரண்டு நிமிடங்கள் தலையே சுற்றிவிட்டது. சோ ஸார் என்னிடம், ‘இந்த மீடியாகிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க’ என்று முதலிலேயே பயமுறுத்தி வைத்திருக்கிறார். இந்த நேரத்தில் அவர் இல்லாதது வருத்தம். இப்போது அவர் என் பக்கத்தில் இருந்திருந்தால் என்ககு பத்து யானை பலமாக இருந்திருக்கும். அவரது ஆத்மா எப்போதும் என்கூடவே இருக்கும்.

விஷயத்துக்கு வருகிறேன். ‘உன் கடமையைச் செய். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பது கண்ணன் ‘குருஷேத்திர யுத்த’த்தில் சொன்னது. ‘யுத்தம் செய்.. ஜெயித்தால் நாட்டை ஆள்வாய். செத்தால் வீர சொர்க்கம் அடைவாய். யுத்தம் செய்ய மாட்டேன் என்று போய்விட்டால் உன்னை கோழை’ என்று சொல்வார்கள் என்று கண்ணன் கூறியிருக்கிறார். நான் எல்லாவற்றையும் முடித்துவிட்டேன். இன்னும் அம்பு விடுவதுதான் பாக்கி. 

நான் அரசிலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தனிக் கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்போம்.

அதுற்கு முன்னால் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. நாட்கள் குறைவாக இருப்பதால் அதில் போட்டியிடப் போவதி்லலை. பாராளுமன்றத் தேர்தல் வரும்போது அந்த நேரத்தில் நான் முடிவெடுப்பேன்.

நான் பெயருக்காகவோ, பணத்துக்காகவோ, பகழுக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. அதைக் கனவில்கூட நினைக்காத அளவுக்கு ஆயிரம் மடங்கு எனக்குக் கொடுத்துவிட்டீர்கள்.

பதவி ஆசை எனக்கில்லை. 1996-லேயே அந்த நாற்காலி என்னைத் தேடி வந்தது. அதை வேண்டாம் என்று தள்ளி வைத்தேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. இந்த 68 வயதில் அந்த பதவி ஆசை வருமா..? அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன் இல்லையா.. ?நான் ஆன்மீகவாதி என்று சொல்லத் தகுதியானவன் ஆவேனா..?

இல்லை.. பதவிக்காக நான் இல்லை. அப்படியென்றால் வேறு என்ன.. இப்போது  அரசியல் ரொம்ப கெட்டுவிட்டது. நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப் போய்விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டிருக்கிறது. கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் ஒவ்வொரு தமிழ் மக்களையும் தலைகுனிய வைத்துவிட்டது. எல்லா மாநிலத்து மக்களும் நம்மை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இந்த முடிவை எடுக்கவில்லையென்று சொன்னால் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்கு ஜனநாயக ரீதியாக நான் ஒரு முயற்சிகூட  எடுக்கவில்லை என்ற குற்றவுணர்வு சாகிறவரைக்கும் என்னைத் துரத்தும். மாற்றணும்.. எல்லாவற்றையும் மாற்றணும்.

அரசியல் மாற்றத்துக்கான நேரம் இப்போது வந்துவிட்டது. சிஸ்டத்தையே மாற்றணும். உண்மையா, நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, சாதி, மத சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியலைக் கொண்டு வர வேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம். அதுதான் என்னுடைய விருப்பம். அதுதான் என்னுடைய குறி. அது ஒரு தனி மனிதனால் முடியாது. அதற்கு தமிழக மக்கள் எல்லோரும் என்கூட இருக்க வேண்டும்.

ஒரு கட்சிக்கு தொண்டன்தான் முக்கியம். ஆணிவேர், மரம், கிளை எல்லாமே தொண்டன்தான். தொண்டனில் இருந்துதான் ஒரு கவுன்சிலர், எம்.எல்.ஏ., அமைச்சர், முதலமைச்சர் உருவாகிறார்கள். எனக்கு தொண்டர்கள் வேண்டாம். காவலர்கள் வேண்டாம். ஆட்சியமைத்தால் மக்களுக்கு நியாயமாகப் போய்ச் சேர வேண்டிய சவுகரியங்கள், உரிமைகள், தேவைகள் போன்றவைகள் சென்று சேரவிடாமல் செய்யும் கும்பல்களை தடுக்க எனக்கு காவலர்கள் வேண்டும்.

பொதுநலமில்லாமல் சுயநலத்துக்காக எந்தவொரு அரசு அதிகாரியிடமோ, எம்.எல்.ஏ.விடமோ, எம்.பி.யிடமோ, மந்திரியிடமோ போய் நிற்காத காவலர்கள் எனக்கு வேண்டும். நமது ஆட்சியில் யார் தவறு செய்தாலும், அது அரசு அதிகாரியாகட்டும்.. ஊழியராகட்டும்.. கட்சி ஆளாகட்டும்.. யார் தவறு செய்தாலும் அவர்களைத் தட்டிக் கேட்கும் காவலர்கள் வேண்டும்.

