“ராதாரவியை தமிழ்ச் சினிமாவில் இருந்து வெளியேற்றுங்கள்…” – வலுக்கும் எதிர்ப்பு..!

“ராதாரவியை தமிழ்ச் சினிமாவில் இருந்து வெளியேற்றுங்கள்…” – வலுக்கும் எதிர்ப்பு..!

கோடம்பாக்கத்தின் இன்றைய ஸ்பெஷல் ராதாரவியின் அலப்பறையான பேச்சுதான். எப்போதுமே வாய்க்கு வந்ததையெல்லாம் ‘காமெடி’ என்கிற பெயரில் உளறிக் கொட்டுவார் ராதாரவி.

அதிலும் ஏற்ற, இறக்கத்துடனான வசனத்தை, அதற்குரிய பாடி லாங்குவேஜூடன் அவர் பேசும்போது. அது தவறான கருத்தாக இருந்தாலும் பார்வையாளர்களுக்கு சிரிப்பு வந்துவிடும்.

அப்படித்தான் இத்தனை நாட்களாக தனது பேச்சுக்களையெல்லாம் ‘கண்டு கொள்ளப்படாத காமெடிகள்’ என்று நினைத்துக் கொண்டிருந்தார் ராதாரவி.

சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் பெருகியிருக்கும் இந்த நேரத்தில் அவரது சமீபத்திய ஒரு திருகலான பேச்சு அவருக்கே திருகலைக் கொடுத்திருக்கிறது.

எடக்ட்ரா எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.மதியகழகனின் தயாரிப்பில், இயக்குநர் சக்ரி டோலட்டியின் இயக்கத்தில், நடிகை நயன்தாரா முதன்மை கதாநாயகியாக நடித்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மாலை ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

Kolaiyuthir-Kaalam-Movie-Poster-1

இந்த விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன், ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்கத்தின் துணை செயலாளர் துரைராஜ், இயக்குநர் பிரவீன் காந்த் உள்ளிட்ட சில திரையுலகினர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில்தான் படத்தின் நாயகியான நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, மீண்டும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார் ராதாரவி.

ராதாரவிக்கு முன்பாக பேசிய இயக்குநர் பிரவீன் காந்த் “நடிகை நயன்தாராவை ஒரு சாதனையாளர்” என்றும் “எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்களின் வரிசையில் தனித்த அடையாளமாக நயன்தாராவும் இருந்து வருகிறார்…” என்று பேசியிருந்தார்.

இதற்கடுத்து ராதாரவி பேசும்போது, ”எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களுடன் நயன்தாரவை ஒப்பிடுவது மனசுக்கு வருத்தமாக இருக்கு. சகோதரி நயன்தாரா நல்ல நடிகைதான். சினிமாவில் இத்தனையாண்டுகள் தம் கட்டி நிற்பதே பெரிய விஷயம். அவரைப் பற்றி வராத செய்தியே இல்லை. அதையும் தாண்டி நிற்கிறார். காரணம், தமிழக மக்கள் செய்திகளை நாலு நாட்கள்தான் மனசுல வைச்சிருப்பாங்க. அப்புறம் மறந்திருவாங்க.

radharavi-2

நயன்தாரா ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார். இன்னொருபுறம் சீதாவாகவும் நடிக்கிறார். பேயை இப்போது நேரில் கொண்டு வந்தால் அது நயன்தாரவை பார்த்தவுடனேயே பயந்து போய் ஓடிரும். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. இதையும் தலைப்பா போட்டிராதீங்க.

இப்போது சீதாவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். முன்பெல்லாம் சீதாவா நடிக்கணும்ன்னா கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவாங்க. இப்போது அப்படியா இருக்கு..? யார் வேண்ணாலும் நடிக்கலாம்.. பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களையும் போடலாம். பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களையும் போடலாம்…” என்று தன் பாணியில் பேசினார்.

இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்தவர்களே சற்று ஜெர்க் ஆனார்கள். ஆனாலும் யாரும் எதுவும் சொல்ல முடியவில்லை. மேடை நாகரிகம் கருதி அமைதியாகிவிட்டார்கள். ராதாரவிக்கு பின்பு பேச வந்த படத்தின் தயாரிப்பாளரான வி.மதியழகன்கூட இது குறித்து எதையும் பேசாமல் விட்டுவிட்டார்.

