அப்போ ரஜினி, யாருக்கு சூப்பர் ஸ்டார்..?

அப்போ ரஜினி, யாருக்கு சூப்பர் ஸ்டார்..?

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அந்தியந்த சீடராக இருப்பவர் நடிகர் விவேக் என்பது உலகறிந்த செய்தி. அப்துல்கலாமின் தொடர்புக்கு பின்புதான் சமூக அக்கறையுள்ள மனிதராக தான் மாறியதால்தான் அவரை என் நெஞ்சத்தில் வைத்திருக்கிறேன் என்று சொல்லிய விவேக் இன்னும் ஒரு படி மேலே போய், அப்துல்கலாம்தான் மாணவர்களின் சூப்பர் ஸ்டார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

vivek-abdhulkalam-1

நேற்று ஈரோட்டில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசும்போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் பேசியபோது, “உலக வெப்பமயமாதல் அதிகமாகி வருகிறது. ஓசோனில் ஓட்டை விழுகிறது. இதற்கு காரணம் மரங்கள் இல்லாததுதான். ஒரு நாட்டில் 33 சதவீதம் வனப்பகுதி இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பருவமழை பெய்யும். மரங்கள் இல்லாததால் மேகத்தை தடுத்து மழை பொழியவைக்கும் மாற்றம் நிகழ்வதில்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாறி விட்டன.

பூமியில் இருந்த நச்சுக்காற்றை சுவாசக்காற்றாக மாற்றியவை மரங்கள். ஒரு குழந்தைக்கு 9 மாதங்கள் மட்டுமே ஒரு தாய் சுவாசக்காற்று அளிக்கிறாள். ஆனால், வாழும் காலம்வரை சுவாசக்காற்று அளிக்கும் தாயாக மரங்கள் உள்ளன. உலக வளர்ச்சியின் வேகத்தில் தொழிற்சாலைகளை மூடுவது. அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தாமல் இருப்பது என்ற எதிர்ப்புகள் செய்யாமல் மரங்கள் வளர்த்தாலே அவை எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும்.

3 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மாணவர்களின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் அப்துல்கலாமை பார்த்தபோது, என்னை உலக வெப்ப மயமாதல் குறித்து திரைப்படங்களில் கருத்து கூறவேண்டும் என்று கேட்டார். பின்னர் அவரே, ‘நீங்கள் ஏன் மரம் நடக்கூடாது…?’ என்று கேட்டார். அவருடைய தூண்டுதலின் பேரால் நான் தொடங்கிய இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 21½ லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.

vivektree-1

உங்கள் மூதாதையருக்கு நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் நினைவாக ஒரு மரக்கன்று நட்டு வளருங்கள். இளைஞர்களும், மாணவிகளும் தங்கள் வாழ்க்கையின் வழிகாட்டியாக விவேகானந்தரை எடுத்துக்கொள்ள வேண்டும். மதங்கள் கடந்து அனைவரையும் ஒருங்கிணைத்தவர் அவர். அவர்தான் இளைஞர்களின் ஒரே சூப்பர் ஸ்டார்…” என்றார்.

மாணவர்களின் சூப்பர் ஸ்டார் அப்துல்கலாம்.. இளைஞர்களின் சூப்பர் ஸ்டார் விவேகானந்தர். அப்போ ரஜினி யாருக்கு சூப்பர் ஸ்டார்..? திரையுலகத்தினருக்கா..? இட்ஸ் ஓகே..

இன்னும் ஒரு சந்தேகம்.. மாணவர்கள் வேறு. இளைஞர்கள் வேறா..? விவேக்கே சரணம்..!