full screen background image

ராங்கி – சினிமா விமர்சனம்

ராங்கி – சினிமா விமர்சனம்

லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். இவருடன் ஜான் மகேந்திரன், அனஸ்வரா ராஜன், லிஸி ஆண்டனி, கோபி கண்ணதாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கம் – எம்.சரவணன், கதை – ஏ.ஆர்.முருகதாஸ், இசை – சி.சத்யா, படத் தொகுப்பு – எம்.சுபாரக், ஒளிப்பதிவு – கே.ஏ.சக்திவேல், சண்டை இயக்கம் – ராஜசேகர், கலை இயக்கம் – மூர்த்தி, பாடல்கள் – கபிலன், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா டி ஒன்.

துணிச்சல் மிக்க பத்திரிகை நிருபரான திரிஷா தேர்ட் ஐ’ என்ற தனியார் ஆன்லைன் பத்திரிகையில் செய்தியாளராகப் பணியாற்றுகிறார். இவரது தைரியமான, வெளிப்படையான பேச்சுக்களால் இவரது சொந்த அண்ணனும், அண்ணியும் இவருடன் நெருங்காமலேயே உள்ளனர். ஆனாலும் த்ரிஷா மாடி வீட்டிலும், அண்ணன் குடும்பத்தினர் கீழ் வீட்டிலும் வசித்து வருகின்றனர்.

ஒரு நாள் திரிஷாவின் அண்ணன் மகளான அனஸ்வராவின் நிர்வாண வீடியோ அவளது அப்பாவின் வாட்ஸ்அப்புக்கு வருகிறது. தனது மகள்தானோ என்று நினைத்து பயந்து போகிறார் அண்ணன், இதையறியும் திரிஷா தன் அண்ணனை தைரியப்படுத்திவிட்டு வீடியோவை அனுப்பியவனை விசாரிக்கத் துவங்க கதையில் பல திருப்பங்கள் ஏற்படுகின்றன.

அனஸ்வராவுடன் படிக்கும் அவளது பள்ளி தோழிதான் அனஸ்வராவின் போட்டோவுடன் அவளது பெயரில் பேஸ்புக்கில் போலியான பக்கத்தை உருவாக்கி பல ஆண்களுடன் பேசி வருகிறாள் என்பதையும், தனது பேஸ்புக் நண்பன் ஒருவனது வேண்டுகோளுக்கு இணங்க முகம் தெரியாமல் தன் உடலழகை மட்டும் நிர்வாணமாக வீடியோ எடுத்து அந்த பெண் அவனுக்கு அனுப்பியிருப்பதும் திரிஷாவுக்குத் தெரிய வருகிறது.  

இதனை கண்டுபிடிக்கும் திரிஷா அந்தப் பக்கத்திற்கு சாட்டிங்கில் வந்து ஜொள்ளுவிட்ட அத்தனை ஆண்களையும் ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்து டின் கட்டி எச்சரித்து அனுப்புகிறார்.

இந்தப் பிரச்சினை முடியும் நேரத்தில் அதே பேஸ்புக் பக்கத்தில் டுனீசியா நாட்டில் போராடிவரும் ஒரு தீவிரவாதியான இளைஞன் ஒருவன் தொடர்ந்து சாட்டிங் செய்கிறான்.

இந்த சாட்டிங்கை திரிஷா தொடரும்போது அவரே எதிர்பார்க்காத ஒரு அரசியல் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். இந்தியாவின் மத்திய அமைச்சர் இத்தாலி செல்வதாகச் சொல்லிவிட்டு டுனீசியாவுக்குப் போய் ரகசியமாக சில தீவிரவாத குழுக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அந்தப் போராளி இளைஞன் பகிரும் ஒரு புகைப்புடத்தின் மூலம் அறியும் திரிஷா, தனது பத்திரிகையாளர் புத்தியினால் அதை அவசரப்பட்டு பகிரங்கப்படுத்துகிறார். இது அந்த அமைச்சரின் பரிதாபமான இறப்பில்போய் முடிகிறது.