நேற்றைய தினம் காலையிலேயே இது பற்றிய வீடியோ இணையத்தில் வெளியான பின்பு முதல் ஆளாக ராதாரவியின் பரம எதிரியான பின்னணி பாடகி சின்மயி தனது டிவீட்டர் பக்கத்தில் இது பற்றி தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.

chinmayi-1

”தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் என் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒதுங்கியிருந்தனர். காரணம் அவர்கள் வேறு யூனியன் விஷயத்தில் தலையிட முடியாது என்பதால்..! ஆனால், இந்த முறை அந்த நபர் மிகவும் வெற்றிகரமாக தன்னை நிரூபித்த நடிகையையல்லவா மேடையில் சீண்டியுள்ளார்.

இப்போதாவது நடவடிக்கை எடுங்கள். முடிந்தால் எடுங்கள். அப்படி எடுத்தால் ரொம்ப நன்றி. நேற்றிலிருந்து நடிகர்கள் யாரேனும் வாய் திறந்து கண்டனத்தை தெரிவிப்பார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வீடியோவில் ராதாரவி அந்த நடிகையின் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அதே நடிகையை மிகவும் தரக் குறைவாகப் பேசுகிறார். ஒருவரும் ஒரு வார்த்தைகூட கண்டனம் தெரிவிக்கவில்லை.

அப்புறம் ‘கூப்பிடுறவுங்க.. கூப்பிடுவாங்க’ன்னு சொல்றாரே ராதாரவி, அந்த கூப்பிடுற ஆம்பளைங்க யாரு? அவங்களத்தானே அசிங்கப்படுத்தணும்?”.. என்று விளாசியிருந்தார்.

இதையடுத்து நயன்தாராவின் காதலரும், வருங்கால கணவருமான இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனது டிவீட்டர் பக்கத்தில் பொங்கித் தீர்த்திருந்தார்.

vignesh-radharavi-1 vignesh-radharavi-2

”ஒரு பாரம்பரியம்மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலிருந்து வந்து விழுந்துள்ள இந்த அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டனக் குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ என்று எனக்கு எந்த துப்புமில்லை. ஆதரவுமில்லை.

தன் மீதான கவனத்தை ஈர்ப்பதற்காக ராதாரவி இதைச் செய்துகொண்டிருக்கிறார். மூளையற்றவர். அந்த குப்பைக் கருத்தைக் கேட்டு குழுமியிருந்தவர்கள் சிரித்ததும், கை தட்டியதும் எனக்குக் கவலையளித்தது.

இப்படி ஒரு நிகழ்ச்சி முடிவுறாத ஒரு படத்துக்காக நடக்கிறது என்று எங்கள் யாருக்கும் தெரியாது. இந்தப் படத்தை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன்.

சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி. தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசியிருக்கிறார்கள். இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும்விதம் என்றால் இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம்.

ஏனெனில் இத்தகைய நிகழ்ச்சிகள் வேலையற்ற நபர்களுக்கு தங்கள் அறிவற்ற கருத்துகளைச் சொல்ல இடமளிக்கிறது. என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ, அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. பரிதாப நிலைதான்…” என்று கொதித்துப் போய் எழுதியிருந்தார் விக்னேஷ் சிவன்.

இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து தனது வருத்தத்தை வெளியிட்டு ‘கொலையுதிர் காலம்’ படத்தின் தயாரிப்பாளரான வி.மதியழகன் ஒரு ஆடியோவை வெளியிட்டார்.

mathiyalagan-1

அந்த ஆடியோவில், ”மேடையில் அனைவருமே இருந்தார்கள். ராதாரவி சார் சீனியர் நடிகர். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்த இடத்தில் அவர் அப்படி பேசியிருக்கக் கூடாதுதான். எனக்கே அதில் உடன்பாடில்லை. பெரிய பிரச்சினையாகி விட்டதால், ராதாரவி சாரிடம் பேச முயற்சி செய்து வருகிறேன்…” என்றார் மதியழகன்.

