தென்கொரியாவின் பூசன் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான ரசிகர்கள் விருதையும் இதற்காக 20 ஆயிரம் டாலர் பரிசையும் வென்றுள்ளது ‘ரேடியோ பெட்டி’ என்கிற தமிழ்த் திரைப்படம்.
இந்த ‘ரேடியோ பெட்டி’யை இயக்கியுள்ள இயக்குநர் ஹரி விஸ்வநாத் ஒரு புதுமுக இயக்குநர். இவரது தந்தை நவ்ரங் தியேட்டர் விஸ்வநாதன் ஒரு நாடக நடிகர். பள்ளி, கல்லூரி நாட்களில் தனது தந்தையின் நாடகங்களை தொடர்ந்து பார்த்து வந்த ஹரிக்கு இயல்பாகவே கலைத்துறையின் மீது மிகுந்த ஈடுபாடு. இதுவே அவரை சினிமா துறைக்குள் இழுத்து வந்துவிட்டது.
ஹரி இதுவரையில் எந்தவொரு இயக்குநரிடமும் இயக்குதல் தொழிலைக் கற்றுக் கொள்ளவில்லை. தானாகவே தனது கலைப்படைத்தை துவக்கியிருக்கிறார். முதலில் குறும்படங்களை இயக்கித்தான் தனது அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்.
முதன் முதலில் 2013-ம் ஆண்டு இடுக்கன் என்கிற குறும்படத்தை தயாரித்து இயக்கினார். இது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டது. இதன் பின்பு அதே 2013-ம் ஆண்டு பேசும் வைரஸ் என்கிற குறும்படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிறார்.
இதையடுத்து ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையில் உருவாக்கியிருப்பதுதான் இந்த ரேடியோ பெட்டி திரைப்படம். வெறும் 83 நிமிடங்களே ஓடும் இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு தென் கொரியாவின் பூசன் திரைப்பட விழாவில் ரசிகர்கள் விருதினைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தென்கொரிய படவிழா வரலாற்றில் விருது பெற்றிருக்கும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை இந்த ‘ரேடியோ பெட்டி’ திரைப்படம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் ரேடியோ பெட்டியும், லட்சுமணன் தாத்தாவும்தான் பிரதான கதாபாத்திரங்கள். 75 வயதான லட்சுமணன் என்ற நாடக நடிகர், அருணாச்சலம் என்ற தாத்தா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் டி.வி.வி.ராமானுஜம், ஷோபனா, நிவாஸ், ஆதித்தன், லிஸ்சி, பேபி மாயா, இந்துமதி, மாஸ்டர் ரோகன், மிட்டாய் முருகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
தன் வீட்டில் தாத்தாவுக்கும், ரேடியோ பெட்டிக்கும் இடையில் இருந்த நட்பை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.
சரவணா நடராஜன் ஒளிப்பதிவை அமைக்க, லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் போர்ட் என்பவர் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பாளர் – வெங்கட்ராம் மோகன், சிறப்பு சப்தம் – சேது, ஒலியமைப்பு – தபஸ் நாயக்(மும்பை), வசனம் – எஸ்.எல்.நசனு, ஒப்பனை – யு.கே.சசி, ஆடை அலங்காரம் – காசிம் பாய். கதை, திரைக்கதை, இயக்கம் – ஹரி விஸ்வநாத்.