இந்தக் காவலர்களை கண்காணிக்கும் ஒரு பிரதிநிதிதான் நான். தகுந்த வேலைக்கு, தகுந்த பதவிக்கு, தகுந்த ஆளை நியமித்து அவன் சரியாக வேலை செய்கிறானா என்று கண்காணிக்கிற பிரஜையோட பிரதிநிதிதான் நான். இதற்குக் காவலர் படை முக்கியமாக நமக்கு வேண்டும். அதை நாம் உருவாக்க வேண்டும். 

கிராமத்தில் இருந்து நகரம்வரைக்கும் பதிவு செய்த மன்றங்கள் எனக்கு பல ஆயிரம் இருக்கிறது. பதிவு செய்யாத மன்றங்கள் அதைவிட ஒன்றரை மடங்கும் அதிகம் இருக்கிறது. பதிவு செய்யாத மன்றங்களை பதிவு செய்ய வைத்து, ஏற்கெனவே பதிவு செய்தவற்றை புதுப்பித்து எல்லாரையும் ஒருங்கிணைக்க வேண்டும். அதுதான் நமக்கு முக்கியமான வேலை.

இது சினிமா இல்லை. அரசியல். நாம் காவலர்களாக மாறப் போகிறோம். நாம் மட்டும் போதாது. நீங்களெல்லாம் உங்களைச் சுற்றியிருக்கிற மக்கள், தாய்மார்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள் எல்லோரையும் நமது மன்றத்துக்குள் கொண்டு வர வேண்டும். கிராமத்தில் இருந்து நகரம்வரைக்கும் ஒவ்வொரு தெருவிலும் நமது மன்றங்கள் இருக்க வேண்டும்.

இது நான் கொடுக்கிற முதல் பணி. ஒரே குடைக்குள் நாம் அனைவரும் வர வேண்டும். கட்டுப்பாடும், ஒழுக்கமும் வேண்டும். அதன் பிறகு நாம் ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்திப்பதற்கு முழுமையாகத் தயாராக வேண்டும்.

அதுவரையிலும் நான் உள்பட யாரும் அரசியல் பேச வேண்டாம். ஏற்கெனவே அரசியல் என்ற குளத்தில் பலர் உள்ளனர். அவர்கள் நீந்தித்தான் ஆக வேண்டும். நீந்தாவிட்டால் மூழ்கிவிடுவார்கள். நாம் இன்னும் குளத்தில் இறங்கவில்லை. நமக்கு நீந்த தெரியும். தரையில் நீந்த வேண்டாம். குளத்தில் இறங்கிய பிறகு நீந்தலாம்.

பழைய காலங்களில் ராஜாக்கள் அடுத்த நாட்டின் மீது யுத்தம் செய்து ஜெயித்தால் அந்த நாட்டின் அரண்மனையோட கஜானாவை கொள்ளையடிப்பார்கள். அந்த அரண்மனையில் உள்ள பொருட்களையும் கொள்ளையடிப்பார்கள். அந்தப் படைகளின் தளபதிகளும், வீரர்களும் நாட்டு மக்களைக் கொள்ளையடிப்பார்கள். நாட்டையே கொள்ளையடிப்பார்கள். 

இப்போது ஜனநாயகம் என்கிற பெயரில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சியின் ஆட்கள் பலவிதத்தில், பல ரூபங்களில் மக்களை கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதை முதலில் மாற்றணும். இந்த சிஸ்டத்தை கட்சியிலேயே நாம் மாற்ற வேண்டும். 

எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து படையைத் தயார் செய்வோம். தயாராக இருப்போம். சட்டமன்றத் தேர்தல் என்றைக்கு வருகிறதோ, அதற்கு முன்பாக உரிய நேரத்தில் கட்சியை ஆரம்பித்து மக்கள் மத்தியில் நாம் என்ன செய்யப் போகிறோம்.. நமது செயல் திட்டங்கள் என்ன.. இது, இதை செய்யப் போகிறோம்.. இதைச் செய்ய முடியாது என்று உண்மையை எடுத்துச் சொல்வோம். இதைச் செய்யாவிட்டால் மூன்று வருடத்தில் ராஜினாமா செய்கிறோம் என்றும் மக்கள் மத்தியில் போவோம்.

எங்களுடைய மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு. எங்களுடைய கொள்கை நல்லதே நினைப்போம். நல்லதே பேசுவோம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். 

வருகின்ற சட்டமன்றத் தேர்தல் ஜனநாயகப் போரில் நமது படையும் இருக்கும். ஆண்டவன் இருக்கிறான். வாழ்க தமிழ் மக்கள்.. வளர்க தமிழ்நாடு.. ஜெய்ஹிந்த்..!” என்றார் ரஜினிகாந்த்.

Our Score