இதற்கிடையில் நடிகை வரலட்சுமியும் கோதாவில் குதித்து ராதாரவியை பெயர் குறிப்பிடாமல் தனது டிவீட்டர் பக்கத்தில் கண்டித்து எழுதியிருந்தார்.

radharavi-nayanthara-crisis-varu-tweets

நடிகை வரலட்சுமி தனது டிவீட் செய்தியில், ”பெண்களை அசிங்கப்படுத்துவது, பெண்களைப் பற்றி ஆபாசமான நகைச்சுவை பேசுவது (பேசுபவர்களுக்கு ஆபாசம் என்று தெரியாது), பெண்களை இழிவுபடுத்துவது, பெண்களை காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவது எல்லாம் இந்த திரைத்துறையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

நமது போன தலைமுறை ஆண்கள், பெண்களுக்கு நன்றி. ஏனென்றால் அவர்கள் அதெல்லாம் சரி என்று நினைத்து எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டார்கள். இதுதான் நம் நிலைமை.

radharavi-nayanthara-crisis-varu-tweets-1

நமக்கு என நடக்கும்போதுதான் நாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பது உங்களுக்கு உரைக்கும். ‘Me Too’ குறித்த சர்ச்சை வரும்போது, துறையில் இருக்கும் பெண்கள் என்னைப் போல, சின்மயியைப் போல எண்ணற்ற பெண்களுக்கு ஆதரவாக நின்றிருந்தால் விஷயங்கள் ஒருவேளை மாறியிருக்கலாம். அமைதி நமக்கு எந்தத் தீர்வையும் தராது. நேரம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு பெண்ணும் துணிந்து நிற்க வேண்டும்.

திரைப்பட சங்கங்கள் என்று சொல்லிக் கொள்பவை எல்லாமே சில ஆணாதிக்கவாதிகளால் நடத்தப்படுபவை. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். பெண்களை ஆதரிப்பது போல நடிப்பார்கள். ஆனால் நிஜத்தில் இவர்கள் ஏதோ ஒரு வகையில், திரையிலோ, வாழ்க்கையிலோ பெண்கள் இழிவுபடுத்தப்படும் சூழ்நிலைக்கு பங்காற்றியிருப்பார்கள்.

சிலருக்கு இந்த மாதிரியான இழி பேச்சுகள் நகைச்சுவையாக இருந்தால், பல வருட கொடுமைக்குப் பிறகும் அமைதியாக இருந்து, அப்படியான உலகத்தைத்தான் நாம் உருவாக்கியுள்ளோம். நம்மை நாமே மதிக்க ஆரம்பிக்கவில்லை என்றால் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. துணிந்து பேசுங்கள். உங்களுக்கு நடக்கும்வரை காத்திருந்து பின் கண்ணீர் விடாதீர்கள்.

‘கவர்ச்சியான உடைகள் அணிவதன் மூலம் எங்களை நாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறோம்’ என்று நினைக்கும் எல்லா முட்டாள்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். ஒரு பெண்ணின் குணத்தை அவளது உடையை வைத்து நீங்கள் முடிவு செய்யக் கூடாது. முதிர்ச்சியாக யோசியுங்கள். ஒரு பெண் என்ன அணிந்தாலும், என்ன செய்தாலும் அவளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு ஆண் என்ன செய்தாலும், அது எவ்வளவு மோசமான, தவறான, நெறிமுறையற்ற செயலாக இருந்தாலும், அந்த ஆணுக்கு எத்தனை துணைகள் இருந்தாலும் அதை வைத்து நீங்கள் அவரது குணத்தை மதிப்பிட மாட்டீர்கள் என்றால் பெண்களைப் பற்றி மதிப்பிடவும் யாருக்கும் உரிமை இல்லை.

உங்கள் சகோதரி என்ன உடை அணிந்திருந்தாலும் உங்களுக்கு அவரை பலாத்காரம் செய்யத் தோணாது இல்லையா. அதே போல மற்ற பெண்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்..” என்று குமுறித் தள்ளியிருக்கிறார்.

இதையடுத்து நடிகர் ராதாரவியின் தங்கையும், திரையுலகத்தின் மூத்த நடிகைகளில் ஒருவருமான நடிகை ராதிகா தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டார்.

radharavi-nayanthara-crisis-radhika-tweets

அந்தச் செய்தியில், ”இன்று நம் துறையில் இருக்கும் அர்ப்பணிப்பான ஒரு சில நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அவரை எனக்குத் தெரியும். அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். ராதாரவி பேசிய வீடியோவை நான் முழுதாகப் பார்க்கவில்லை. ஆனால் ராதாரவியை இன்று சந்தித்தேன். அவர் பேசியது முற்றிலும் தவறு என்று சொன்னேன்…” என்று ராதிகா தனது ட்வீட் செய்தியில் எழுதியிருந்தார்.

நேற்று காலை நடிகர் பார்த்திபனின் மூத்த மகளான அபிநயாவுக்கும், நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரனும், நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகனுக்கும் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ராதாரவியை சந்தித்த ராதிகா, அவரிடம் இது குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.