தொடர்ந்து இந்தப் பிரச்சினை மென்மேலும் வளர்ந்து திரிஷாவுக்கு சென்னையில் தொல்லை கொடுத்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் கொலையில் போய் முடிய.. சர்வதேச தீவிரவாத பிரச்சினையிலும் சிக்கிக் கொள்கிறார் திரிஷா.

இப்படி மாட்டிக் கொண்ட திரிஷா அதிலிருந்து மீண்டு வந்தாரா? பேஸ்புக் கணக்கில் திரிஷாவதொடர்பு கொண்ட அந்த தீவிரவாதி யார்..? அவர்களின் சந்திப்பு நடந்ததா..? இல்லையா..? என்பதை சொல்லும் படம்தான் இந்த ‘ராங்கி’ படம்.

திரிஷா தையல் நாயகி’ என்ற தைரியமான ஒரு பெண் பத்திரிகையாளர் கதாப்பாத்திரத்தில் அழுத்தமாக நடித்துள்ளார். படம் நெடுகிலும் தனது ‘ராங்கி’த்தனமான குணத்துடனும், அலட்சியமான உடல் மொழி கொண்ட பெண்ணாகவும் நடித்துள்ளார். மேலும் ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடி நாயகியாகவும் நடித்து ஆக்சன் நாயகியாகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

சுஷ்மிதா என்ற பள்ளி மாணவி வேடத்தில் நடித்திருக்கும் அனஸ்வரா அந்த வயதுக்கே உரிய அப்பாவித்தனமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். ஆலிம் என்ற கதாபாத்திரத்தில் போராளியாக நடித்திருக்கும் அந்த உஸ்பெகிஸ்தான் இளைஞரின் காதல் பரவச நடிப்பு, உண்மையில் படம் பார்ப்பவர்களின் மனதைத் தொட்டுவிட்டது எனலாம்.

போர்க்களத்தில்கூட தான் பார்க்க விரும்பிய முகநூல் நண்பியிடமிருந்து வரும் அழைப்புக்காகக் காத்துக் கொண்டிருப்பதும், சுஷ்மிதா அங்கே அவனைப் பார்க்க வருவதாகச் சொன்னவுடன் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் அந்த உற்சாக நடனத்திலும், நடிப்பிலும், சுஷ்மிதாவை பார்த்த பின்பு அவர் காட்டியிருக்கும் உணர்ச்சிமயமான நடிப்பிலும் நம்மை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் .

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இயக்குநர் ஜான் மகேந்திரன் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய வரவு. தனது உடல் மொழியாலேயே போலீஸ் இன்ஸ்பெக்டர் என்ற திமிரைக் காட்டியிருக்கிறார்.

அண்ணனாக நடித்தவர் தனது மகளது வீடியோவை பார்த்துவிட்டு தாங்க முடியாமல் அழுகின்ற காட்சியில் நம்மை பரிதாபப்பட வைத்திருக்கிறார். அதேபோல் நாத்தனாருடன் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருக்கும் அண்ணி லிஸி ஆண்டனி, தனது மகளுடன் டுனீசியாவுக்குக் கிளம்பும் திரிஷாவிடம் பேசும் உணர்ச்சிகரமான பேச்சும், நடிப்பும் சூப்பர்ப்..!

படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது சி.சத்யாவின் பின்னணி இசை,  போர்க்களக் காட்சிகளை ஓடி, ஓடி பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சக்திவேல். அதேபோல் உஸ்பெகிஸ்தான் நாட்டின் அழகினை முழுவதுமாய் படம் பிடித்து நம்மை பிரமிக்கவும் வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். மிரட்டலான ஆக்க்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார் ராஜசேகர் மாஸ்டர்.

படம் ஒட்டு மொத்தமாய் பல்வேறு பிரச்சினைகளை ஒன்றாகக் கலந்து பேசும் சர்வ நோய் நிவாரணி மாத்திரையாய் இருந்தாலும் இதிலும் பலவித குழப்பங்கள் இருக்கத்தான் செய்கிறது.

பத்திரிகையாளராக இருந்து கொண்டே கிசுகிசு எழுதும் பத்திரிகையாளர்களையும், நாட்டு நடப்பு மீது அக்கறையில்லாமல் எழுதுபவர்களையும், அரசியல் கட்சிகளுக்கு வக்காலத்து வாங்கும் பத்திரிகையாளர்களையும் வசைபாடி தீர்த்திருக்கிறார் திரிஷா.