இதற்கடுத்து பந்தை உருட்டியது நடிகை நயன்தாராவின் மேனேஜரும், ‘அறம்’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருமான கோடப்பாடி ஜே.ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம்.

ராதாரவியின் பேச்சு குறித்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது கடுமையான கண்டனத்தை  ஒரு அறிக்கையின் வாயிலாக வெளியிட்டது.

அந்த அறிக்கையில், ”ஒரு ட்ரெய்லர் அறிமுக விழாவில் பங்கேற்ற மதிப்புக்குரிய நடிகர் ஒருவர், சக பெண் நடிகரை புண்படுத்தும் வகையில் வெறுப்பை உமிழும், அருவருப்பான வார்த்தைகளைப் பேசியுள்ளார்.

kjr studios

அந்த நிகழ்ச்சி, அவமதிப்புக்கு உள்ளான அந்த நடிகை ஹீரோயினாக நடித்த திரைப்படத்துக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி. ஆனால், அந்த நடிகர் பேசும்போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் கைதட்டி, சிரித்தார்கள்.  மூத்த நடிகர் என்ற மரியாதை எனும் போர்வையில் மரியாதையை குறைத்துக் கொண்டது பார்ப்பதற்கு வேதனையாக இருந்தது.

ராதாரவி மிகுந்த பாரம்பரியம், மதிப்பு மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். அன்புள்ள ராதாரவி சார், மரியாதை என்பது பெயரால் வருவது அல்ல. நாம் பேசும் வார்த்தைகள். செயல்களால் வருவது. கைதட்டலுக்காக ஏதாவது பேச வேண்டும். செய்ய வேண்டும் என நினைத்தால், அதற்கு ஏராளமான இடங்கள் இருக்கின்றன. உங்களுக்கு பழக்கப்பட்ட இடங்கள் இருக்கின்றன. அங்கு போய் பேசலாம், விருப்பப்பட்டதை செய்யலாம்.

தமிழ் சினிமாவில் இருந்து பெண்களுக்கு எதிராகப் பேசுபவரையும், கீழ்த்தரமாக நினைப்பவரையும் துரத்தி அடிக்க விரும்புகிறோம். இந்த நேரம்தான் அதைப் பேசுவதற்கும், நடவடிக்கையில் இறங்கவும் உகந்தது.

நடிகை நயன்தாரா குறித்தும், பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்தும் நடிகர் ராதாரவி பேசியது சரியானது அல்ல. ஒருபோதும் சரியானது அல்ல. அவருக்கு எதிராக நாம் குரல் கொடுப்பதற்கு இது சரியான நேரம்.

இது எதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா, அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். குரல் கொடுப்போம். சரியான மக்களுக்கு கேட்கும் வரை குரல் கொடுப்போம். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கேட்கட்டும். சரியான நடவடிக்கை மற்றும் நிலைப்பாடு எடுக்க நமது குரல் அழுத்தம் கொடுக்கட்டும்.

இந்த விஷயத்தை நடிகர் சங்கம் அறிந்திருப்பார்கள் என நம்புகிறோம். நாங்கள் நடிகர் ராதாரவியின் பேச்சை உண்மையாகவே வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்கள் திரைப்படங்களில் அவர் நடிக்க அனுமதிக்கமாட்டோம்.

நம்முடைய துறையில் இருக்கும் நண்பர்கள், சக தரப்பினருக்கும் அறிவுறுத்துவது என்னவென்றால், ராதாரவியை எந்த திரைப்படத்திலும் நடிக்க வைக்காதீர்கள். ராதாரவிக்கு எதிராக நீங்கள்  நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம். நம்முடைய பெண்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்காவிட்டால், வேறு யார் கொடுப்பது?” என்று கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்கள்.

இத்தனை களேபரம் ஆன பிறகுதான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ராதாரவிக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

vishal-radharavi-tweet-1

விஷால் வெளியிட்டுள்ள ட்வீட்டர் செய்தியில், ”அன்புள்ள ராதாரவி சார். ஆம், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் உங்களுக்கு எதிரான இந்த கண்டனக் கடிதத்தில் கையெழுத்திடுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அண்மையில் நீங்கள் வெளிப்படுத்திய முட்டாள்தனமான பேச்சு அதுவும் பெண்களை மையப்படுத்தி நீங்கள் பேசியதை கண்டிக்கிறேன். வளருங்கள் சார். இனிமேல் உங்களை நீங்கள் ‘ரவி’ என்று மட்டுமே அழைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ‘ராதா’ என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா..?” என்று இடித்துரைத்துள்ளார்.

இதற்கிடையில் இந்தப் பிரச்சினை நேற்றைக்கு வலுத்துக் கொண்டே போனதையடுத்து அரசியல் ரீதியாகவும் ராதாரவிக்கு பிரச்சினைகள் வலுத்தன.

இயக்குநர் விக்னேஷ் சிவன், ராதாரவி தி.மு.க.வில் இருப்பதால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரையும் ட்வீட்டரில் இணைத்துக் குறிப்பிட்டு ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலும் தி.மு.க. சார்பில் ராதாரவியும் பிரச்சாரம் செய்யவிருந்தார். இந்த நேரத்தில் இவர் மேடையேறி பேசினால் மேலும் பிரச்சினைதான் வரும் என்றெண்ணிய தி.மு.க. மேலிடம் ராதாரவியை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

radharavi-suspenson-dmk-action-1

“நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து அவர் தற்காலிகமாக தி.மு.க. விலிருந்து நீக்கி வைப்படுகிறார்…” என்று தி.மு.க.வின் பொதுச் செயலாளர் க.அன்பழகனின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிரச்சினை மேலும், மேலும் முற்றியதையடுத்து இது குறித்து தன்னிலைவிளக்கம் அளித்தார் ராதாரவி.

அப்போது அவர் பேசும்போது, “நான் எப்போதும் மனதில் பட்டதை பேசுபவன். எனக்கு நயன்தாராவுக்கும் சம்பந்தமே கிடையாது. நாங்கள் இருவருமே ஒரு ஜாதி. சினிமாக்கார ஜாதி. நான் பேசியதில் தவறில்லை. யாரையும் நான் புண்படுத்திப் பேசமாட்டேன். மனதில் விஷமத் தன்மையுடன் பேசியதில்லை.

radharavi-3

ஆனால், இந்த விஷயத்தில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று நான் பேசவில்லை. ஆனால், இதற்காக நயன்தாரா மிகவும் வருத்தப்பட்டார் என்று சொன்னார்கள். ஆகையால் நானும் வருத்தப்படுகிறேன்.

அவருக்கும் அவர் காதலருக்கும் என்னுடைய இந்தப் பேச்சு மன வருத்தத்தை தந்திருந்தால் –  நயன்தாராவிடமும், அவரை திருமணம் முடிக்க இருக்கிற விக்னேஷ் சிவனிடமும் நான் என் மன  வருத்தத்தை தெரிவிக்கிறேன்.

விருப்பப்பட்டால் என்னை அவர்கள் நேரில் சந்திக்கலாம். இல்லை.. நயன்தாராவை நான் நேரில் பார்க்கும்போது, என் வருத்தத்தை அவரிடம் பதிவு செய்வேன்.  உங்களைப் பற்றி பேசவில்லை என்பதை அவரிடம் எடுத்துரைத்து, நிரூபிப்பேன்.

தி.மு.க.வில் இருந்து என்னை இடைநீக்கம் செய்ததற்கு விளக்கம் கேட்டால் உரிய விளக்கம் தருகிறேன். அவர்கள் என்னை தகுதி நீக்கம் செய்வதைவிட நானே அக்கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன். என்னால் கட்சிக்கு அவப் பெயர் வேண்டாம்.  யார் மீதும் எனக்கு கோபமோ, வருத்தமோ இல்லை..” என்றார்.

இந்த விழாவிலேயே ராதாரவி பேசும்போது, “தமிழ்நாட்டு மக்கள் ஒரு விஷயத்தை பேசினால் அதை நான்கு நாட்களிலேயே மறந்துவிடுவார்கள். அப்புறம் ஒரு புதிய விஷயத்தைக் கையில் எடுத்து விடுவார்கள். அதுவும் ஒரு நாலு நாளைக்குத்தான்..” என்றார்.

அதுவும் இந்த விஷயத்தில் நடக்கப் போகிறது. இன்னும் ஒரு மாதம் கழித்து இன்னொரு விழாவில்.. இன்னொரு மேடையில் இதே ராதாரவி இதே பிரச்சினையை வேறு மாதிரி கிண்டல் செய்தும் பேசுவார். அப்போதும் கூட்டம் கை தட்டி ஆரவாரிக்கும்.. சிலிர்க்கும்.. ராதாரவியும் பெருமைப்படுவார்..!

அவ்ளோதான்.. போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்கப்பா..!

Our Score