சென்னையில் விருகம்பாக்கம் நடேசன்  நகர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான குடியிருப்பு பற்றி இதுவரையிலும் எந்தவொரு பத்திரிகையாளரும் கேள்வியெழுப்பவில்லை என்ற திரிஷாவின் குற்றச்சாட்டு நிச்சயம் முக்கியமானதுதான்.

இதேபோல் காவல்துறையினர் மற்றும் அரசியல்வியாதிகளையும் விட்டுவைக்காமல் அவர்கள் மீதும் கடும் தாக்குதல் தொடுத்துள்ளார் திரிஷா. எல்லாம் சரி. இதையெல்லாம் பெயர் சொல்லி சொல்ல முடியவில்லை அல்லவா..? அதுதான் இங்கேயிருக்கும் உண்மை நிலைமை.

திரிஷாவிடம் பாலியல் ரீதியாகப் பேசும் இன்ஸ்பெக்டர் வீடியோவில் சிக்கியும் அவர் அதே வேலையில் தொடர்வது திரைக்கதையின் மிகப் பெரிய ஓட்டை. நிச்சயமாக இது நடக்க வாய்ப்பில்லை. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பார். ஆனால் கதைக்கு அவர் தேவையாய் இருப்பதால் இயக்குநர் அப்படியே வைத்துக் கொண்டார் போலும்..!

ஒரு பத்திரிகையாளர், பெண்ணாக இருந்து கொண்டும் தனது அண்ணன் மகள் அக்கவுண்ட்டை பயன்படுத்துவது லாஜிக்கே இல்லாதது. தொடர்ந்து அதே அக்கவுண்ட்டில் இவரே பேசுவதும் நம்ப முடியாதது. சாட்டிங்கில் வந்த ஆண்களை ஹோட்டல் அறைக்கு அழைத்து அடித்து உட்கார வைத்திருப்பதும் நமது காதில் பூச்சுற்றும் கதைதான். ஆனாலும் அந்த இடத்தில் திரிஷா அந்த ஆண்களிடம் சொல்லும் ஆலோசனைகள் ஒரு பத்திரிகையாளரின் முதிர்ச்சியை காட்டுகிறது.

உண்மையாகச் சொல்லப் போனால் டுனீசிய போராளியின காதல் உணர்வில் உண்மையில்லை. அது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மொழியும் தெரியாது. பேசியதே இல்லை. வெறும் சாட்டிங்லேயே ஏற்பட்டிருக்கும் நட்புக்கு எதற்கு இத்தனை முக்கியத்துவம் என்பதுதான் புரியவில்லை.  

அந்த டுனீசிய போராளி திடீரென இந்தியா வந்து செல்வது எப்படி என்று தெரியவில்லை. அதேபோல் அங்கேயிருந்தபடியே பத்து நிமிடத்தில் சென்னையில் ஒரு கொலையை செய்ய வைப்பதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..?

டுனீசிய நாட்டின் விடுதலைக்காகப் போராடும் போராளிகளை, தீவிரவாதிகளாக வசனத்தில் சொல்லியிருப்பது கடைசியில் ஏகாதிபத்தியத்துக்கு இந்தப் படத்தின் இயக்குநரே துணை போனது போலாகிவிட்டது.

முதல் பாதியில் இளம் பெண்கள் முகநூல் வழியாக ஏற்படுத்திக் கொள்ளும் முகம் தெரியாத நண்பர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பது குறித்து ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முடிவில் போராளி ஆலிம், “எங்கள் நாட்டில் எண்ணெய் வளம் இல்லாமல் இருந்திருந்தால், நானும் என் நாட்டு தலைவரும் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்.. உங்கள் நாட்டிலும் வளம் இருக்கிறது. எச்சரிக்கையாக இரு சுஷ்மிதா…” என்று சொல்லும் எச்சரிக்கைதான் இப்படம் நமக்கு சொல்லும் பிரதான செய்தி.

RATING : 3.5 / 5

Our Score